Skip to main content

நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள்தான் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கிறார்களா..? -மருத்துவர் ஷர்மிளா கேள்வி!

Published on 03/10/2020 | Edited on 03/10/2020
sgf

 

 

உத்தரபிரதேச மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். பட்டியல் இனத்தை சேர்ந்த அந்த பெண்ணை இரவோடு இரவாக காவல்துறையினர் எரித்து அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியது.

 

இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தின் வடுவே இன்னும் ஆறாத நிலை இன்று காலை மற்றொரு பெண் அதே போல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த பலாத்காரங்கள் ஏன் தொடர்ந்து நடைபெறுகிறது, இதற்கும் சாதிக்கும் தொடர்பு உள்ளதா, இதனை எப்படி தடுப்பது போன்ற பல்வேறு கேள்விகளை நாம் மருத்துவர் ஷர்மிளா அவர்களிடம் கேள்விகளாக நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

 

உத்தரபிரதேசத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர் நேற்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். எலும்பு உடைக்கப்பட்டு, நாக்கு வெட்டப்பட்டு கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. அதையும் தாண்டி அந்த பெண்ணின் சடலத்தை அவர்களின் பெற்றோரிடமே காட்டாமல் எரித்துள்ளனர். இதற்கு நாடெங்கிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவத்தை எப்படி பார்க்கிறீர்கள், காவல்துறையின் நடவடிக்கையை ஏற்றுக் கொள்கிறீர்களா?

 

பாலியல் பலாத்காரங்களில் சாதியை பார்ப்பதில்லையே இதில் ஏன் பார்க்கிறீர்கள் என தொடர்ச்சியாக சிலர் கேட்கிறார்கள். இதில் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நான்கு பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்கள் என்றால் நம்மை நம்முடைய சாதியை வைத்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற எண்ணமே பிரதானமாக இருந்ததுதான் அதற்கு காரணம். காவல்துறையினரும் தவறு செய்தவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவே காலம் தாழ்த்தி வரும் சூழ்நிலையில், அந்த பெண்ணின் சடலத்தை மட்டும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இரவோடு இரவாக எரித்துள்ளனர். 

 

என்னால் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும், எங்களை யாரும் எதிவும் கேட்க முடியாது என்ற எண்ணமே அந்த பெண்ணிடம் அவர்கள் கொடூரமாக நடந்து கொள்ள வைத்துள்ளதுள்ளது. அதன் வெளிப்பாடே எலும்பு முறிக்கப்பட்டது, நாக்கு வெட்டப்பட்ட சம்பவமும். இந்த எண்ணத்திற்கு அந்த பெண் ஒரு பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதும், நாம் உயர் வகுப்பை சார்ந்தவர்கள் என்பதே காரணமாக இருந்திக்க முடியும். அந்த வன்மமே அவர்களை இந்த கொலையை செய்ய வைத்திருக்க முடியும். பவர் சென்டர்கள் அனைத்துமே அந்த குற்றவாளிகளின் பின்னால் நின்று அவர்களுக்கு உதவி தானே வருகின்றது. 

 

நீட் தொடர்பான அழுத்தத்தில் தமிழக மாணவர்கள் மூவர் கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டனர். இது தமிழகத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தன. இந்த விவகாரம் அனலாக எரிந்துகொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா அனல் கக்கும் வார்த்தைகளைக் கொண்ட இரண்டு பக்க அறிக்கையை வெளியிட்டார். இந்த தேர்வை எப்படி பார்க்கிறீர்கள், நீட் தேர்வை ஆதரிக்கிறவர்கள் தகுதி திறமை என்ற வாதத்தை தொடர்ந்து வைக்கிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

 

தகுதியான திறமையான என்ற வாதமே பொய்யானது, அதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் 12ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் சேர்ந்தேன். என்னுடைய சக மருத்துவர்கள் அரசாங்க பள்ளியில் படித்துவிட்டு இன்றைக்கு தலை சிறந்த மருத்துவராக உள்ளார்கள். இன்றைக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்களுக்கு நிறைய உதவிகளை அவர்கள் இன்றைக்கும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைய கரோனா காலத்தில் இரவு பகல் பாராமல் மருத்துவர்கள் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களா? இதற்கு யாரிடமாவது பதில் இருக்கிறதா? பதில் இருந்தால் தயவு செய்து அவர்கள் தயவு செய்து தெளிவுப்படுத்த வேண்டும். அவர்கள் எல்லாம் சிறந்த மருத்துவர்கள் இல்லையா? 

 

தற்போது 12ம் வகுப்பு மதிப்பெண்ணையே இவர்கள் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார்கள். தாவரவியல், விலங்கியல் தேர்வு கேள்விகளை தவிர்த்துவிட்டு இயற்பியல், வேதியியல் கேள்விகளை மட்டும் தேர்ந்தெடுத்து தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் சூழ்நிலைகள் கூட இந்த நீட் தேர்வில் இருக்கிறது. 160 மார்க் எடுத்து அடுத்த கட்டத்திற்கு செல்லும் மாணவர்களும் இருக்கிறார்கள். நல்ல மதிப்பெண் எடுத்தவர்கள் அரசு கல்லூரிக்கு செல்கிறார்கள். தனியார் கல்லூரிகளில் சொல்ல வேண்டாம், வருடத்திற்கு 25 லட்சம் இருந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களே வருடத்துக்கு  இவ்வளவு அதிகமான பணத்தை கட்ட முடியாது என்று மருத்துவம் படிக்காமல் விலகி செல்லும் நிகழ்வையும் நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். எனவே இந்த தகுதி திறமை என்ற ஏமாற்றும் கருத்துகளை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.