Skip to main content

60 கிராம மக்களின் வாழ்வாதாரமான வெலிங்டன் ஏரியை கண்டு கொள்வாரா எடப்பாடி!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020
w

 

கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் தமிழகம் வரலாறு காணாத வறட்சியை சந்தித்து வருகிறது. அதிலும் கடந்த ஆண்டு மிக மிக கடுமையான வரட்சி. குடிநீருக்கே மக்கள் பட்ட கஷ்டங்கள் ஏராளம் ஏராளம். தினசரி குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் போராட்டங்கள், மறியல்கள் என நடத்தினார்கள். தமிழகமே நாவறண்டு  துடித்தது.  சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையும் கூட வடக்கு மேற்கு மாவட்டங்களில் அரைகுறையாக பெய்துள்ளது.  வரும் வெயில் காலத்தில் கடந்தாண்டை போல இந்த மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.  இதை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது.

 

மேலும் 27 மாவட்டங்களில் தடுப்பணைகள் கட்ட முதல்வர் எடப்பாடி தற்போது உத்தரவிட்டுள்ளார். இது ஒரு பக்கம்.  கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது வெலிங்டன் ஏரி.  இந்த ஏரி 24000 ஏக்கர் பாசன வசதி கொண்டது. இதன் மூலம் சுமார் 60 கிராமங்களில் உள்ள விவசாயிகள் பொதுமக்கள் பயன் பெற்று வந்தனர்.

 

w

 

கடந்த சில ஆண்டுகளாகவே  மழை இல்லாமல் இந்த ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. ஏற்கனவே இந்த ஏரியின் கரை சீர் கெட்டு கிடக்கிறது. அதிலும் கடந்த ஆண்டு குறைவான மழை பெய்ததன் விளைவாக ஏரியின் முழு கொள்ளளவு 28 அடி அவ்வளவு நீர் பிடிக்கும் அளவிற்கு மழையும் இல்லை.  நீர் வரத்தும் இல்லை.  குறைவான மழையின் காரணமாக சுமார் 15 அடி தண்ணீர் மட்டுமே நிரம்பியது.  தற்போது இந்த தண்ணீரை பாசன வாய்க்கால்களில் கடந்த ஒன்பதாம் தேதி மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் திறந்து விட்டுள்ளார்.  இந்த தண்ணீரை கொண்டு விவசாயிகள் பாசனம் செய்வதற்கு பயன்படாது.  இந்த வாய்க்கால் மூலம் செல்லும் தண்ணீர் கிராமங்களில் உள்ள துணை ஏரிகளில் நிரம்பி அந்தந்த கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வாய்ப்பு இருந்தது. மேலும் ஆடு மாடுகள் குடிக்க, குளிக்க பயன்படும் என்ற அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

 

 இந்த தண்ணீர் சுமார் 25 நாட்கள் வரை அனைத்து வாய்க்கால்களிலும் செல்ல வேண்டும். ஆனால் பல வாய்க்கால்களில் செடியும் சீமைக் கருவேல மரங்களும் அதோடு பிளாஸ்டிக் கழிவுகளும் நிரம்பி வழி மறித்து கிடைப்பதால் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைசி வரை சென்று சேரவே இல்லை.  உதாரணத்திற்கு திட்டக்குடி - கருவேப்பிலங்குறிச்சி சாலையோரம் செல்லும் பிரதான வாய்க்கால் மற்றும் ஆவினங்குடி அருகே நெய்வாசல் திருவட்டத்துறை கூடலூர் வரை செல்லும் கிளை வாய்க்காலில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் சுமார் 200 மீட்டர் தூரம் கூட செல்லவில்லை. அந்த அளவிற்கு வாய்க்கால் இருந்தும் செடி கொடிகளாலும் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி கிடக்கிறது. 

 

 இப்படி பல இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் குறுக்கே மக்கள் தற்காலிகமாக நடந்து செல்ல போடப்பட்ட தடுப்பு அணைகள் என வாய்க்காலின் கடைமடை வரை தண்ணீர் சென்று சேராமல் ஆங்காங்கே குறுக்கே தடுக்கப்பட்டு தேங்கி நிற்கின்றன. தண்ணீர் திறப்பதற்கு முன் இந்த வாய்க்கால்களை சுத்தம் செய்து விட்டு தண்ணீரை திறந்து விட்டிருக்க வேண்டும்.  பொதுப்பணித்துறை அதிகாரிகள்  அலட்சியமாக இருந்ததன் விளைவு இப்போது திறந்து விடப்பட்ட தண்ணீர் பாசனத்திற்கும் பயன்படாமல் நிலத்தடி நீர் மட்டம் உயரவும் வகையில்லாமல்  கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது என்பதுபோல  வெலிங்டன் ஏரி தண்ணீர் பயனில்லாமல் விரயமாகி வருகிறது. இதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை.

 

 பிரிட்டன் ஏரிக்கு தண்ணீர் வரும் பிரதான வாய்க்கால் தொழுதூர் அணைக்கட்டு பகுதியில் உள்ளது. இங்கு பல கோடிகளை ஒதுக்கி செலவு செய்துள்ளனர். அதேபோல் சரிந்து வரும் ஏரிக்கரையை சரி செய்வதாக கூறி அவ்வப்போது பல கோடிகளை ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கிறார்கள். ஆனால் முறையாக சரியாக இந்த சரிந்த ஏறி கரையையும் அதன் பாசன வாய்க்கால்களையும் அதன் துணை ஏரிகளையும் சுத்தம் செய்து பராமரிப்பு பணிகளை முறையாக அரசும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் செய்யவில்லை என வேதனையோடு கூறுகிறார் விவசாயி ராஜேந்திரன்.

 

v

 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்கிறார்.  ஏரி, குளங்களை தூர்வாரி செப்பனிடுவதற்காக குடிமராமத்து பணி என்ற பெயரில் பல ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. பல்வேறு ஆறுகளில், ஓடைகளில் தடுப்பணைகள் கட்டப்படுகிறது. விரைவில் 27 மாவட்டங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி தற்போது அறிவித்துள்ளார்.  ஆனால் 60 கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வரும் வெலிங்டன் ஏரிக்கு நிரந்தரமாக நீர்வரத்துக்கு வழிவகை செய்து, ஏரிக்கரையை சீர்செய்து தூர்ந்து கிடக்கும் ஏரியை தூர் வாரி விவசாயிகள் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள் .

 

Next Story

'தேர்தல் அறிக்கை சர்ச்சை'- வீடியோ வெளியிட்ட இபிஎஸ்

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
'AIADMK election manifesto is a reflection of needs'- EPS released the video

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. அதிமுக தேர்தல் அறிக்கையில் சிறப்பு அம்சங்களாக ஆளுநர் பதவி நியமனத்திற்கு கருத்து கேட்க வேண்டும்; நீட் தேர்வுக்கு மாற்றாக மாற்றுத் தேர்வு முறை கொண்டு கொண்டு வரப்படும்; பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமை தொகை; சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்; முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்; சமையல் எரிவாயு விலை கட்டுப்படுத்தப்படும்; சீம கருவேல மரங்கள் அகற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; தமிழகத்தில் புதிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்படும் என்பவை இடம்பெற்றுள்ளது.

இதில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு திமுகவை பின் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அறிவிப்பா? என எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'இதில் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தி பெற இருப்பது. மத்திய அரசும் மாதம் தோறும் மகளிருக்கு உரிமை தொகை  வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்' எனத் தெரிவித்தார்.

NN

திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து அதிமுக கொடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை வைத்திருந்தார். இந்நிலையில் எக்ஸ் வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், 'அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே! உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அஇஅதிமுக தேர்தல்அறிக்கை. வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன். நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம்' என தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

Next Story

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம்; தேர்தல் ஆணையத்தை நாடிய வழக்கறிஞர்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
A.D.M.K. internal party matter A lawyer approached the Election Commission

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகத் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்ப மனுவையும் சமர்ப்பித்துள்ள நிலையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நேர்காணலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆவணங்களில் கையெழுத்திட எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போல கட்சியின் ஆவணங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட அதிகாரம் அளிக்க வேண்டும். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை கருத்தில் கொண்டு அவைத் தலைவருக்கு அதிகாரம் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.