“கவர்னர் கூப்பிட்டு மிரட்டிய மிரட்டலுக்கு திமுக பயந்துருச்சு. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அதான் ஒத்தி வச்சுருச்சு” திமுக எதிர்ப்பாளர்கள் பரப்புகிறார்கள். “திமுக போராட்டத்தைக் கண்டு மத்திய அரசு பயந்துவிட்டது. அதனால்தான் ஸ்டாலினை அழைத்து இந்தித் திணிப்பு இருக்காது என்று உறுதியளித்துள்ளது. அமித் ஷாவே ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்” என்று திமுக ஆதரவாளர்கள் கவுண்ட்டர் கொடுக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் என்ன நடந்திருக்கும்?

Advertisment

கடைசியாக 1986ல் இந்தி திணிப்பு முயற்சி நடைபெற்றது. அப்போது எம்ஜியார் உயிரோடு இருந்தார். திமுக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியது. அந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட கலைஞரையும் திமுகவினரையும் எம்ஜியார் கடுமையாக அலைக்கழித்தார். மத்திய அரசு இந்தித் திணிப்பு முயற்சியை கைவிட்டாலும், எம்ஜியார் கலைஞரை பழிவாங்கும் நோக்கில் வழக்கை நடத்தி, அவரைத் தண்டனைக் கைதியாக்கினார். தண்டனை அறிவிக்கப்பட்ட மறுநாளே அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.

அதன்பிறகு இந்தித் திணிப்பு முயற்சி இல்லாமல் இருந்தது. அதேசமயம் இந்திக்காரர்களை தமிழகத்தில் திணிக்கும் முயற்சி அதிதீவிரமாக தொடர்ந்து வருகிறது என்பது கண்கூடான உண்மை. இந்நிலையில்தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தி நாளை முன்னிட்டு, இந்தியாவின் பொது அடையாளமாக இந்தி இருந்தால் நல்லது என்று ட்விட்டரில் கருத்துத் தெரிவித்தார். அவருடைய இந்தக் கருத்து, தமிழகத்தில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது.

DMK's anti-Hindi struggle return statment  What is the background of Amit Shah's U-turn

Advertisment

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 35 மாநிலங்களில் 26 மாநிலங்கள் இந்தியை எதிர்க்கும் உண்மையான நிலை வெளிப்படத் தொடங்கியது. இந்தியால் சொந்த மொழியை இழந்த மாநிலங்களின் கதியும் தெரிய வந்தது. ராஜஸ்தான் மாநில அரசு, தங்களுக்கு சொந்தமான ராஜஸ்தானி மொழியை மத்திய அலுவல் மொழியாக சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் நிலை உருவானது.

தமிழகத்தில் வழக்கம்போல திமுகவே முதல் எதிர்ப்பை பதிவுசெய்தது. மராத்தி, வங்காளி, ஒரியா, பிகாரி, கன்னடா என்று வரிசையாக இந்தி எதிர்ப்பு வலுக்கத் தொடங்கியது. இந்தி குறித்த தனது கருத்தை அமித் ஷா திரும்பப்பெற வேண்டும். இல்லையென்றால் செப்டம்பர் 20 ஆம் தேதி திமுக சார்பில் கடுமையான போராட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மாநில ஆளுங்கட்சியான அதிமுகவும் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும் என்று அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில் திமுகவின் போராட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பது உறுதியாகிவிட்டது.

Advertisment

ஆனால், அதிமுகவுக்கு இருதலைக் கொள்ளி எறும்பான நிலை. ஆம், திமுக போராட்டத்தை தடுக்க முடியாது. திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அது அதிமுகவுக்கு எதிராகவே திரும்பும் அபாயம் இருக்கிறது. திமுக போராட்டம் வெற்றிபெற்றால் பாஜகவின் வெறுப்பை சம்பாதிக்க நேரும். செய்வதறியாது திணறியது அதிமுக.

இதையடுத்தே ஆளுநர் மாளிகையிலிருந்த மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தச் சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்று வெளிப்படையாக தெரியவில்லை என்றாலும், இந்தியை திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று திமுக தலைவரிடம் கவர்னர் உறுதியளித்ததாகவும், அதனால் இந்திக்கு எதிரான திமுகவின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும் ஸ்டாலின் அறிவித்தார்.

DMK's anti-Hindi struggle return statment  What is the background of Amit Shah's U-turn

அதன்பிறகு ஒரு மணி நேரம் கழித்து அமித் ஷா தனது இந்தி குறித்த பேச்சுக்கு விளக்கம் அளித்தார். “நானே ஒரு குஜராத்திதான். இந்தியை திணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. இரண்டாவது மொழியாகவேனும் இந்தியை கற்றால் நல்லது என்ற அர்த்தத்தில்தான் பேசினேன். எனது கூற்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டது” என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால், எல்லா வகையிலும் திமுக போராட்ட அறிவிப்பால்தான் அமித் ஷா விளக்கம் அளிக்க நேர்ந்தது என்ற பிம்பத்தை உடைக்க திமுக எதிர்ப்பாளர்களுக்கு பல நிகழ்வுகள் ஒரே நாளில் உருவாக்கப்பட்டது. இந்தியை திணிக்க முடியாது என்றும் ஆனால் இந்தியாவுக்கு பொது மொழி இருந்தால் வளர்ச்சிக்கு நல்லது என்றும் ரஜினி பேசினார். திமுக தலைவர் ஸ்டாலினை கவர்னர் மாளிகை அழைத்து போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையெல்லாம் ஆளாளுக்கு தங்களுக்குத் தோன்றியபடி மீம்ஸ்களையும், கற்பனை செய்திகளையும் உருவாக்குவதற்கு பயன்படுத்திக் கொண்டனர்.

உண்மையில் இன்றைய காலகட்டத்தில் திமுக இந்திக்கு எதிராக போராட்டம் நடத்தினால், வழக்கொழிந்த இந்திய மொழிகளுக்கு சொந்தக்காரர்கள் தாய்மொழி உணர்வைப் பெற்றுவிடுவார்கள். இந்தியா முழுமையும் இந்தப் போராட்டம் கவனத்தை பெற்றுவிடும். இந்தியா மட்டுமின்றி உலக அளவில் திமுகவின் போராட்ட உணர்வு பேசு பொருளாக மாறிவிடும் என்ற அச்சம் மத்திய அரசுக்கு உருவாகிவிட்டது. இதைத் தவிர்க்கவே பாஜக இந்த ஏற்பாடுகளை செய்தது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

கவர்னர் மாளிகையின் அச்சுறுத்தலுக்கு அஞ்சியே போராட்டத்தை திமுக வாபஸ் பெற்றதாக கூறுகிறவர்கள் ஒரு விஷயத்தை மறைத்துவிடுகிறார்கள். கவர்னரைச் சந்தித்து வெளியே வந்த ஸ்டாலின் போராட்டத்தைக் ஒத்திவைப்பதாக அறிவிக்கிறார். அதன்பிறகு ஒரு மணிநேரம் கழித்து ஏன் அமித் ஷா தனது விளக்கத்தை வெளியிட வேண்டும்? என்பதற்கு யாரும் பதிலளிக்கவில்லை.