Advertisment

எடப்பாடியின் சொந்த மாவட்டத்தில் நடக்கும் கொடுமை... கொந்தளிப்பில் மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்!

முதல்வரின் மாவட்டத்திலிருந்து இன்னொரு குமுறல் இது. சேலம், நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு நம்பிக்கை முகமாக விளங்கும் சேலம் ஆவின் நிர்வாகம், ஏரியா மக்களின் பலத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறது. சேலத்தை அடுத்த தளவாய்ப் பட்டியில், 1984-ஆம் ஆண்டு முதல் ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது. இது 54 ஏக்கர் பரப்பளவு கொண்டது நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது. ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் வணிகம் செய்யும் நிறுவனமாகவும் இது வளர்ந்திருக்கிறது. எனினும் பால் பண்ணைக்கு நிலம் கொடுத்த தளவாய்ப்பட்டி கிராம மக்களை அது வஞ்சிப்பதாக அம்மக்கள் புகார் வாசிக்கின்றனர்.

Advertisment

admk

இது குறித்து சூழலியல் ஆர்வலர் சிவராமன் நம்மிடம் விரிவாகப் பேசினார்.’"ஆவினில் பால் பதனிடுதல், பால் பொருள்கள் தயாரித்தல், பால் கேன்கள், டேங்கர் லாரிகளை சுத்தம் செய்தல், பாய்லர் கிளீனிங் என தினமும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பயன்படுத்தப்பட்ட தண்ணீரை, பண்ணைக்குள்ளேயே திறந்த வெளியில் தேக்கி வைக்கின்றனர். இது சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு கழிவு நீராக வெளியேறுகிறது. இதன் பாதிப்பால் தளவாய்ப்பட்டி ரொட்டிக்காரன் வட்டம் என்ற கிராமத்தில் நிலத்தடி நீரில் அது கலந்துவிட்டது. அதனால் அங்கே எங்கே தோண்டினாலும் கழிவு நீர் ஊற்று நீர் போல் வந்துவிடும். அங்கே சண்முகம் என்பவர் வீட்டுக்குள் சிமெண்ட் தரையை உடைத்துக்கொண்டு 24 மணி நேரமும் நீரூற்றாக வெளியேறுகிறது. இதனால் கடந்த 35 ஆண்டுகளாக கழிவுநீரோடு போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு காலத்தில், இந்த ஆவின் கூட்டுறவு நிறுவனத்தில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இயக்குநராக தன் அரசியல் வாழ்வின் பொறுப்பைத் தொடங்கினார். ஆனால் முதல்வர் தனிப்பிரிவு, கலெக்டர், ஆவின் நிர்வாகம் என பலரிடமும் புகார் அளித்தும் இதுவரை எங்கள் பிரச்சினை தீர்ந்தபாடில்லை'' என்றார் வருத்தமாக.

Advertisment

village

ரொட்டிக்காரன் வட்டத்தில் சண்முகம் (40) என்பவரின் வீட்டை நேரில் பார்த்தோம். சுமார் 500 சதுரஅடி பரப்பு கொண்ட அந்த வீடு முழுக்கவே தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. எந்நேரமும் தண்ணீரில் நடந்து நடந்து சண்முகம், அவருடைய பெற்றோர் ஆகியோரின் கால் பாதங்கள், விரல்கள் சேற்றுப் புண்ணால் அழுகிப்போகும் நிலையில் இருந்தன. அவரின் தந்தையோ சமையல் அறைக்குள் தேங்கிய ஊற்றுநீரை பிளாஸ்டிக் முறத்தில் அள்ளி அள்ளி வெளியே ஊற்றிக் கொண்டிருந்தார்.

"கடந்த 35 ஆண்டுகளாக இந்த நரக வாழ்க்கையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்''’என்றார் சண்முகம் கலக்கமாக. இங்குள்ள 14 பேரின் வீடுகளிலும் இந்த கழிவு நீர் நீரூற்று பெருகி ஓடிக்கொண்டிருந்தது.

அதே ஊரைச் சேர்ந்த விவசாயிகள் தங்கராஜ், நாராயணன், மாரியம்மாள் ஆகியோர், ''எங்கள் வயல்களில் பயிர்கள் மூழ்கிக் கிடக்கின்றன. கால்நடைகளுக்கு சோளத்தட்டு பயிரிட்டும் கூட, அதை அறுவடை செய்ய முடியாத நிலையில், காசுக்கு வாங்கி வந்து போடும் நிலையில் இருக்கிறோம். முதல்வர் எடப்பாடி ஒருமுறையாவது இங்கு வந்து எங்கள் நிலையைப் பார்க்கவேண்டும்,'' என்றார்கள் பரிதாபமாக.

Seshan

இதற்கிடையே ஆவினின் கழிவுநீரை, தளவாய்ப்பட்டி ஏரிக்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை ஆவின் மேற்கொண்டது. ஆனால் விவசாயிகள் சிலர், ஏரியில் கழிவுநீரை தேக்கினால் அந்தப் பகுதியிலும் நிலத்தடி நீர் மாசுபடும் என்று போர்க்கொடி தூக்கினர்.

இப்பகுதி மக்களின் குமுறல்களை விளக்கி, இப்பகுதியில் இருக்கும் 33 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என ஆவின் பொது மேலாளர் விஜய்பாபுவிடம் கோரிக்கையை நாம் வைத்தோம். எல்லாவற்றையும் நிதானமாக கேட்டுக் கொண்டார் விஜய்பாபு.

உடனே அவர் ரொட்டிக் காரன் வட்டம் முழுவதும் நேரில் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய விஜய் பாபு... "ஆவினில் தேக்கி வைக்கப்படுவது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்தான். அது கழிவு நீர் அல்ல. ஆவினுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பட்டா வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான செலவையும் ஆவின் நிர்வாகமே ஏற்றுக்கொள்ள ஆனதைச் செய்கிறோம். பசுமை வீடுகள் கட்டித்தரப்படும், தளவாய்ப்பட்டி மக்களை அழைத்து விரைவில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்படும்'' என்றார்.

இது தொடர்பாக நாம் தனியார் நில அமைப்பியல் வல்லுநர் ஒருவரை சந்தித்து விளக்கம் கேட்டோம். அவரோ, ""பொதுவாகவே எந்த ஓரிடத்திலும் நீண்ட காலத்திற்கு தண்ணீரை தேக்கி வைத்தால், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விடும். அதுவும் ஆவின் கழிவுநீர் மழைநீருடன் சேர்ந்து வெளி யேறும்போது நேரடியாக புவியின் மேற்பரப்பில் உள்ள நீரையும், போர்வெல் நீரையும் கண்டிப்பாக அது மாசுபடுத்தும். பூமிக்கடியில் நீரால் சூழப்பட்ட பகுதியை "அக்யூஃபர்' எனக் கூறுவோம். அந்தப் பகுதியில் ஆவின் கழிவுநீர் கலந்துவிட்டால் அதன் பாதிப்பு ஒரு கி.மீ., தூரத்திற்குக் கூட இருக்கும். ஆயிரம் அடி ஆழத்திற்கு அப்பாலும் நீரை மாசுபடுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. சேலம் ஆவினில் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படுகிறதா என்பதை மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்,'' என்றார் அக்கறையோடு. தனது மாவட்டத்திலேயே இப்படிப்பட்ட பாதுகாப்பற்ற தீவுகள் இருப்பதை முதல்வர் எடப்பாடி அறிவாரா? அங்கு வசிக்கும் அப்பாவி மக்களை துயரங்களில் இருந்து அவர் மீட்பாரா?

Ayodhya

aavin admk eps politics Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe