Skip to main content

இந்தியாவின் நீரோ மன்னர்கள்!

Published on 24/05/2018 | Edited on 25/05/2018

'ரோம் நகரம் எரிந்துகொண்டிருக்கும் போது, நீரோ மன்னன் வயலின் வாசித்துக்கொண்டிருந்தான்' என்ற மேற்கோள் அனைவரும்  அறிந்ததே. இதற்கு என்ன பொருள், பேரரசராகிய நீரோ மன்னனின் ஆட்சியில் இருந்த ரோம் நகரம் எரிந்து கொண்டிருக்கையில், அதை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளாமல் வயலின் வாசித்துக் கொண்டிருந்திருக்கிறார். இது தான் இங்கு குற்றச்சாட்டு, ஒரு நாட்டின் அரசன், பேரரசன் யாராக இருந்தாலும் தன் நாடு, தன் நாட்டு மக்கள் என்று யோசிப்பார்கள், யோசிக்க வேண்டும். ஆனால், இவரோ அது யாருடையதோ என்ற ரீதியில் வயலின் வாசித்துக்கொண்டிருந்திருக்கிறார். இவரை நம்பி இருந்த மக்களின் கதி, இவர் பொறுப்பில் இருந்த நாட்டின் கதி  என்ன ?
 

eps as nero

 

 

 

இது ஒரு வரலாறு. உண்மைத்தன்மை எவ்வளவு இருக்கும் என்பது வரலாற்றை பதிவு செய்தவர்களுக்குத்தான் வெளிச்சம். வரலாற்றை விட்டு நிகழ்காலத்திற்கு வருவோம், அதே போல ரோம் நகரத்தை விட்டு தமிழ்நாட்டுக்கு வருவோம். என்ன நடக்கிறது என்று பாருங்கள், மேலே சொல்லப்பட்ட மேற்கோள்தான் நடந்து கொண்டிருக்கிறது. நீரோ மன்னன் காலத்திலாவது அது மன்னராட்சி, அவர் வைத்ததுதான் சட்டம். மன்னராட்சி என்ற ஒன்றில் கண்டிப்பாக பொதுமக்கள் இரண்டாம் பட்சம்தான். ஆனால், தற்போது உலகத்தில் பெரும்பாலான இடங்களில் ஆட்சிமுறையாக இருப்பது ஜனநாயக முறைதான். அதிலும் இந்தியாவில் ஜனநாயக முறைதான் பின்பற்றுகின்றனர் என்று சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து எல்லாவற்றிலும் சொல்கின்றனர், நாமும் நம்புகிறோம். கர்நாடக தேர்தலின் முடிவை அடுத்து பாஜகவும், காங்கிரசும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி, "இது ஒரு ஜனநாயகக் கேடு" என்று குறை கூறி வந்தனர்.
 

 

nero


ரோமில் ஏற்பட்ட அந்த கடும் தீ விபத்திற்கு காரணம் நீரோ மன்னன்தான் என்றும் கூட சிலர் சொல்கின்றனர். காரணம், நாட்டை எரித்துவிட்டு புதுமையான நகரத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தார். அது பலனளிக்கவில்லை என்று தெரிந்ததும், சோகத்தைப் போக்க வயலினை வாசித்துக்கொண்டிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதே போலத்தான் கலவரத்தை கட்டுப்படுத்துகிறேன் என்று இங்கு துப்பாக்கிச் சூடு நடத்தி கலவரத்தை நீடிக்க வைத்திருக்கிறது அரசு. அந்த சோகத்தைப் போக்க பத்து லட்சம் நிவாரணம் என்றது. மேலும் மேலும் இது கார்ப்பரேட்களுக்கான அரசு என்று மத்திய அரசும் மாநில அரசும் போட்டி போட்டு உரைத்து வருகின்றனர். வடக்கு முனையில் காஷ்மீர் கலவர பூமியானது போல, தெற்கு முனையில் தமிழ்நாடும் மாற்றப்பட்டுவிடுமோ என்ற கவலை வரத்தொடங்கிவிட்டது. இது மன்னராட்சி இல்லை, மக்களாட்சி என்பதை புரிந்துகொள்ளுங்கள். மக்களுக்கு கேடுவிளைவித்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி என்ன பயன்? நீரோ மன்னனும் இவ்வாறு தங்க அரண்மனை கட்டுகிறேன் என்று மக்களின் வரிப்பணத்தின் மீது கைவைத்தார். கடைசியில், அவரே காணாமல் போனார். நமக்கு மாநிலத்திலும் சரி மத்தியிலும் சரி  இருவரும் நீரோ மன்னர்கள்தான். 
 

 

 

அமைதியாக நடந்த போராட்டத்தை, கலவரமாக மாற்றிவிட்டனர். தூத்துக்குடியிலிருந்து வரும் வீடியோக்களைப் பார்த்தால், காவலர்கள் நாஜிப்படைகள் போல வீதிகளில் நடைபோடுகின்றனர்.மக்களை லத்தியைக்கொண்டு அடிக்கின்றனர். இதுவரை 12 பேர் காவுகொடுக்கப்பட்டுள்ளனர். தற்போது கருப்பு உடை அணிந்த கமாண்டோ படைகள், வஜ்ராயுத வாகனம் எல்லாம் தூத்துக்குடியில் சூழ்ந்திருக்கிறது, பதற்றத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர, இந்த ஆயுதப் படைகள் எதற்கு? இந்த அரசு, தயக்கமே இல்லாமல் மக்களைத்தான் காரணம் சொல்கிறது. 
 

shoot out

 

நேற்று தமிழக அமைச்சர்கள் நட்சத்திர ஹோட்டலில் பூப்புனித நீராட்டுவிழாவில் கலந்து கொண்டனர். இன்று இந்திய பிரதமர் விராட் கோலியிடம் ஃபிட்னெஸ் சவால் விட்டு விளையாடுகிறார். முதலாளி அனில் அகர்வால் ( ஸ்டெர்லைட்டுக்குதான்) நடந்ததற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிடுகிறார். முதல்வர், சாவகாசமாக இன்று மதியம் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து, "இவ்வளவு நடந்தது எங்களுக்கு தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரியும்" என்கிறார். வரும்காலம் இதை மேற்கோளாகக் காட்டும். 

 

 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ - பைக் டாக்சிகளுக்கு தடை!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
ban on bike taxis in karnataka

வாடகை கார், பைக் டாக்சி போன்ற வாகனங்கள் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வேகமாகவும், பயணக் கட்டணம் குறைவாகவும் கொடுத்துச் செல்கின்றனர். அந்த வகையில், கர்நாடகா மாநிலம் பெங்களூர் நகரில் ஊஃபர், ரேபிடோ போன்ற சில நிறுவனங்கள் பைக் டாக்சி சேவைக்கு கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு அனுமதி வழங்கியது.

இதற்கு ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த அனுமதியால் தங்களின் வருவாய் பாதிக்கப்படுவதாகக் கூறி போராட்டங்கள் நடத்தினர். ஆனால், அன்றைய அரசு தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, பைக் டாக்சிகளில் இரவில் செல்லும் பெண்களுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுப்பதாகப் பல புகார்கள் எழுந்தன. அந்த வகையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு பெங்களூர் பகுதியில் பைக் டாக்சியில் சென்ற பெண், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. 

இந்த நிலையில், இந்த மின்சார பைக் டாக்சி திட்டத்துக்கு கர்நாடகா அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து கர்நாடகா அரசின் போக்குவரத்து துணை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த மின்சார பைக் டாக்சி திட்டம், மோட்டார் வாகன சட்டத்தை மீறுகிறது. இதனால், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்படுகிறது. மேலும், இந்த இருசக்கர மின்சார வாகனங்களால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. வாகன நம்பர் பிளேட் இல்லாத மின்சார வாகனங்களால், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால், கர்நாடகாவில் இந்த மின்சார பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.