Advertisment

துரை வைகோவுக்கு கட்சிப் பொறுப்பு! -மறுமலர்ச்சியினர் தீர்மானம்!  

வாரிசு அரசியலை அறவே வெறுத்து வருபவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அதனால், தன் குடும்பத்தினர் யாரையும் கட்சிப் பணியில் ஈடுபடுத்துவதில்லை. ஆனாலும், சில மாதங்களுக்கு முன் வேறு கோணத்தில், பா.ஜ.க. தலைவர் தமிழிசை ’வாரிசு அரசியல் எதிர்ப்பு நாடகம் அன்று.. அரசியல் வாரிசுகளுக்கு வெண்சாமரம் வீச்சு இன்று..’ என ட்விட்டரில், திமுக ஆதரவு நிலை எடுத்த வைகோவை சீண்டினார்.

Advertisment

மதிமுகவில் துரை வையாபுரியின் பெயரில் வாட்ஸ்-ஆப் குழு ஒன்று உருவானதைத் தொடர்ந்து, மதிமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பிலோ, துணை பொதுச்செயலாளர் பொறுப்பிலோ அவர் நியமிக்கப்படலாம் என்று தகவல் பரவியது.

Advertisment

mdmk

அந்தத் தகவல் செய்தியாக வெளிவர, ஆவேசமான வைகோ “எத்தனையோ ஈட்டிகள் பாய்ந்து என் இதயம் மரத்துப் போய்விட்டது. இனிமேலும் காயப்படுவதற்கு என்ன இருக்கிறது?” என்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது “இந்த இயக்கத்தில் மற்றவர்கள் பதவிக்கு வர வேண்டும் என்று விரும்புபவன் நான். அமைச்சர்களாக்கி மகிழ்ந்தவன் நான். மற்றவர்களை எம்.பி.க்கள் ஆக்கியவன் நான். தடா சட்டத்தின்கீழ், சிறையில் ஓராண்டு காலம் கைவிலங்கு பூட்டப்பட்டுக் கிடந்த என் தம்பி ரவிச்சந்திரனுக்குக் கட்சியில் நான் எந்தப் பதவியும் கொடுக்கவில்லை. எல்லா வகையிலும் எனக்கு பக்கபலமாக இருக்கிறார் என் மகன். அவரை நான் அரசியலுக்குக் கொண்டு வரவில்லை. பதவி அரசியலை அவர் விரும்பியதில்லை. நானும் விரும்பவில்லை. எல்லோரையும் போலத்தான், அவரும் வாட்ஸ்-ஆப்பில் தன் நண்பர்கள் குழுவில் இருக்கிறார். அதை வைத்து, அடுத்த கட்ட வாரிசு என்றெல்லாம் எழுதுவது வேதனையாக இருக்கிறது. அந்த எண்ணம் எங்கள் குடும்பத்தில் எவருக்கும் இல்லை. எல்லாத் துன்பங்களும், துயரங்களும் என்னோடு போகட்டும். இந்த இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்வதற்கு எத்தனையோ இளைஞர்கள், ஆற்றல் உள்ளவர்கள் இயக்கத்திற்காகப் பாடுபட்டவர்கள் இருக்கிறார்கள்.” குமுறலை வெளிப்படுத்தினார்.

mdmk

பொதுச்செயலாளர் வைகோ மனநிலை இப்படியிருக்கும்போது, கடந்த 28-ஆம் தேதி, ராஜபாளையம் மேற்கு ஒன்றியம் சார்பில், தேவதானத்தில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில், கீழ்க்கண்டவாறு 4-வது தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றனர்.

‘இயக்கத்தின் வளர்சிக்காகவும், தமிழர் நலனுக்காகவும், கழகத்தின் வளர்ச்சிப் பணிகளை மேலும் துரிதப்படுத்தவும், திரு. துரை வைகோ அவர்களுக்கு கட்சியில் பதவி வழங்கி பணியாற்றுவதற்கு அனுமதி வழங்குமாறு, பொதுச் செயலாளர் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.’

அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த ராஜபாளையம் மதிமுக ஒன்றிய செயலாளர் வேல்முருகனைத் தொடர்புகொண்டோம்.

mdmk

“அந்தத் தீர்மானம் தனிநபராக நிறைவேற்றியது அல்ல. 60 கிளைகளில் இருந்து கிளைச்செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஒன்றுகூடி ஒருமனதாகக் குரல் எழுப்பி நிறைவேற்றிய தீர்மானம் அது. தவிர்க்கவே முடியாத நிலையில்தான், தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானோம். இன்னும் வேகமாகக் கட்சியை வளர்க்க வேண்டும், கட்சியும் வேகமாக செயல்படவேண்டும் என்ற ஆர்வத்தில், துரை வைகோ கட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள் தொண்டர்கள். ஆனாலும், இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றியதால், கட்சி மேல்மட்டத்தின் கோபத்துக்கு ஆளானோம். திட்டும் வாங்கினோம்.” என்றார் பரிதவிப்புடன்.

தன்னைப் போலவே, தான் கடைப்பிடித்துவரும் கொள்கையில் மதிமுக தொண்டர்களும் உறுதியாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை கொண்டவராக இருக்கிறார் வைகோ. தொண்டர்களோ, கட்சியில் ‘மறுமலர்ச்சி’ காணத் துடிக்கிறார்கள்.

Rajapalayam mdmk vaiko
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe