ADVERTISEMENT

கல்வி நிலையத்தில் காவிகள் படுதோல்வி!

10:02 PM Sep 13, 2017 | Anonymous (not verified)



கடந்த ஆண்டு உயர்கல்வி நிலையங்களில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியும் அதற்கு ஆதரவாக மத்திய பாஜக அரசும் நடத்திய அட்டூழியத்திற்கு அந்த கல்வி நிலையங்களின் மாணவர்களே சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க பொறுப்புகள் அனைத்தையும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் கைப்பற்றி சாதனை நிகழ்த்தியுள்ளன.

தலைவராக கீதா குமாரி 464 வாக்குகள் வித்தியாசத்திலும், துணைத்தலைவராக சிமோன் ஸோயா கான் 848 வாக்குகள் வித்தியாசத்திலும், பொதுச்செயலாளராக துக்கிரலா ஸ்ரீகிருஷ்ணா 1107 வாக்குகள் வித்தியாசத்திலும், இணைச்செயலாளராக சுபான்ஷு சிங் 835 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதுபோலவே, டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தலில் கடந்த ஆண்டு நான்கு பொறுப்புகளையும் கைப்பற்றிய ஏபிவிபி இந்த ஆண்டு, தலைவர் மற்றும் துணைத்தலைவர் பொறுப்புகளை காங்கிரசிடம் இழந்திருக்கிறது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பாரம்பரியமான பெருமை மிக்கது. இடதுசாரி சிந்தனைகளின் அடித்தளமாக கருதப்பட்ட, மிகப்பெரிய கல்வியாளர்களை உருவாக்கியது இந்தப் பல்கலைக்கழகம்.

உயர்கல்விக்கு பெருமைமிகு மையமாக உலகளாவிய அங்கீகாரம் பெற்ற இந்த பல்கலைக்கழகத்துக்கு வரலாற்றில் துடிப்பான இடம் உண்டு. ஜேஎன்யு கலாச்சாரம் என்பது கல்வி நிலையங்களில் மதிப்பு மிக்கது. சுதந்திரமான விவாதங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் புகழ்பெற்றது.

இந்த பல்கலைக்கழகத்தின் தனித்தன்மையை மாற்றி, அதைக் கைப்பற்ற மோடி அரசு கடந்த ஆண்டு அவமானகரமான பல்வேறு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது.

மாணவர்களின் சுதந்திரமான நடவடிக்கைகளை பறிக்கும் வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய துணைவேந்தரை நியமித்தது. அதைத் தொடர்ந்து வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தேசவிரோத குற்றச்சாட்டில் மாணவர்சங்கத் தலைவரான கன்னையா குமார் கைது செய்யப்பட்டார். மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க கல்லூரி வளாகத்தில் பீரங்கி நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு 83 சதவீதம் அளவுக்கு எம்பில், பிஎச்டி மாணவர் சேர்க்கை குறைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு உதவியும் குறைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களை அச்சுறுத்தி ஏபிவிபிக்கு ஆதரவாக திருப்பவே இந்த மிரட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், எல்லாவற்றையும் மீறி இடதுசாரி மாணவர்கள் அனைத்துப் பொறுப்புகளையும் கைப்பற்றியுள்ளனர்.

ஏபிவிபியை மூன்றாவது இடத்துக்கு தள்ளியிருக்க வேண்டிய வாய்ப்பு, பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஏற்படுத்தியுள்ள பிர்ஸா அம்பேத்கர் பூலே மாணவர் சங்கம் சார்பில் போட்டியிட்ட மாணவர்களும் நல்ல வாக்குகளை பெற்றுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் இடதுசாரி மாணவர்கள் தாழ்த்தப்பட்ட மாணவர் அமைப்புடன் இணக்கமாகி பல்கலைக்கழக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மார்க்ஸ், அம்பேத்கர் சிந்தனைகளுடன் காந்திய சிந்தனைகளையும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். அப்போதுதான் சாவர்க்கர்-கோல்வால்கரின் இந்துத்துவ சிந்தனையை முறியடிக்க முடியும் என்பதே உண்மை.

இதைத்தான் டெல்லி பல்கலைக்கழக தேர்தல் முடிவுகளும் எதிரொலிக்கின்றன. கடந்த ஆண்டு டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் அனைத்து பொறுப்புகளையும் கைப்பற்றிய ஏபிவிபி இந்த ஆண்டு இரண்டு முக்கிய பொறுப்புகளை பறிகொடுத்திருக்கிறது.



உயர்கல்வி நிலையங்களில் தனது காவிக்கொள்கையை திணிக்க முயன்ற பாஜக அரசு படுமோசமாக தோல்வி அடைந்திருப்பது நல்ல அறிகுறி என்றே மதசார்பற்றோர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

-ஆதனூர் சோழன்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT