Skip to main content

வாக்குச் சாவடி செல்ல வேண்டாம்; வரிசையில் நிற்க வேண்டாம்! -குருசாமி உருவாக்கிய புது செயலி!  

Published on 07/06/2018 | Edited on 07/06/2018

 

 vote

மக்களுக்கான அதிகாரத்தைத்தான் ஜனநாயகம் என்கிறோம்.  மக்கள் வாக்களிப்பதன் மூலம்தான், நாட்டில் ஜனநாயக ஆட்சி அமைகிறது. தேர்தலைப் போலவே வாக்குரிமையும் முக்கியத்துவம் வாய்ந்தது. 18 வயது பூர்த்தியான அனைவரும் வாக்காளர்களே.  வாக்குரிமை என்பது மக்களாட்சியை நிர்ணயிக்கும் சக்தியாகும். இதனை,  இந்திய வாக்காளர்கள் அனைவரும் உணர்ந்திருக்கிறார்களா?

சுதந்திர இந்தியாவில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகியது கடந்த 2014 இந்தியப் பொதுத் தேர்தலில்தான். அதாவது, 66.38 சதவீத வாக்குகள் பதிவானது. ஆம். வாக்களிக்கும் ஜனநாயகக் கடமையை 33.62 சதவீதம் பேர்  நிறைவேற்றவில்லை. ஏன் இந்த நிலை? வாக்குச் சாவடிக்குச் சென்று,  வரிசையில் நின்று வாக்களிப்பதற்கு, ஏதோ ஒன்று தடையாக இருக்கிறது. யாருக்கு ஓட்டு போட்டு என்ன ஆகப்போகிறது என்ற சலிப்பா? வாக்களிப்பதற்கு நேரம் ஒதுக்கிட விரும்பாத சோம்பேறித்தனமா? என்றெல்லாம் பல கேள்விகள் எழுகின்றன.

வாக்குச் சாவடிக்கு செல்லத் தேவையில்லை!

சிவகாசியை அடுத்துள்ள ஆலமரத்துப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த, கணிப்பொறியியல் மாணவரான  குருசாமிக்கோ ‘வாக்களிப்பதை எளிமையாக்கிவிட்டால் என்ன? வீட்டிலிருந்தாலும், வேறு எந்த ஊரிலிருந்தாலும், எந்த மாநிலத்திருந்தாலும்,  தன்னுடைய தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு, தான் இருக்கும் இடத்திலிருந்தே வாக்களிப்பதற்கான வசதியை ஏற்படுத்தித் தந்தாலென்ன?’ என்ற சிந்தனை உதித்தது. எக்லிப்ஸ் என்ற மென்பொருளை உபயோகித்து,  புதிய ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனை உருவாக்கிவிட்டார்.

 

 


இந்த செயலி்யானது,  தேர்தல் ஆணையம், வாக்காளர்கள், தேர்தல் முடிவு ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டவை. தேர்தல் ஆணையம், 18 வயதுக்கு மேற்பட்டோரின் ஆதார் எண்களை மட்டுமே அனுமதிக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்.  ஆதார் எண்ணைப் பயன்படுத்தி வாக்காளர்களால் லாக்-இன் செய்யமுடியும். அதன்பிறகு, ஒன் டைம் பாஸ்வேர்ட் கிடைக்கப்பெற்று, என்டர் செய்யும்போது, வேட்பாளர் பட்டியலைக் காண முடியும். வாக்காளர்களின் சாய்ஸ் எதுவோ, அந்த வேட்பாளரை க்ளிக் செய்தால் போதும். வாக்கு பதிவாகிவிடும். ஓட்டுக்கள் பதிவான விபரங்களையும் கூட வாக்காளர்கள் தெரிந்துகொள்ள முடியும். ஆதார் அட்டையில் உள்ள கைரேகையும், போனில் வைக்கும் கைரேகையும் பொருந்தினால் மட்டுமே ஓட்டு போடமுடியும். ஆனாலும், இந்த செயலியின் கட்டுப்பாடு அனைத்தும் தேர்தல் ஆணையத்திடம் மட்டுமே இருக்கும். இதனை நடைமுறைப்படுத்தும்போது,   நேர விரயத்தையும், தேவையற்ற செலவுகளையும் தவிர்த்துவிட முடியும்.

 

gurusamy


தரமான சிந்தனைக்கு வித்திட்ட தமிழ் மீடிய பள்ளிக்கல்வி!

நாட்டுக்கு மிகவும் அவசியமான செயலி ஒன்றை உருவாக்கிய பொறியாளர் குருசாமியின் வாழ்க்கைப் பின்னணி இது –

ஆலமரத்துப்பட்டி என்ற கிராமத்தில் ஓட்டு வீட்டில்தான் வசிக்கிறார். அவருடைய அப்பா கருப்பசாமி அச்சகத்தில் பணிபுரிகிறார். அம்மா ஒரு கூலித் தொழிலாளி. மூத்த அண்ணன் காதல் திருமணம் செய்து, விலகிச் சென்றுவிட்டார். அக்காவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தம்பி கல்லூரியில் படிக்கிறார். வறுமையின் பிடியில் மொத்த குடும்பமும் சிக்கித் தவிப்பதால், மேற்படிப்பு என்பது கனவாகிப்போன நிலையில், கிடைத்த ஏதோ ஒரு வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார் குருசாமி.

வசதி, வாய்ப்பு இருந்தாலும்,  படிப்பில் முழுமையான கவனம் செலுத்தாத மாணவர்கள் அனேகம்பேர்.  குருசாமி அந்த ரகம் இல்லை. பள்ளிப் படிப்பு முழுவதையும் தமிழ் மீடியத்திலேயே படித்தார்.  ஆலமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-வது வரை படித்தார். அறிவியல் கண்காட்சி போன்றவற்றில் அவர் காட்டிய ஈடுபாட்டால், ‘இன்ஸ்பயர் அவார்ட்’ கிடைத்தது. 9 மற்றும் 10-வது வகுப்பு படித்தது நாரணாபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில்தான். 1042 மதிப்பெண்கள் பெற்று,  திருத்தங்கல் கலைமகள் மேல்நிலைப்பள்ளியில் 12-வது வகுப்பை முடித்தார். அதனைத் தொடர்ந்து, இலவச ஒதுக்கீட்டில், மதுராந்தகம் செண்டு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கணிப்பொறியியல் படிப்பை முடித்திருக்கிறார்.

படிப்பில் மட்டுமே சிந்தனை!

குருசாமியின் அம்மா விஜயலட்சுமியிடம் மகன் குருசாமி குறித்து கேட்டோம். “அப்பா பேச்சை எப்பவும் தட்ட மாட்டான். அவனுக்கு இந்த அளவுக்கு பேரு கிடைச்சிருக்குன்னா, அதுக்குக் காரணம் அவனோட அப்பாதான்.” என்றார். கருப்பசாமியோ “வேற எந்த சிந்தனையும் இல்லாம, படிப்புல மட்டுமே அக்கறை காட்டினான். உண்மையாக உழைத்தால், அதற்கான பலன், தானாகத் தேடிவரும்.” என்றார்.

புரிதல் அவசியம்! கேள்வி மேல் கேள்வி கேட்பேன்!

‘மற்ற மாணவர்களும் பயனடையட்டும்.  கண்டுபிடிப்பு சிந்தனை தோன்றியது எப்படி? வாழ்க்கை அனுபவத்தைச் சொல்லுங்களேன்!’ என்றோம் குருசாமியிடம்.

“பத்தோடு பதினொண்ணா இருக்கக்கூடாது. உலகத்துக்கே தெரியற மாதிரி ஃபேமஸ் ஆகணும்கிற எண்ணம் சின்ன வயசுல இருந்தே எனக்கு இருந்துச்சு. நியூஸ் பேப்பர் படிக்கிறது மட்டும்தான் என்னோட பொழுதுபோக்கு. சினிமா தியேட்டர் பக்கமெல்லாம் போனதே இல்ல. சினிமாவுக்கு போறது, தியேட்டர்ல விசிலடிக்கிறதெல்லாம் ரவுடித்தனம்னு அப்பா, அம்மா சொல்லி வளர்த்தாங்க. டூர் போனாக்கூட, எந்த ஊர்லயாச்சும் இறங்கி, நியூஸ் பேப்பர் வாங்கி படிச்சிருவேன். ஸ்கூலோ, காலேஜோ எனக்கு கற்றுகொடுத்த யாரும் என்னை மறக்கவே மாட்டாங்க. ஏன்னா, அந்த அளவுக்கு சப்ஜெக்ட்ல கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பேன்.  புரியாம படிச்சதே இல்ல. கிளாஸ்ல கவனிக்கிறதுதான். வீட்ல போயெல்லாம் படிக்க மாட்டேன். எக்ஸாம் நேரத்துல லைட்டா ரெஃபர் பண்ணுவேன். அவ்வளவுதான். ஏன்னா, எல்லா பாடமும் மனசுல அப்படியே தங்கியிருக்கும்.

 

 

சில நேரத்துல, சின்னச் சின்ன விஷயம்கூட எனக்கு நல்லதைக் கற்றுக்கொடுத்திருக்கு. ஒருதடவை, சென்னைல நடந்த கான்ஃபரன்ஸுக்குப் போயிருந்தப்ப,  சர்டிபிகேட் கொடுக்கிறதுக்கு குருசாமிங்கிற என்னோட பேரைச் சொல்லி ஸ்டேஜுக்கு கூப்பிட்டாங்க. சென்னை பக்கமெல்லம் குருசாமிங்கிற பேர் யாருக்கும் இருக்காது. அதனால, மைக்ல என் பேரைச் சொன்னதும், எல்லா ஸ்டூடண்ட்ஸும் சிரிச்சாங்க. எனக்கு ஒரு மாதிரி ஆயிருச்சு. ஆனாலும், ஸ்டேஜ்ல மைக் பிடிச்சு,  ‘அம்மா, அப்பா அவங்க இஷ்டப்பட்ட பேரை நமக்கு வைக்கிறாங்க. அந்த அம்மா, அப்பாவை மதிக்கணும். அவங்க வைச்ச பேரையும் விரும்பி ஏத்துக்கணும். இன்னொரு விஷயம். அம்மா, அப்பா வைச்ச பேரு இந்த உலகத்துல முக்கியம் இல்ல. படிச்சு, உழைச்சு, நாம என்ன பேரு எடுக்கிறோம்கிறதுதான் முக்கியம்’னு சொன்னேன். சிரிச்சவங்கள்லாம் கை தட்டினாங்க. யாரும் கேலி பண்ணுனாக்கூட, அதுலயும்  பொதுவான ஒரு கருத்தைச் சொல்ல முடியும்கிறத அன்னைக்குத் தெரிஞ்சுக்கிட்டேன். எல்லா டைப்லயும் எனக்கு ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க. அவங்ககிட்ட இருக்கிற நல்ல விஷயத்த மட்டும் எடுத்துக்குவேன். கெட்ட விஷயத்த விட்ருவேன்.

நான் டென்த் படிக்கிறப்ப பஞ்சாபி ஒருத்தர்தான் எங்களுக்கு பி.டி.வாத்தியார். அப்ப பார்லிமென்ட்டுக்கு தேர்தல் நடந்துச்சு. இவரு லீவு போட்டு, பஞ்சாபுக்கு கிளம்பிக்கிட்டிருந்தாரு. அப்ப எங்ககிட்ட, ‘பொதுத் தேர்தல்ல ஓட்டு போடறது ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். ஓட்டு போடாம இருக்கக் கூடாது. அதுனாலதான், பணத்தைச் செலவழிச்சு, லீவு போட்டு சொந்த ஊருக்கு ஓட்டுப் போட போறேன்‘னு சொன்னார். அவரு அப்ப சொன்னது என் மனசுல நல்லா பதிஞ்சிருச்சு. காலேஜ்ல எங்க பிரின்சிபல் முகமது அப்துல்காதர், ‘சமூகத்துக்கு பயனுள்ள ஒரு செயலியை உருவாக்கு’ன்னு சொன்னப்ப, என்னையும் அறியாம, இருந்த இடத்துல இருந்தே ஓட்டு போடற செயலியை உருவாக்கணும்கிற பொறி தட்டுச்சு. ஒரு மேம்கூட ‘இது பெயிலியர் ப்ராஜக்ட் ஆச்சே. இதை எப்படி எடுத்துட்டுப் போகமுடியும்’னு டிஸ்கரேஜ் பண்ணுனாங்க. ஆனாலும், ஆறு மாச உழைப்புல, வெற்றிகரமா அதை உருவாக்க முடிஞ்சது.” என்றார்.

வாக்காளர்களை மிரட்ட முடியும்!

‘வாக்காளர்களுக்குப் பணம் என்பதை அரசியல் கட்சிகள் நடைமுறைப்படுத்திவிட்ட நிலையில், பணத்தைப் பெற்றுக்கொண்ட வாக்காளர் குடும்பத்தினர்,  தன் கண்ணெதிரிலேயே மொபைலில் தன் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று, கட்சியினர் யாரோ வீடுபுகுந்து  கட்டாயப்படுத்துவதற்கு, ஒருவகையில் இந்த செயலி துணைபோகும் அல்லவா? வாக்குச் சாவடி சென்றால்,  மனைவி அவர் இஷ்டத்துக்கு தனக்குப் பிடித்தமான கட்சிக்கு வாக்களிப்பார். வீட்டிலிருந்தே வாக்களிக்க முடியும் என்றால், கணவர் தான் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று மனைவியை வறுபுறுத்த முடியும் அல்லவா? ஆக, வாக்களிக்கும்போது,  பாதுகாப்பும் சுதந்திரமும் கேள்விக்குறி ஆகிவிடுகிறதே?’   என்று நாம் கேட்டபோது, “ஆமாம் சார்” என்ற குருசாமி, “வாக்கு இயந்திரங்களுக்கான செலவு என்பது அதிகம். மொபைலில் வாக்களிக்கும்போது செலவு குறையும். வாக்குச் சாவடியில்,  தேர்தல் அலுவலர் முன்னிலையில், வாக்களிப்பதற்கும் இந்த செயலி பயன்படும். தேர்தல் ஆணையம் இதனைப் பரிசீலித்து, குறைகளைக் களைந்து, பயன்பாட்டுக்கு கொண்டுவரும்போது, நிச்சயம் வாக்களிப்போரின் சதவீதம் உயரும்.” என்றார் நம்பிக்கையுடன்.

 

gurusamy



உழைத்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்வு தரும் அழுத்தத்தின் காரணமாக, லட்சியம், மேற்படிப்பு, சமூக சிந்தனை போன்ற அனைத்தையும் மூட்டை கட்டிவைத்துவிட்டு, வறுமையை விரட்டிட, வேலை ஒன்றை தேடிக்கொண்டிருக்கிறார் குருசாமி.






 

Next Story

எதிரொலித்த அதிருப்திகள்; வேங்கை வயல், பரந்தூரில் பதிவான வாக்குகள் எத்தனை தெரியுமா?

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Dissatisfaction echoed; Do you know how many votes were cast in Vengai vayal, Parantur?

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த தேர்தலில் சில கிராமங்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முன்னரே பகிரங்கமாக அறிவித்திருந்தது. குறிப்பாக புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்பொழுது வரை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தீர்வு கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக வேங்கைவயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். மொத்தம் 561 வாக்காளர்களைக் கொண்ட வேங்கை வயலில் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் மட்டுமே வாக்குகளை பதிவு செய்துள்ளனர். வேங்கைவயல், இறையூர் ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்களிடமும் தொடர்ந்து அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க முன்வரவில்லை.

அதேபோல காஞ்சிபுரம் பரந்தூரில் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களும் தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்திருந்தனர். இந்நிலையில் ஏகனாபுரத்தில் தற்பொழுது வரை 17 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தமிழக மற்றும் புதுச்சேரியில் வாக்களிக்க இன்னும் 30 நிமிடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத் தகுந்தது. தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த வேங்கை வயல் மக்கள்  இறுதிக்கட்டத்தில் தற்போது திடீரென வாக்களிக்க திரண்டுள்ளததால் வாக்குசாவடி பரபரப்பை அடைந்துள்ளது. 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.