தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவியில் இருந்து எம்.மணிகண்டன் 07.08.2019 புதன்கிழமை நீக்கப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர், கேபிள் கட்டணம் குறைப்பு பற்றி முதல்வர் தன்னிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை என்று தெரிவித்திருப்பதும், கால்நடை அமைச்சர் மற்றும் கேபிள் டி.வி.கார்ப்பரேசன் சேர்மனுமான உடுமலை ராதாகிருஷ்ணனை குற்றம் சாட்டி பேசியதும் தான் அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Advertisment

அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கடந்த ஜூலை மாதம் பதவியேற்றார். அப்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்த, மணிகண்டன், உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு பதவி கொடுப்பது பற்றி தன்னிடம் கலந்திருக்கலாம் என்று மணிகண்டன் கூறியுள்ளார். மேலும் அந்த பதவிக்கு அவரை நியமித்ததற்கு தனது எதிர்ப்பையும் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் எடப்பாடி பழனிசாமிக்கும், மணிகண்டனுக்கும் நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வந்தது.

edappadi palanisamy

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேபிள் கட்டணத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த தகவலும் தன்னிடம் முதல்வர் தெரிவிக்கவில்லை என்கிற கோபத்தில் இருந்துள்ளார் மணிகண்டன்.

Advertisment

அப்போதுதான் 07.08.2019 புதன்கிழமை பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த மணிகண்டனிடம், அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் மணிகண்டன், அது குறித்து தன்னிடம் முதலமைச்சர் எதுவும் விவாதிக்கவில்லை என்றார்.

எனக்கே தெரியவில்லை முதலமைச்சர் எதுவும் என்னிடம் பேசவில்லை. இனிமேல் பேசுவார் போல அல்லது

ஆலோசனை கூட்டம் நடைபெறும் போல என்பது போல் பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர்,உடுமலை ராதாகிருஷ்ணன் அட்சயா கேபிள் விஷன் என்கிற பெயரில் தனியாக கேபிள் நடத்தி வருகிறார். சுமார் 2 லட்சம் கனெக்சன்களையும் அவர் வைத்துள்ளார். கேபிள் டிவி சேர்மன் ஆகியுள்ள உடுமலை ராதாகிருஷ்ணன் முதலில் தனது இணைப்புகளை அரசு கேபிளுக்கு மாற்ற வேண்டும் என்று மணிகண்டன் கூறினார்.

Advertisment

கேபிள் டிவி சேர்மனாக இருக்கும் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்ற ஆப்பரேட்டர்களுக்கு முன்மாதிரியாக தனது இணைப்புகளை அரசு கேபிளுக்கு மாற்றினால் மற்ற ஆப்பரேட்டர்களும் மாறுவார்கள் என்று மணிகண்டன் தெரிவித்தார்.

உடுமலை ராதாகிருஷ்ணனின் தனிப்பட்ட தொழில்கள் குறித்து, மணிகண்டன் பொதுவெளியில் இப்படி பேசியதுதான் பதவி நீக்கத்திற்கு காரணம் என்று சொல்லுகிறார்கள்.

மேலும், தனது சொந்த தொகுதிக்கே செல்ல முடியவில்லை. அதற்கு காரணம் மணிகண்டன்தான் என்று திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் பலமுறை குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக முதலமைச்சரிடம் புகார் தெரிவித்திருப்பதாகவும் கூறியிருந்தார். கருணாஸ் தனி அமைப்பு என்றாலும், அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்றவர் என்பதால் அவரை அனுசரித்து செல்லும்படி கூறியும், மணிகண்டன் அதனை கேட்கவில்லை என்ற கோபமும் எடப்பாடி பழனிசாமிக்கு இருந்துள்ளது என்கிறார்கள் அதிமுகவினர்.

மணிகண்டனை திடீரென அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதால் ஜூனியர் அமைச்சர்கள் பதட்டத்தில் இருக்கின்றனர். கட்சியையும் ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க எடப்பாடி பழனிசாமி இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க தொடங்கிவிட்டார் என்றும், கட்சியிலும் ஆட்சியிலும் தனது கை ஓங்குவதற்கு இதுபோன்ற நடவடிக்கைகளால்தான் முடியும் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.