'Double, Dabba, Top' - the 'engine' politics that circulates Photograph: (politics)
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதால் தேர்தல் களம் இன்னும் வேகமெடுத்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பாமக, தமாக, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதே போல் விஜய்யின் தவெக, பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது எனக் கூறப்படுகிறது. இது தவிர தேமுதிக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, ராமதாஸ் தரப்பு பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் 'இன்ஜின்' அரசியல் என்பது தமிழகத்தில் உற்றுநோக்கபட்டு வருகிறது. மத்திய அரசுடன் நேரடி கூட்டணி வைத்திருக்கும் மாநில கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் மத்திய அரசுடன் இணக்கமாக சேர்ந்து திட்டங்களை கொண்டு வருவோம் என்பதை உருவகப்படுத்த 'டபுள் இன்ஜின்' என்ற உவமை பல காலமாக, பரவலாக அரசியல் கட்சிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அண்மையில் கடந்த 23.01.2026 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகையில், ''பாஜக- அதிமுகவின் என்டிஏ கூட்டணியில் டபுள் இன்ஜின் சர்க்கார் தமிழ்நாட்டில் உருவாகும்'' என பேசியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 25.01.2026 அன்று நடந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''டபுள் இன்ஜின் என்று சொல்லி வடமாநில மக்களை ஏமாற்றி அவர்களது வாழ்வாதாரத்தை அழிகின்ற உங்கள் டப்பா என்ஜின் தமிழ்நாட்டில் ஓடவே ஓடாது'' என்று பிரதமரின் பேச்சை விமர்சித்து பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய்யின் பேச்சிலும் என்ஜின் அரசியல் இடம்பிடித்துள்ளது. அவரது பேச்சில், ''இந்த டப்பா இன்ஜின், ஓட்டை என்ஜின் என எவ்வளவு இன்ஜின் வந்தாலும் டாப் என்ஜின் நமது கட்சி தான் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
இப்படி இன்ஜின் அரசியலும் ஒருபுறம் சூடுபிடித்துள்ளது தமிழ்நாட்டில்...
Follow Us