Skip to main content

கூகுளை நம்பாதீங்க! -குற்றாலம் ஏமாற்றம்!

funland

 

குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டையில் ஃபன் லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க் உள்ளது. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை 24 மணி நேரமும் குதூகலிக்கலாம் என, இணையதளத்தில் படங்களுடன் விளம்பரப்படுத்தி உள்ளனர். கூகுள் வரைபடமும் செங்கோட்டை அருகில் பிரானூர் என்ற பகுதியில் காளீஸ்வரி தியேட்டர் எதிர்புறம் ஃபன் லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க் இருப்பதாக அடையாளம் காட்டுகிறது. Explore My Trip வலைத்தளமும், ஃபன் லேண்ட் குறித்து வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, பல மாநிலங்களிலிருந்தும்,   மனைவி, குழந்தைகளுடன் உற்சாக மனநிலையில் குற்றாலம் வருபவர்கள்,  இந்தத் தகவலை நம்பி, கூகுள் மேப் காட்டும் திசையில், வாகனத்தைச் செலுத்துகின்றனர்.   


 

funland


 

மிகத்துல்லியமாக,  ‘இங்குதான் ஃபன் லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க் உள்ளது’ என்று கூகுள் மேப் அம்புக்குறியிட்டு காட்டும் இடத்தில், அப்படி எதுவுமே இல்லை. வெட்டவெளியாகவும், வயல் காடாகவும் உள்ளது. அக்கம் பக்கத்தில் விசாரித்தால்,  விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.  “அட, போங்கப்பா. உங்கள மாதிரி ஆளுங்களுக்குப் பதில் சொல்லிச் சொல்லி நாங்க ஓய்ஞ்சு போயிட்டோம். செல்போனைத் தடவித்தடவி, இன்டர்நெட்ல இருக்கிறதெல்லாம் உண்மைன்னு நம்பி வர்றவங்க, நடு ரோட்டுலதான் நிக்கணும்.  அதுதானே இப்ப நடந்திருக்கு.” என்று கலாய்க்கிறார்கள்.  
 

 

 

வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்த ஃபன் லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க் போன் நம்பர்களைத் (04633 – 225571/72/73) தொடர்பு கொண்டபோது, முதல் இரண்டு நம்பர்களிலும் சேவை நிறுத்தம் செய்யப்பட்டதாக, ரெகார்டட் வாய்ஸ் பதிலளித்தது. மூன்றாவது எண்ணிலோ, ரிங் போய்க்கொண்டே இருந்தது. யாரும் அட்டெண்ட் பண்ணவில்லை. போன் டயல் செய்தபோது, ஃபன் லேண்ட் ரிஸார்ட்ஸ் என்று காட்டியது ட்ரூ காலர். 

 

funland


 

குற்றாலம் மற்றும் செங்கோட்டை வருவாய்த்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஆமாங்க.. மேப்ல யாரோ தப்பா போட்டிருக்காங்க. நெறய பேரு இங்கே வந்து ஏமாந்து திரும்புறாங்க. ஏன் இந்தமாதிரி பண்ணுனாங்கன்னு தெரியல. ஏதோ சீட்டிங் மாதிரி தெரியுது. ஆனா, இதுவரைக்கும் யாரும் புகார் தரல.” என்றனர். மேலும், வலைத்தளத்தில் ஃபன் லேண்ட் ரிஸார்ட்ஸ் குறித்து தேடியபோது, காயல்பட்டினம்.காம் என்ற வெப்சைட், 2013, மே 24-ஆம் தேதி வெளியிட்டிருக்கும் செய்தியில், ஆஸாத் கோப்பை கால்பந்து 2013, காலிறுதிப் போட்டியில்,   குற்றாலம் ஃபன் லேண்ட் ரிஸார்ட்ஸ் நிறுவன அதிபர் பி.முஹம்மத் ஃபாரூக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் என்று குறிப்பிட்டிருந்தனர். 
 

 

 

தேடலின் பலனாக,  ஃபன் லேண்ட் ரிஸார்ட்ஸ் மேனேஜர் ரமேஷை தொடர்புகொள்ள முடிந்தது. “ஃபன் லேண்ட் ரிஸார்ட்ஸை முஹம்மத் ஃபாரூக்கிடமிருந்து  லீசுக்கு எடுத்திருக்கிறார் புளியரை ஷ்யாம். ஃபன் லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க் இன்னும் ரன்னிங் ஆகல. தனியாக டிரான்ஸ்பார்மர் போடச் சொல்லிட்டாங்க. அம்யூஸ்மெண்ட் பார்க் விஷயத்தை நீங்க ஃபாரூக்கிடம்தான் பேச வேண்டும். அதற்கும் ஷ்யாமுக்கும் சம்பந்தம் கிடையாது.” என்றார். 

 

funland

 

ரமேஷிடமிருந்து முஹம்மது ஃபாரூக்கின் செல் நம்பரைப் பெற்று டயல் செய்தோம். தொடர்ந்து தொடர்புகொள்ள இயலாத நிலையிலேயே இருந்தார் எம்.பி.இஸட். ஃபன்லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க்கின் நிர்வாக இயக்குநர் முஹம்மது ஃபாரூக். அவர் யாரோ? அவருக்கு என்னென்ன பிரச்சனையோ? எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். வலைத்தளத்திலும், கூகுள் மேப்பிலும் மோசடியான ஒரு தகவலைப் பதிவுசெய்து, இன்று வரையிலும்  மக்களை ஏமாற்றிவருவதை எப்படி அனுமதிக்க முடியும்? தமிழக அரசும், சட்டமும், குற்றாலத்தில் பொய்யான  ஒரு முகவரியைத் தேடி சுற்றுலாப் பயணிகள் அலைவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. 
 

 

 

உலகின் தகவல்கள் அனைத்தையும் ஒழுங்கமைத்து, உலகளவில் அனைவரும் அணுகக்கூடியவாறு, அவற்றை பயனுள்ள முறையில் ஆக்குவதே குறிக்கோள் எனச் சொல்லும் கூகுள், இதுபோன்ற தவறான தகவல்களைக் கண்டறிந்து ஏன் களையவில்லை? மதன் விக்னேஷ் குமார், புவனேஸ்வரி துரை போன்றவர்கள் ‘கூகுள் வரைபடத்தை நம்பி எங்களின் மேலான நேரத்தை வீணடித்து விட்டோம்.’ என்று பார்வையாளர் பகுதியில் ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தும் ஏன் கண்டுகொள்ளவில்லை?  
 

‘கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்!’ என, நம் முன்னோர் என்றோ சொல்லிவிட்டனர். இந்த டெக்னாலஜி காலக்கட்டத்தில், இன்னொன்றையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கூகுளையும் முழுமையாக நம்பிவிட முடியாது.  

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...