Skip to main content

முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு; என்ன செய்திருக்கிறார்கள் இந்த ஐவர்..?

 

 

economic advisory team in tn govt

 

16- வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நேற்று (21/06/2021) காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. தமிழக ஆளுநர் உரையில் பொருளாதார ஆலோசனை குழு உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. 

 

அதில், தமிழக முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு அமைப்பது குறித்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியது. நோபல் பரிசுப் பெற்ற எஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், நாராயண், பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரீஸ் உள்ளிட்ட ஐந்து பேர் இந்த பொருளாதார ஆலோசனை குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் மூன்று பேர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் பின்னணி குறித்து இத்தொகுப்பில் பார்ப்போம்.

 

ரகுராம் ராஜன்:

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரகுராம் ராஜன். இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் என்ற மிகப்பெரிய பதவியில் இருந்தவர். கடந்த 2008- 2009 ஆம் ஆண்டில் அமெரிக்கப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்திக்கும் என முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை மணியை அடித்தவர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மை ஆலோசகராக இருந்தவர். மத்திய பா.ஜ.க. அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியவர். பண மதிப்பு நீக்கம், சரியான முறையில் அமல்படுத்தப்படாத ஜி.எஸ்.டி. போன்றவை பொருளாதாரத்தின் வேகத்தைக் குறைத்து விட்டதாக மத்திய அரசைச் சாடியவர்.

 

அரவிந்த் சுப்ரமணியன்: 

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அரவிந்த் சுப்ரமணியன் உலக வங்கியில் முக்கிய பதவிகளை அலங்கரித்தவர். பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசகர் குழுவில் 2014- ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் இடம் பதவி வகித்தார். பண மதிப்பு நீக்கத்தின் போது தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தார். இவரது பதவிக்காலத்தை நீட்டிக்க மத்திய அரசு முன் வந்த போதும், அதை மறுத்துவிட்டு அமெரிக்கா சென்றார். அங்கிருந்து இந்தியா திரும்பிய பின் ஹரியானா மாநிலத்தில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் அவர் பேராசிரியராகப் பணியாற்றினார். 

 

எஸ்தர் டஃப்லோ: 

பிரான்ஸ் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் எஸ்தர் டஃப்லோ. இவர் அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியராக உள்ளார். வறுமை ஒழிப்பு குறித்து இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் ஆய்வுகளை நடத்தியுள்ளார். 2019- ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை கணவர் அபிஜித் பானர்ஜியுடன் இணைந்து பெற்றுள்ளார். ஏழை, எளியோரின் வறுமையைப் போக்குவதற்கான ஆய்வுகளை முன்னிலைப்படுத்தியவர். 2013- ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கீழ் செயல்பட்ட உலகளாவிய பொருளாதார ஆணையத்தின் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். 

 

ஜீன் ட்ரீஸ்:

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரீஸ். இவர் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தைக் கொண்டு கிராமப் புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியவர். இவர் சமூக செயற்பாட்டாளரும் கூட. ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை முன்னெடுத்தவர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில், பொருளாதார ஆய்வுக் குழு உறுப்பினராக இருந்துள்ளார். கல்வி, வேலை வாய்ப்பு, குழந்தைப் பராமரிப்பு போன்ற சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

 

எஸ்.நாராயண்:

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்.நாராயண் சென்னையைச் சேர்ந்தவர். இவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். 1965- ஆம் ஆண்டு முதல் 2004- ஆம் ஆண்டு வரை மாநில அளவிலும், மத்திய அரசிலும் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர். நிதி, தொழில்,  வர்த்தகம், கப்பல் போக்குவரத்து, எரிபொருள், விவசாயம், சாலை வசதி எனப் பல துறைகளில் தலைமை வகித்தவர். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆலோசகராகவும் இருந்துள்ளார். அதேபோல், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் நிதிச் செயலாளராக இருந்துள்ளார். பணி ஓய்வுபெற்ற பிறகும், பல தொழில் நிறுவனங்களுக்கு இன்றும் ஆலோசகராக இருந்து வருகிறார். 

 


 

இதை படிக்காம போயிடாதீங்க !