Skip to main content

காங்கிரசுக்கு அதிக இடங்களை தாரைவார்ப்பது புத்திசாலித்தனமல்ல! கடுப்பில் திமுகவினர்!

Published on 27/06/2019 | Edited on 27/06/2019

உள்ளாட்சித் தேர்தலை மையமாக வைத்து நடக் கும் சச்சரவு கள் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக் குள் விரிசலை ஏற்படுத்தி விடும் என்கிறார்கள் அரசி யல் பார்வையாளர்கள். உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சியின் செயற்குழுவைக் கூட்டி கடந்த 21-ந் தேதி ஆலோசித்தார் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. சத்தியமூர்த்தி பவனில் நடந்த அந்த ஆலோசனைக் கூட்டத்தில் செயல் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

dmk



கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், "உள்ளாட்சித் தேர்தல்ங்கிறது தொண்டர்களுக்கானது. அதனால் அதிக இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுவதற்கேற்ப இப்போதே தி.மு.க.விடம் பேசி உறுதி செய்து கொள்ள வேண்டும். கடந்த முறை உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், சென்னையிலுள்ள 200 வார்டுகளில் 4 இடங்களைத்தான் ஒதுக்கியது தி.மு.க. தொண்டர்கள் கொந்தளித்தார்கள். அதன்பிறகு தி.மு.க. தலைமையிடம் தலைவர்கள் பேசினார்கள். அப்படியிருந்தும் 14 இடங்கள்தான் ஒதுக்கியது. இந்தமுறை அப்படி நடந்துவிடக்கூடாது. அதிக இடங்களில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும்.
 

dmk



உள்ளாட்சித் தேர்தல் பங்கீடு களை தி.மு.க. தலைமையிடம் பேசி மேயர் பதவிகளிலிருந்து வார்டு கவுன்சிலர் வரை இத்தனை இடங்கள் என பெறவேண்டும். தொண்டர்கள் எதிர்பார்ப்பது இதைத்தான். அதனால், அதிக இடங்களை வாங்குங்கள். குறைவான இடங்கள் எனில் தனித்துப் போட்டியிடலாம். லோக்கலில் சில அட்ஜஸ்மெண்டுகளை செய்துகொண்டால் பெருவாரியான இடங்களை நாம் பிடித்துவிடலாம். எனது மாவட்டத்தில் 35 வார்டுகள் இருக்கிறது. தனித்துப் போட்டியிட்டால் அதிக இடங்களில் காங்கிரசை வெற்றிபெற வைக்க என்னால் முடியும். அதிக இடங்களை தி.மு.க.விடம் வாங்க முடியாவிட்டால், தென்சென்னையிலாவது தனித்துப் போட்டியிட வேண்டும்'' என்றார்.

 

dmk



கராத்தே தியாகராஜனின் கருத்துக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பலரும் ஆதரவளித்தனர். அவர்களது பேச்சிலும் அது எதிரொலிக்கவே செய்தது. கே.எஸ்.அழகிரி கூட, இந்த கருத்தினை ஆமோதிப்பவராகவே தெரிந்தார். அதேசமயம், தி.மு.க. கூட்டணி தொடரவேண்டும் என்கிற கருத்தும் செயற் குழுவில் பதிவு செய்யப்பட்டது.

காங்கிரஸ் செயற்குழுவில் எதிரொலித்த இந்த கருத்துக்கள், சிங்கப்பூரில் இருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்தது. அதனை அவர் ரசிக்கவில்லை. ஏற்கனவே திருச்சி பொதுக்கூட்ட மேடையில் உதயநிதி, தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என பேசியிருந்தார். தி.மு.க. நிர்வாகிகள் தரப்பிலும் இதே எண்ணம் வெளிப்படுகிறது. இந்த நிலையில், கராத்தே தியாகராஜனின் பேச்சு ஒரு நாளிதழில் வெளிவர, அதைக்கண்டு கோபமானார் தி.மு.க.வின் திருச்சி மா.செ. நேரு. குடிநீர் பிரச்சனைக்காக தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில், ""உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தனித்துப் போட்டியிட வேண்டும். தென் சென்னையில் 200 வார்டுகளில் 35 வார்டுகளை காங்கிரசுக்கு வாங்குவோம் என ஒருவர் கூறியிருக்கிறார். காங்கிரஸுக்கு அத்தனை சீட் கொடுத்துட்டு நாங்கள் குச்சி மிட்டாயை சப்பிக்கிட்டுப் போகவா? மக்களுக்கு நாம் நல்லது செய்ய வேண்டுமானால் தி.மு.க. தனித்துத்தான் போட்டியிட வேண்டும். காங்கிரஸுக்கு எத்தனை நாள் பல்லக்குத் தூக்குவது? தமிழகம் முழுவதுமில்லையென்றாலும் அட்லீஸ்ட் திருச்சியிலாவது தனித்து போட்டி யிட தலைவரிடம் வலியுறுத்துவேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து'' என்றார் நேரு.

 

dmk



கே.என்.நேருவின் பேச்சு அதிரடி கிளப்ப, காங்கிரஸ் தலைவர்கள் பதறிவிட்டனர். கூட்டணி குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடிக்க, அது டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை வரை எதிரொலித்தது. இதனையடுத்து,  கட்சிக்கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக்கூடாது. மீறினால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்'' என டெல்லியிலிருந்து கிடைத்த உத்தரவின்படி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை செய்தார் கே.எஸ்.அழகிரி.

இது குறித்து தி.மு.க. தரப்பில் விசாரித்த போது,  நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சியில் தி.மு.க. போட்டியிட வேண்டும் என விரும்பினார் நேரு. கிடைக்கவில்லை. காங்கிரசுக்கு ஒதுக்கியது தலைமை. காங்கிரசுக்கு ஒதுக்கினாலும் உள்ளூர் காங்கிரசார் போட்டியிட வேண்டும் என விரும்பினார். அவருடைய சாய்ஸ், முன்னாள் எம்.பி. அடைக்கலராஜின் மகன் லூயிஸ். ஆனால், அதுவும் நடக்கவில்லை. இருந்தபோதும் நேருவின் உழைப்பால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் ஜெயித்தது. இருப்பினும், நேருவுக்கும் காங்கிரஸ் திருநாவுக்கரசருக்கும் எதிர்மறை உரசல்கள் இருந்து வருகிறது. 1996-ல் உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மேயர் பதவி த.மா.கா.வுக்கு தி.மு.க. ஒதுக்கியது. தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்கே தாரை வார்க்கப்பட்டுவிடுகிறது. இவைகள்தான் நேருவின் ஆதங்கம். அத்துடன், மேயர் பதவி கூட்டணிக்கு கொடுத்துவிட்டு, வார்டுகளில் தி.மு.க. ஜெயிப்பதால் பயன் இல்லை என்றும் நேரு நினைக்கிறார்.


தமிழகம் முழுவதும் 12,600 ஊராட்சிக் கூட்டங்களை நடத்தியிருக்கும் தி.மு.க.வினர், மக்களிடம் நேரடித் தொடர்பை உருவாக்கியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட்டு ஜெயித்தால்தான் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலின் வெற்றிக்கு உதவியாக இருக்கும். தவிர, உள்ளாட்சித் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம்தான் நடத்துகிறது. ஆளும்கட்சி என்ன செய்யும்ங்கிறது தி.மு.க.வுக்கு தெரியும். அதனால், மேயர் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் தி.மு.க.தான் நேரடியாக மோத வேண்டும். உள்ளாட்சி நம் வசமானால்தான் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது எளிதாக இருக்கும். இப்படிப்பட்ட சூழலில், காங்கிரசுக்கு அதிக இடங்களை தாரைவார்ப்பது புத்திசாலித்தனமல்ல'' என்கிறார்கள் தி.மு.க. மா.செ.க்கள். இதனை ஸ்டாலினிடமும் வலியுறுத்தியுள்ளனர்.


காங்கிரஸ் தரப்பில் விசாரித்த போது, தி.மு.க.வுக்கு எதிரான ஆதங்கங்கள் அவர்களிடமும் நிறைய இருக்கிறது. ஆக, உள்ளாட்சித் தேர்தலை மையப்படுத்தி கூட்டணி முறியுமோ? என்கிற அச்சம் காங்கிரசில் பரவியுள்ள நிலையில், கராத்தே தியாகராஜனிடம் பேசியபோது, காங்கிரசின் வளர்ச்சிக்காக தொண்டர்களின் உணர்வுகளைத்தான் கட்சியின் செயற்குழுவில் வலியுறுத்தினேன். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக நான் எதையும் பேசவில்லை'' என்கிறார். நேருவிடம் நாம் பேசியபோது, "இது என் தனிப்பட்ட கருத்து. தலைமை எடுக்கும் முடிவை ஏற்பேன்'' என்றார். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் வேட்டு வெடிக்கும் என ஆளுங்கட்சி எதிர்பார்க்கிறது.

 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்