Skip to main content

பதம் பார்க்க துணிந்த எடப்பாடி..! பதில் பிளான் போட்டு பாஜக அதிரடி..! 

 

ddd

 

பல வகைகளிலும் எதிர்பார்ப்புகளையும் விறுவிறுப்பையும் உருவாக்கியுள்ளது தேர்தல் களம். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. அறிவித்ததில், பா.ஜ.க., பா.ம.க. கட்சிகளுக்கு உடன்பாடில்லை என்பது தொடர்ச்சியான பேச்சுகளால் தெரியவருகிறது. ரஜினியை நம்பி நிறைவேறாததால்,  தற்போது, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்வரை தேர்வு செய்வோம் என எடப்பாடி மீதான விருப்பமின்மையை வெளிப்படுத்துகிறது பா.ஜ.க.

 

இந்த நிலையில், "ரஜினியை வைத்துத்தான் நம்மை மிரட்டிக் கொண்டிருந்தனர். அந்த தடை நீங்கிவிட்டது. அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; கூட்டணிக்கான முதல்வர் வேட்பாளரும் அ.தி.மு.க.தான் என்பதை இனி நாம் அழுத்தமாகச் சொல்லலாம்'' என அமைச்சர்களுக்கு அட்வைஸ் செய்த கையோடு, "அ.தி.மு.க.வை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி'' என வெளிப்படையாகவே சொல்லிவிட்டார் எடப்பாடி. கூட்டணி குறித்து டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழக பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனையில் விரிவாக விவாதிக்கப் பட்டுள்ளது.

 

இதுகுறித்து பா.ஜ.க.வின் மேலிட தொடர்புகளில் விசாரித்தபோது, "கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி 30 சதவீத வாக்குகளைத்தான் வாங்கியிருக்கிறது. கூட்டணிக் கட்சிகளில் வாக்குபலம் பங்கீடாகவில்லை. தற்போது, அ.தி.மு.க. கூட்டணியில் 40 அல்லது 45 தொகுதிகளில் போட்டியிட்டாலும் அதிகபட்சம் 5 சதவீத வாக்குகளைத்தான் பா.ஜ.க.வால் பெறமுடியும். பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ரஜினியை வாய்ஸ் கொடுக்க வைப்பதாலும், அண்ணாமலை போன்ற இளைஞர் ஒருவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டாலும் 10 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை நாம் பெறுவதற்கு வாய்ப்பு உண்டு என நம்புகிறோம்.

 

10 சதவீத வாக்குபலம் இருந்தால், தேர்தலுக்குப் பிறகு மற்ற கட்சியினர் பா.ஜ.க.வில் சேருவார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரின் (மோடி) ஆளுமையும் சேரும்போது 30 சதவீதத்தை நெருங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற முடியும். மேற்குவங்கத்தில் இப்படித்தான் 2014-ல் 10 சதவீதத்தை தாண்டினோம். 2019-ல் 40 சதவீதத்தை எட்டினோம். இப்போது 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றக்கூடிய சூழல் பா.ஜ.க. வுக்கு இருக்கிறது. ரஜினி அரசியலுக்கு வராத நிலையில் சர்வே எடுத்த மத்திய உளவுத்துறையும் தனித்துப் போட்டி என்கிற கான்செப்ட்டையே பா.ஜ.க. தலைமைக்கு தந்துள்ளது. இதனடிப்படையில்தான் அந்த ஆலோசனைக் கூட்டமே நடந்தது'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

 

பா.ஜ.க. தலைமையில் பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்டவைகளை இணைத்து ஒரு கூட்டணியை உருவாக்குவதன் சாதக பாதகங்கள் குறித்தும் ஆலோசித்துள்ளனர் பா.ஜ.க. தலைவர்கள்.

 

cnc

 

அரசியலுக்கு ரஜினி வராததால் கூட்டணிக் கட்சிகளைப் பதம் பார்க்க எடப்பாடி துணிந்திருப்பதில், பா.ம.க. தலைமையும் அதிருப்தி அடைந்துள்ளது. 31-ந் தேதி இணைய வழியில் கூடிய பா.ம.க.வின் சிறப்புப் பொதுக்குழுவில், கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை டாக்டர் ராமதாசிற்கு வழங்கியுள்ளது அதன்படி, எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்பது அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. அதற்கும் கூட்டணிக்கும் சம்மந்தமில்லை. கூட்டணியில் பாமக இருக்கிறதா? இல்லையா? என்பதை தேர்தல் நேரத்தில் அய்யா ராமதாஸ் அறிவிப்பார். கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுதான் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தெரிவிக்கும். ஃபிப்ரவரியில்தான் எப்படிப்பட்ட கூட்டணி அமையும்; யார், யார் எங்கிருப்பார்கள் எனத் தெரியும்'' என்கிறார் கட்சித் தலைவர் ஜி.கே.மணி, டாக்டர் ராமதாஸின் குரலாக.

 

எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என்பதை ஏற்பதில் பா.ஜ.க., பாமக தலைமைகளுக்கு உள்ள தயக்கமும் தி.மு.க.வுக்கு இணையான எண்ணிக்கையில் அ.தி.மு.க. போட்டியிட வேண்டும் என எடப்பாடி நினைப்பதால், கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் குறையும் என்பதாலும், அ.தி.மு.க கூட்டணி இன்னும் இறுதி முடிவுக்கு வரமுடியவில்லை. இறுதி செய்ய முடியாமல் தவித்து வருகிறார் எடப்பாடி!