Advertisment

எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்... சசிகலா தரிசனம்! - தேர்தல் சடுகுடு!

ddd

Advertisment

அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார் என்பதை உளவுத்துறை மூலம் கண்காணித்தே வருகிறது எடப்பாடி பழனிசாமி அரசு.

மார்ச் 17ஆம் தேதி மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு தஞ்சாவூருக்கு வந்தார் சசிகலா. தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள நடராஜனின் வீட்டில் தங்கியவர், 18ஆம் தேதி காலை தனது கணவர் நடராஜனின் சொந்த ஊரான விளாருக்குச் சென்றார். அங்கு நடராஜனின் சகோதரர் பழனிவேலுவின் பேரக்குழந்தைகளுக்கு, குலதெய்வ கோயிலான வீரனார் கோயிலில் காதுகுத்து விழாவை தலைமை ஏற்று நடத்திவைத்தார்.

சிறையிருப்புக்குப் பிறகு அவர் கலந்துகொண்ட உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சி என்பதால் தன்னுடைய உறவினர்களோடு சிறிதுநேரம் மனம்விட்டு பேசியிருந்திருக்கிறார். வழக்கத்தைவிட அவருடைய பேச்சு கலகலப்பாக இருந்துள்ளது. ஆனால், உடல் சோர்வும் மனச்சோர்வும் இருந்ததால், ஜெ. போலவே ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்று புத்துணர்வு பெற நினைத்திருக்கிறார் சசி. அதேநாளில், டெல்டா மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்வது தெரியவந்ததும், சசியின் தரிசன ப்ளான், ரூட் மாறியது.

Advertisment

ddd

திருவிடைமருதூர் மகாலிங்கம்சுவாமி கோயிலுக்குச்செல்வதாக உறவினர்களிடம் கூறிவிட்டு புறப்பட்டார். கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் 27 நட்சத்திர லிங்கங்களுக்கு சன்னதி கொண்ட தலமாகவும், பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலமாகவும் விளங்கிவருகிறது. அந்தக் கோயிலுக்கு சசிகலா பகல் 11 மணிக்கு வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் வரவேற்பளித்தனர். விநாயகரை வழிபட்டுவிட்டு பின்னர் கோயிலுக்குள் வந்த சசிகலா 27 நட்சத்திர லிங்க சன்னதிக்குள் சென்று ரேவதி நட்சத்திர லிங்கத்துக்கு சிறப்பு ஹோமத்துடன் பூஜை செய்து வழிபட்டார்.

தொடர்ந்து மகாலிங்கசுவாமி, சுந்தர குஜாம்பாள், மூகாம்பிகை அம்பாள் சன்னதிக்கு சென்று வழிபட்டார். சுமார் 1 மணி நேரம் அமைதியாக சாமி தரிசனம் செய்துவிட்டு கோயிலுக்கு வெளியே வந்தவர்,அப்போது அங்கு நின்றிருந்த பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்களையும் குடைகளையும் தானமாக வழங்கினார். அவரிடம் செய்தியாளர்கள் பேட்டியெடுக்க முயன்றபோது, "நான் அரசியலுக்காக வரவில்லை, கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய மட்டுமே வந்தேன்'' என கூறிவிட்டு காரில் ஏறிச் சென்றுவிட்டார்.

டெல்டா மாவட்டத்தில் சசிகலா மேற்கொண்ட சாமி தரிசனம் பற்றி எடப்பாடி பழனிசாமிக்கும் உளவுத்துறை மூலமாக ரிப்போர்ட் போயுள்ளது. அதன்பிறகு, சசிகலா ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்றார். அங்கு 15 நிமிடம் மனம் உருகி வேண்டியுள்ளார். சசிகலாவோடு டாக்டர் வெங்கடேசன் மற்றும் அவருடைய நண்பர் ரமணி, மனைவி மற்றும் அகஸ்தியர் கோவில் ஆஸ்தான அய்யர் தேவாதி உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர்.

ஸ்ரீரங்கம் கோவில் தரிசனத்திற்குப் பிறகு, சசிகலா அங்கிருந்து புறப்படத் தயாரான நிலையில், அ.ம.மு.க. ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார். அவரைத் தொடர்ந்து ஒரத்தநாடு அ.ம.மு.க. வேட்பாளர் சேகர் உள்ளிட்ட ஒரு சில வேட்பாளர்கள் சசிகலாவை நேரில் சந்தித்துள்ளனர். திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் பலர் சசிகலாவை சந்திக்க ஆர்வம் காட்டியபோதும், 'இப்போதைக்கு வெளிப்படையாக வேண்டாம்' என சசிகலா தரப்பிலிருந்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னைக்குப் புறப்பட்ட சசிகலாவுக்கு திருச்சி சமயபுரம் டோல் பிளாசா பகுதியில் அவருடைய ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன், சமயபுரம் மாரியம்மன் உருவப்படத்தை பரிசாகக் கொடுத்தனர். காரை விட்டு இறங்காமல் அவர்களுடைய மரியாதையைப் பெற்றுக்கொண்டு சென்னை நோக்கிச் சென்றார் சசிகலா.

இதுகுறித்து டெல்டா மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகளிடம் விசாரித்தோம். "இது தேர்தல் நேர சடுகுடு ஆட்டம். சசிகலா அரசியலில் இருந்து முழுமையாக விலகிடவில்லை, நிச்சயமாக வருவார், வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான துரோக கூட்டம் வீழ்ந்ததும், தாயில்லா பிள்ளைகளாக அ.தி.மு.கவினர் சின்னம்மாவைத் தேடி வருவார்கள், அதற்கான நேரத்திற்காக சசிகலா காத்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி தஞ்சை, திருவாரூர், நாகையில் பிரச்சாரம் செய்ததையறிந்தே, தனது கோவில் தரிசன ட்ரிப்பை அதற்கேற்றபடி சசிகலா அமைத்துக்கொண்டார். டெல்டாவில் சசிகலா வலம் வந்தது ஒருவகை அரசியல் நடவடிக்கைதான். நடராஜனின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி சிலர் சசிகலாவை சந்தித்துள்ளனர். அதில் அ.ம.மு.க.வினரும் பிற கட்சி அரசியல் பிரபலங்களும் உண்டு. எல்லாவற்றையும் உள்ளடக்கிய அரசியல் மூவ்களை மேற்கொண்டு வருகிறார் சசிகலா'' என்கின்றனர்.

tn assembly election Edappadi Palanisamy sasikala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe