Skip to main content

நேருவை எதிர்த்து திமுகவின் கருப்புக் கொடி போராட்டம்! 

Published on 03/04/2018 | Edited on 03/04/2018

1957 ஆம் ஆண்டு இறுதியில், பிரதமர் ஜவஹர்லால் நேரு தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில், கிழவர்கள் என்றும் நான்சென்ஸ் என்றும், நாடுகடத்தப்பட வேண்டியவர்கள் என்றும் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியது. தமிழ்நாட்டின் மீதும், தமிழர் தலைவர்களின் மீதும் மத்திய காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் மரியாதையற்ற போக்கு தொடருவதையே நேருவின் பேச்சு உறுதி செய்தது. இதையடுத்து நேருவுக்கு பாடம்புகட்ட திமுக முடிவெடுத்தது. 

 

Nehru at Salem



1957 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி நாகர்கோவிலில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் 1958ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் நேருவுக்கு கருப்புக் கொடி காட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டது. சென்னையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், மக்களவை உறுப்பினர்களும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் திமுகவினர் கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

“தென்னக மக்களுக்கு பெருந்தொண்டாற்றும் பெரியார் ஈ.வே.ரா.வை மூட்டை முடிச்சுக்களுடன் நாட்டை விட்டு ஓடச்சொல்லும் - பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பேசும் பண்டித நேரு - பஞ்சம் போக்கினாரா? பட்டினி துடைத்தாரா? விலை ஏற்றம் போக்கினாரா? செல்வம் வளரச் செய்தாரா? எதைச் சாதித்து தந்தார் இந்த நாட்டு மக்களுக்கு?” என்று தொடங்கும் அறிக்கையை திமுக வெளியிட்டு, அமைதியான வழியில் கருப்புக்கொடி காட்டி தமிழர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்தது.

இந்தப் போராட்டத்தை விளக்கி 1958 ஜனவரி 3 ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் பொதுக்கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி கேட்டு திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா, ஈ.வே.கி.சம்பத், இரா.செழியன், ஆசைத்தம்பி ஆகியோர் பேசுவார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்தக் கூட்டத்திற்கு அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். அதாவது 1957 டிசம்பர் 31 ஆம் தேதியிலிருந்து 15 நாட்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டிருப்பதாக அன்றைய போலீஸ் கமிஷனர் அருள் தெரிவித்தார். போலீஸ் அனுமதி கிடைக்காவிட்டாலும், திட்டமிட்டபடி ஜனவரி 3 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு திருவல்லிக்கேணி கடற்கரையில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் அதில் தான் கலந்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அறிஞர் அண்ணா தெரிவித்தார். இதுதொடர்பாக அண்ணா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜனவரி 3 பதட்டத்துடன் விடிந்தது. திமுக பொதுக்கூட்டத்தை தடுப்பதற்காக போலீஸ் தீவிரமான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. பொதுக்கூட்டத்திற்காக மேடை ஏற்பாடுகளை செய்வதற்காக சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திவிட்டனர். திருவல்லிக்கேணி கடற்கரையைச் சுற்றிலும் லாரி லாரியாக போலீஸார் கொண்டு வந்து இறக்கப்பட்டனர். கடற்கரைக்கு வரும் பொதுமக்களையும் விரட்டிக்கொண்டிருந்தனர்.

பிற்பகல் 2 மணியிருக்கும். திமுக தலைமை நிலையத்தில் அண்ணாவும் மற்றவர்களும் கூடியிருந்தனர். கடற்கரையில் போலீஸ் அட்டூழியத்தை அறிந்த வண்ணம் இருந்தனர். ஏராளமான வெளியூர் தோழர்களும் குவிந்திருந்தனர். இந்நிலையில் அண்ணா, ஈ.வே.கி.சம்பத், ஆசைத்தம்பி, இரா.செழியன் ஆகியோருடன் கழகக்கொடி பறக்கும் காரில் புறப்பட்டார். அவர்களைத் தொடர்ந்து நெடுஞ்செழியன், நடராசன், கருணாநிதி, மதியழகன், அன்பழகன், சிற்றரசு ஆகியோரும் இன்னொரு காரில் பின் தொடர்ந்தனர்.

 

karuna with anna



போலீஸ் அதிகாரிகள் அண்ணாவையும் மற்றவர்களையும் காரில் பின்தொடர்ந்தனர். கடற்கரையை நெருங்கும் சமயத்தில் அண்ணா உள்ளிட்ட நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றினர். அதைத்தொடர்ந்து, கலைஞர் மு.கருணாநிதி தனது காரை செலுத்தினார். உடனே அவரையும் அவருடன் சென்ற மற்ற தலைவர்களையும் கைது செய்தனர். இதையடுத்து திமுகவின் முன்னணி தலைவர்களை கைது செய்யும் போலீஸ் நடவடிக்கை தொடர்ந்தது.

அதேசமயம் கடற்கரையிலும், அதைச் சுற்றிய வீதிகளிலும் அண்ணாவையும் தலைவர்களையும் எதிர்பார்த்து லட்சக்கணக் கான மக்கள் காத்திருந்தனர். அண்ணா கைது செய்யப்பட்ட செய்தி கிடைத்ததும் அவர்கள் அண்ணா வாழ்க, காங்கிரஸ் ஆட்சி ஒழிக என்று முழக்கமிட்டனர். கட்டுக்கடங்காத இந்த கூட்டத்தை போலீஸார் தடியால் தாக்கியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், குதிரைப்படையை ஏவியும் கலைக்க முயன்றனர். காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். 3 மணிநேரம் போலீஸ் அடக்குமுறை பிரயோகித்த பின்னரே கடற்கரையில் அமைதி திரும்பியது.

தமிழகம் முழுவதும் தடை மீறப்பட்டது. திமுக தலைமை நிலையத்தில் நேரு வரும் 6 ஆம் தேதி வரை போலீஸ் திடீரென புகுவதும், அங்கிருக்கும் தலைவர்களை கைது செய்வதும் தொடர்ந்தது. எம்ஜியார், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். காமராஜ் அரசாங்கம், தமிழக காவல்துறை ஆகியவற்றின் எல்லா தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி கருப்புக் கொடிகளை மறைத்து எடுத்துச் சென்று, நேருவுக்கு வரவேற்பு கொடுப்பவர்களைப் போல குவிந்த திமுகவினர் யாரும் எதிர்பாராத வகையில் நேருவுக்கு கருப்புக் கொடி காட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

 

nehru with kamaraj



ஜவஹர்லால் நேரு விமான நிலையத்தை விட்டு வெளியேறியதும் அங்கு கூடியிருந்த கூட்டம் தன்னைக் காணவே வந்திருப்பதாக நினைத்து கையசைத்தபடி வந்தார். அப்போது, கூட்டத்தினர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கருப்புத் துணியை எடுத்து வீசியதை பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்தார். பிறகு, திறந்த காரில் ஊர்வலமாக செல்லத் தயாரானபோது காமராஜ் நேருவின் சட்டையை பிடித்து இழுத்து காருக்குள் அமரும்படி கூறினார். வழக்கமாக மக்கள் கூட்டத்தைப் பார்த்து நேரு கையசைத்தபடியே செல்வார். அன்றைய பயணம் வேறுவிதமாக முடிந்தது.

இதில் ஏற்பட்ட விரக்தியால்தான் காவல்துறையை ஏவி பழிதீர்த்தார் காமராஜர். ஆனால், இது திமுகவின் மிகப்பெரிய வெற்றியாக தமிழ்நாட்டில் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் பேசப்பட்டது. திமுகவின் கருப்புக் கொடி போராட்டத்தை சமாளிப்பதில் தோல்வி அடைந்த காமராஜ் அரசாங்கம், போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் வசித்த பகுதிகளில் எல்லாம் கொடூரமான போலீஸ் தாக்குதலை நடத்தியது.போலீஸ் தாக்குதலில் காயமடைந்த இருவர் உயிரிழந்தனர். சென்னை நகரம் முழுவதும் காமராஜ் அரசாங்கத்தின் கொலைவெறி தாக்குதல்கள் குறித்தே மக்கள் பேசினர்.

எனினும் இதுதொடர்பான வழக்கு விசாரணை முடிவில் கைதான திமுகவினருக்கு 25 ரூபாய் அபராதமும் கட்டத் தவறினால் 10 நாள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட மறுத்து சிறைக்குச் சென்றவர்களை இரண்டு நாட்களில் விடுதலை செய்தனர். பின்னர், அபராதத் தொகையை வசூலிப்பதாகக் கூறி அவர்களின் வீடுகளில் உள்ள பொருட்களை ஜப்தி செய்து அவமானப்படுத்தினர்.

Next Story

மகளிர் வாக்குகளை ஈர்க்கும் திமுக! தேர்தல் வியூக வகுப்பாளர்கள் கணிப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 Election strategists prediction on Clean sweep victory in the election

அ.தி.மு.கவின் வாக்கு வங்கியில் முக்கியமான பகுதியினர் பெண்கள். அந்த வாக்கு வங்கியை இலக்காக வைத்து, தி.மு.க தொடர்ச்சியாக வேலை செய்து வருவது இந்தத் தேர்தலில் வெளிப்படையாகத் தெரிகின்றது. 2024 தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசிய மூன்று முக்கியமான விஷயங்கள்,  மகளிர் உரிமைத் தொகை, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், புதுமைப்பெண் திட்டம் ஆகியவை. இத்துடன் காலை உணவுத் திட்டம். இவை அனைத்தும் பெண் வாக்காளர்களின் மனங்களை ஒட்டுமொத்தமாக கவரும் நோக்கத்திலானவை என்பது வெளிப் படையான உண்மை !

முந்தைய தலைமுறைக்கு முன்னர் பெண்கள் படிப்பதும், படித்து முடித்து விட்டாலும் வேலைக்கு செல்வது என்பதும் அவ்வளவு எளிதானதாக இல்லை. இதனால் பாலின சமத்துவத்தை நிலை நிறுத்துவதற்கு கல்வியும், பொருளாதார விடுதலையும் முக்கியமானதாக பேசப்பட்டது. டாக்டர் பட்டமே பெண் பெற்றிருந்தாலும் வேலைக்கு சென்று பொருள் ஈட்டவில்லை எனில், அந்தப் பட்டம் வெறும் திருமண பத்திரிக்கையில் பெயருடன் இணைத்துக் கொள்வதற்கு மட்டுமே பயன்படும். உலகம் முழுவதும் பெண்கள் முன்னேற்றம் என்பது பல மடங்கு இந்தியாவை விட உயர்ந்திருப்பதற்கு காரணம், அங்கெல்லாம் குடும்பக் கட்டுப்பாடுகள் இல்லை என்பதுதான்.

திராவிட இயக்கங்களின் மிக முக்கியமான இலக்கு பெண் உரிமையும், சமத்துவமும் தான். பெரியார், பெண் உரிமைகளுக்கு எனத் தனித் தீர்மானங்களையும் நிறைவேற்றி இருக்கிறார். 1929 ஆம் ஆண்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தான் ‘பெண்களுக்கு சொத்தில் சம உரிமை’ எனும் தீர்மானம். பெரியார் உயிருடன் இருக்கும் வரை, அந்தச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், 1989 ஆம் ஆண்டு கலைஞரால் தமிழ் நாட்டில் பெரியார் கண்ட கனவு சட்டமாக்கப்பட்டது.

 Election strategists prediction on Clean sweep victory in the election

இந்த வரலாற்றில், முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் உரிமைத் தொகை திட்டம் மூலம், பெண் பொருளாதாரச் சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்தினார். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், பெண்களின் உயர் கல்விக்கு மாதம் 1000 ரூபாய் இவையும் பெண்களைக் கவரும் திட்டங்கள். இத்திட்டங்களின் மூலம் 1 கோடியே 6 இலட்சம் குடும்பங்கள் பயன் பெறுகின்றனர். இது உளவியல் ரீதியாக பெண்களுக்குப்  பெரும் பலத்தைக் கொடுக்கிறது இந்தத் திட்டங்கள்.

கலைஞர் கொண்டு வந்த மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தைத்தான், ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 50000 ஆகவும், தாலிக்கு தங்கம் என்றும் அறிவித்தார்.  இதே திட்டத்தைதான், இன்றைய கால வளர்ச்சிக்கு ஏற்ப முதலமைச்சர் ஸ்டாலின், ‘புதுமைப் பெண் திட்டம்’ ஆக மாற்றி, தாலிக்குத் தங்கம் என்பதைவிட, உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 என்ற முற்போக்கான திட்டமாகக் கொண்டுவந்தார். இது இளம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தால் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை 29 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவிலேயே பெண்கள் உயர்கல்வி சேர்க்கையில் 48.6% பெற்று பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலாவதாக உள்ளது. இன்னும் 5 வருடங்களில் புதுமைப் பெண் திட்டம் மூலமாகத் தமிழ்நாடு மிக பெரிய அளவில் முன்னேறி இருக்கும்.

தாலிக்குத் தங்கம் தராமல் இருப்பதைத் தங்களுக்குச் சாதகம் ஆக்கிக் கொள்ள முடியுமா என்று இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் முயலுகின்றனர். ஆனால் பெண் பிள்ளைகள் கல்வி பயில வேண்டும் என்பதைத்தான் தாய்மார்கள் விரும்புகின்றனர். 1921-இல் பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தது நீதிக்கட்சி. அப்போது தொடங்கி, பெண்கள் உரிமையில் இரண்டு திராவிடக் கட்சிகளும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதில், எம்.ஜி.ஆர் என்கிற ஆளுமை பிம்பமும், ஜெயலலிதா என்கிற பெண் ஆளுமைப் பிம்பமும் அ.தி.மு.கவிற்குப் பெண்கள் வாக்கு வங்கியை உருவாக்கித் திடப்படுத்தியது.

 Election strategists prediction on Clean sweep victory in the election

இப்போது அந்த வாக்கு வங்கியைத் தனக்கானதாக மாற்ற ஸ்டாலின் முயன்றுள்ளார். அதில் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் கணிசமாக வெற்றி பெறவும் செய்தார். 2024 இல் இன்னும் பெரிய அளவில் பெண்கள் தி.மு.கவிற்கு வாக்கு அளிப்பார்கள் என்று கணிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் ஏழைப் பெண்களுக்கு ஆண்டிற்கு 1 இலட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம், மத்திய வேலைவாய்ப்பில் 50 சதவிகிதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு ஆகியவையும் பெண் வாக்காளர்களைக் கவர்ந்திருப்பதாகவே சில புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்களே இம்முறை 10 லட்சத்து 89 ஆயிரத்து 394 பேர் அதிகமாக இருக்கிறார்கள். அதனால், இந்த முறை பெண்கள் அளிக்கும் வாக்குகள், தமிழ்நாட்டில் தி.மு.க.வின் வெற்றியை  க்ளின் ஸ்வீப் செய்ய உதவும் என்கிறார்கள் தேர்தல் வியூக வகுப்பாளர்கள்.

Next Story

“திமுகதான் எதிர்க்கட்சி என்பதுபோல் மோடி பிரச்சாரம் செய்கிறார் - திருமாவளவன் குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Thirumavalavan alleges Modi is campaigning as if the DMK is the opposition

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செவ்வாய்க் கிழமை(16.4.2024) சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பு.முட்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கி 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பொதுமக்களிடம் திருமாவளவன் பேசுகையில், “இந்தத் தேர்தலில், நரேந்திர மோடியின் நாசகரமான ஆட்சியை வீழ்த்த தளபதி மு.க.ஸ்டாலினும் ராகுல் காந்தியும் வியூகம் அமைத்து களமாடி வருகின்றனர். பாஜக விற்கு எதிரான வியூகம் அமைத்து, பல்வேறு கட்சிகளை  ஒருங்கிணைத்து  இன்று வலுவான தேர்தல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டிற்கு வராத மோடி தேர்தல் வந்தவுடன் பத்து முறை வந்துள்ளார். காங்கிரஸுக்கு பதிலாக திமுகதான் தனது எதிர்க்கட்சி என்பது போல தமிழ்நாட்டிலேயே டேரா போட்டு தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். கேஸ் விலை உயர்வு மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல்  சாதிய மோதல்கள் அதிகரிக்கவும் மோடி தான் காரணம். மோடி  மீண்டும் ஆட்சிக்கு வந்தால்  ரேசன் கடை இருக்காது. 100-நாள் வேலைத்திட்டம் இருக்காது” எனப் பேசினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன்,  திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் கதிரவன், திமுக ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் விஜய் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.