doctor shanta adyar cancer institute

65 ஆண்டுகாலம் ஓய்வில்லா தொடர் உழைப்பு, உயிர்க்கொல்லி நோயுடனான அயராத போராட்டம் என மனிதகுலத்தின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் நோக்குடன் கடந்த ஆறு தசாப்தங்களாக பயணித்த சாந்தா, இன்று (19 ஜன.) உடல்நலக்குறைவால் காலமானார். அறிவியல் துறைகளில் நோபல் பரிசுபெற்ற சர்.சி.வி.ராமன், எஸ்.சந்திரசேகர் ஆகியோரின் குடும்பத்தில் பிறந்தவரான சாந்தா, மருத்துவத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதையே தனது குழந்தைப்பருவ கனவாகக் கொண்டு வளர்ந்தவர்.

Advertisment

1927 மார்ச் 11, சென்னையில் பிறந்த சாந்தா, தனது பள்ளிப்படிப்பை முடித்து மருத்துவம் பயின்றார். 1940கள் மற்றும் 1950களில், மருத்துவத் தொழிலில் நுழைந்த இந்தியப் பெண்கள் பொதுவாக மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தையே தங்கள் முதன்மை துறைகளாகத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், அவர்களிடமிருந்து வித்தியாசமாக இருக்க விரும்பியசாந்தா, மேற்குறிப்பிட்ட துறைகளை ஒதுக்கிவைத்துவிட்டு அக்காலத்தில் பெரிதும் பிரபல்யம் இல்லாத புற்றுநோய் சிகிச்சை துறையைத் தேர்ந்தெடுத்து, தனது மருத்துவ சேவையைத் தொடங்கினார். சாந்தாவின்இந்த முடிவு அவரது குடும்பத்திற்குள்ளேயே அதிருப்தியை ஏற்படுத்தினாலும், தனது முடிவில் உறுதியாக நின்று முதுகலை படிப்பை முடித்தார். இவர் தனது முதுகலை படிப்பை முடித்திருந்த நேரத்தில்தான், சென்னை அடையாறில் புற்றுநோய் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

Advertisment

doctor shanta adyar cancer institute

1954 ஆம் ஆண்டு, அடையாறில் ஒரு சிறிய கட்டடத்தில் 12 படுக்கைகள், இரண்டு மருத்துவர்களோடு இந்த புற்றுநோய் மருத்துவமனை தொடங்கப்பட்டது. அதில் ஒருவர்தான் சாந்தா. சம்பளம் என எதனையும் பெற்றுக்கொள்ளாமல், மக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தனது கடும் உழைப்பை வெளிப்படுத்திய சாந்தாவிற்கு மூன்றாண்டுகள் கழித்து மாதத்திற்கு ரூ. 200 சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டது. அன்று தொடங்கி தனது கடைசி மூச்சு வரை, சுமார் 67 ஆண்டுகள் புற்றுநோய்க்கு எதிரான தனது போராட்டத்தில் சோர்வடையாது பாடுபட்டவர் சாந்தா. ஏழை எளிய மக்களைப் புற்றுநோய் எனும் அரக்கனிடமிருந்து காக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் தொடங்கப்பட்ட இந்த புற்றுநோய் மருத்துவமனையில், அவரதுகனவை அரைநூற்றாண்டுகளைக் கடந்தும் உயிர்ப்புடன் வைத்திருந்தவர் சாந்தா. சாதாரண மருத்துவராகச் சேர்ந்து தனது சேவையாலும், மருத்துவ திறமையாலும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைத் தலைவராக உயர்ந்தார்.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் ஒரு மூலையில், ஒரு ஃபேன் மட்டுமே கொண்ட ஒரு சிறிய அறை.புயல், வெள்ளம் என எந்த சூழலாக இருந்தாலும் அவ்வறையிலிருந்த சாந்தா தனது நோயாளிகளைக் கவனிக்கத் தவறியதே இல்லை என்கிறார்கள் அவரின் உதவியோடு புற்றுநோயை வென்றவர்கள். ஆரம்பக்கட்டத்திலேயே புற்றுநோயைக் கண்டறிதல், அதற்கான சிகிச்சையை ஏழைகளும் எளிதாகப் பெறும்வண்ணம் மலிவாகத் தருதல், கிராம மக்கள் மற்றும் பெண்களுக்குக் கூடுதல் கவனம் என மக்கள் சேவையை நோக்கி தடம் மாறாமல் பயணித்தவர் சாந்தா. வாழ்வின் கடைசிக் காலம் வரையில் மருத்துவப் பணியாற்றிய சாந்தா, தனது மருத்துவ சேவைகளுக்காகப் ‘பத்மஸ்ரீ’, ‘பத்ம பூஷண்’, ‘பத்ம விபூஷன்’, ‘ரமோன் மகசேசே’ போன்ற பல உயரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

"எனது ஆசிரியர்களிடமிருந்தும் குடும்பத்தினரிடமிருந்தும் ‘மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டுமே தவிர அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளக்கூடாது’ என்ற கொள்கையை நான் கற்றுக்கொண்டேன். பணம் இல்லை என்ற காரணத்தால் யாருக்கும் சிகிச்சை கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். மற்றவர்களுக்காகப் பணியாற்றுவதில் ஒரு தனித்துவமான திருப்தி இருக்கிறது" என்ற சாந்தா, அதனை மெய்ப்பிக்கும் வகையில் தனது இறுதிக்காலம் வரை, தனது விருதுகளுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை, தனது சம்பளம் என அனைத்தையும் மருத்துவத்துறை வளர்ச்சிக்காகவே செலவிட்டார். பணத்திற்காக அல்லாமல் மக்களின் சேவையை நோக்காகக் கொண்டு தனது பணியைத் தொடங்கிய சாந்தா, இன்று இந்திய அளவில் புற்றுநோய் சிகிச்சையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். தனது இறுதி காலம் வரை ஏழை எளியோர்களுக்காகவும், பெண்களுக்காகவும் அயராது பாடுபட்ட சாந்தாவின் இறப்பு, மருத்துவ உலகிற்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்குமே ஒரு பேரிழப்பு என்பது நிதர்சனம்.