ADVERTISEMENT

"பிஸியா இருக்கேன்னு சொன்ன ராம் ஜெத்மலானியை வற்புறுத்தி வரவைத்த வைகோ" - நினைவுகளை பகிரும் துரை வைகோ!

04:37 PM May 19, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன், அண்மையில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மத்திய அரசு காலம் தாழ்த்திவருவதாகக் கூறி சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி தன்னுடைய சிறப்பு அதிகாரம் மூலம் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இவ்வழக்கில் முதலில் பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பின் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்தத் தண்டனைக் குறைப்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானிக்கும் வைகோவுக்கும் பெரும் பங்கு உண்டு. பேரறிவாளன் விடுதலைக்கு பிறகு மதிமுக தலைமை நிலையச் செயலர் துரை வைகோ நக்கீரனுக்கு அளித்த பேட்டியில் இந்த வழக்கிற்குள் ராம்ஜெத்மலானி எப்படி வந்தார் என்பது குறித்து பகிர்ந்துகொண்டார்.

”காலதாமதமான தீர்ப்பாக இருந்தாலும் இதை மகிழ்ச்சியான செய்தியாகவே பார்க்கிறோம். பேரறிவாளன் தன்னுடைய இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்து, 31 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விடுதலையாகியுள்ளார். எங்கள் தலைவர் வைகோ மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். ஓராண்டு, ஈராண்டுகள் அல்ல, கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் இந்தப் பிரச்சனையை தலைவர் வைகோ கையாண்டுள்ளார். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மனிதச்சங்கிலி போராட்டங்கள், சட்டப்போராட்டங்கள் எனப் பல வகைகளில் தலைவர் வைகோவின் பங்களிப்பு இந்த விவகாரத்தில் இருந்தது.

பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கு தூக்குத்தண்டனை அறிவிக்கப்பட்டதும் அந்தத் தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தலைவர் வைகோ, மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியை அணுகி இந்த விவகாரத்தில் நீங்கள் ஆஜராக வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவர் ரொம்பவும் பிஸியாக இருந்ததால் இந்த வழக்கில் தன்னால் ஆஜராக முடியாது என்று மறுத்துவிட்டார். இந்த மூன்று பேர் உயிர் உங்கள் கையில்தான் இருக்கு, நீங்க எனக்காக ஆஜராக வேண்டும் என வைகோ கேட்டுக்கொண்ட பிறகே ராம்ஜெத்மலானி இந்த வழக்கில் ஆஜரானார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்னுடைய சிறப்பான வாதத்திறமையால் மூவரின் தூக்குத்தண்டனையை தற்காலிகமாக ராம்ஜெத்மலானி நிறுத்தினார். அதன் பிறகு உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக பல அமர்வில் ராம்ஜெத்மலானியுடன் தலைவர் வைகோ கலந்துகொண்டார். இந்தியாவின் புகழ் பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவரான ராம்ஜெத்மலானி மாபெரும் சட்டமேதை. அவருடைய அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதே கஷ்டம். ஆனால், தலைவர் வைகோவிற்காக சென்னை வரை வந்து வாதாடினார். ராம்ஜெத்மலானியின் வாதத்திறமையால் மரண தண்டனை தீர்ப்பை ஆயுள்தண்டனையாகக் குறைத்தார்.

அதன் பிறகு, தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் மூலம் இந்த வழக்கில் ஒரு விடை கிடைத்திருக்கிறது. இந்திய நீதித்துறை வரலாற்றில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு”. இவ்வாறு துரை வைகோ தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT