/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/601_64.jpg)
கனிமொழியின் செல்வாக்கை குறைப்பதற்காக இளம் மகளிர் அணியை திமுகவில் உருவாக்க உதயநிதி தீவிரம் காட்டி வருவது கனிமொழி ஆதரவாளர்களை கொந்தளிக்க வைக்கிறது.
கரோனா நெருக்கடிகளையும் மீறி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் முகமாக அரசியல் பணிகள் திமுகவில் நடந்து வருகின்றன. ஷூம் மீட்டிங் மூலம் திமுக மா.செ.க்களிடமும்,நிர்வாகிகளிடமும் அடிக்கடி விவாதித்து வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
இந்த நிலையில், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி, திமுகவில் இளம் பெண்கள் அணி ஒன்றை தனியாக உருவாக்க திட்டமிட்டு அதற்கேற்ப காய்களை நகர்த்தி வருகிறார் என்கிறார்கள் திமுக மகளிர் அணியினர்.
இது குறித்து விரிவாக நம்மிடம் பேசிய மகளிர் அணியினர், ‘’உதயநிதியை இளைஞரணிக்கு செயலாளராக நியமிக்கப்பட்ட சில மாதங்களிலேயே, இளம் பெண்கள் அணி உருவாக்க வேண்டும் என திட்டமிட்டனர்.
ஆனால், கட்சியில் உள்ள மகளிர் அணியின் வலிமையை பலகீனமாக்கவும், மகளிர் அணியின் செயலாளராக உள்ள கனிமொழியின் செல்வாக்கை குறைக்கவுமே இந்த இளம் மகளிர் அணி உருவாக்கப்படுவதாக சர்ச்சைகள் வெடிக்கும் என யோசித்து, உதயநிதியின் அந்த முயற்சிக்கு ஸ்டாலின் தடை போட்டார். இதனால், திட்டமிடப்பட்ட வேகத்திலேயே உதயநிதியின் புதிய முயற்சி முடக்கி வைக்கப்பட்டது.
முடக்கப்பட்ட அந்த முயற்சியைத்தான் மீண்டும் கையிலெடுத்திருக்கிறார் உதயநிதி. இதற்கு திமுக தலைமையின் ஒப்புதலும் தற்போது கிடைத்துள்ளது. இதனால், இளம் மகளிர் அணியை துவக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகின்றனர். திமுக மகளிர் அணியில் கனிமொழிக்குள்ள வலிமையும், மக்களிடம் உருவாகியுள்ள கனிமொழிக்கான செல்வாக்கும் இளைஞரணியால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் கனிமொழி செல்வாக்கை உடைக்கவும் திமுக மகளிர் அணியை முதியோர் அணியாக மாற்றவுமே இந்த திட்டம். உதயநிதியின் இளம் பெண்கள் அணி வெளிப்படையாக உருவாகும்போது திமுகவில் அதிருப்திகளும் வெளிப்படையாக வெடிக்கும். அது, தேர்தல் அரசியலில் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்!‘’ என்கின்றனர்.
திமுகவின் சீனியர் மா.செ.க்கள் இருவரிடம் இது குறித்து நாம் பேசியபோது, “கனிமொழியின் அரசியல் வளர்ச்சி இளைஞர் அணிக்கு ஏனோ எட்டிக்காய் கசப்பாக இருக்கிறது. கட்சியில் இளைஞரணிக்கு இருக்கும் முக்கியத்துவம் வேறு எந்த ஒரு அணிக்கும் கொடுக்கப்படுவதில்லை. இளைஞர் அணியை போலவே மகளிர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட அனைத்து அணிகளும் கடுமையாகவே உழைக்கின்றன. ஆனால், பலனை மட்டும் இளைஞரணி பெரிதாக அறுவடை செய்து கொள்கிறது.
கட்சியில் ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதி மட்டுமே தெரிய வேண்டும் என்பது இளைஞரணியின் நோக்கம், கனிமொழி அதற்கு தடையாக இருக்கிறார். அதனால் கனிமொழிக்கு போட்டியாக அரசியல் செய்வதை வழக்கமாக்கிகொண்டார் உதயநிதி. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சனையின்போது அவர்களை சந்தித்து பேசினார் கனிமொழி. சில நாட்களிலேயே உதயநிதியும் டெல்லிக்கு சென்று அவர்களை சந்தித்தார்.
சாத்தான்குளம் வியாபாரிகள் மரணத்திற்கு நீதி கேட்டு கனிமொழி எடுத்த நடவடிக்கைகள் பல தரப்பினரின் பாரட்டைப் பெற்றது. வியாபாரிகள் குடும்பத்தை சந்தித்து திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட கட்சி நிதியையும் அவர்களுக்கு கொடுத்து ஆறுதல் படுத்தினார் கனிமொழி. அடுத்த நாளே உதயநிதியும் சாத்தான்குளத்துக்கு சென்று வியாபாரிகள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொன்னார். இப்படி எந்த இடங்களிலெல்லாம் கனிமொழி உயர்ந்து தெரிகிறாரோ அதையெல்லாம் உடைக்க உதயநிதி முயற்சிக்கிறார்.
இந்த மாதிரி செயல்பாடுகள் உதயநிதிக்கு எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கும் என யோசித்தே, கனிமொழி பொறுப்பிலுள்ள மகளிர் அணியை பலகீனமாக்க இளம் பெண்கள் அணியை உருவாக்க நினைக்கின்றனர். ஏற்கனவே சீனியர்கள் பலர் சில பல விசயங்களில் அதிர்ப்தியடைந்து வருகிறார்கள். இந்த நிலையில், கனிமொழிக்கு எதிராகவே அரசியல் செய்ய நினைப்பது கட்சிக்குத்தான் பலவீனம்” என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
கனிமொழிக்கு நெருக்கமான சி.ஐ.டி.காலனி தரப்பில் விசாரித்தபோது, “கலைஞரின் மகள்தான் கனிமொழி. ஆனால், கலைஞர் குடும்பத்தினரே அவரை அழிக்க நினைப்பதுதான் ஜீரணிக்க முடியவில்லை. கனிமொழியின் அரசியல் வளர்ச்சி திமுகவுக்குத்தான் உதவப்போகிறது. இதனை ஏன் இளைஞரணியினர் உணர மறுக்கின்றனர். கலைஞர் இருந்தவரை இத்தகைய போக்குகள் இருந்ததில்லை.
கட்சியின் தலைவர் ஸ்டாலின் இடும் கட்டளைகளை செயலாற்றி வருபவர் கனிமொழி. உதயநிதியின் உத்தரவுகளை ஏற்க வேண்டிய அவசியமெல்லாம் கனிமொழிக்கு கிடையாது. ஸ்டாலினுக்காக எதையும் பொறுத்து கொள்வார். ஆனால், உதயநிதியின் ஆதிக்கம் கனிமொழியை அழிக்க நினைப்பதாக இருந்தால், கனிமொழியின் முடிவு வேறு விதமாக இருக்கும். அதேசமயம், உதயநிதி உருவாக்க துடிக்கும் இளம் பெண்கள் அணி திட்டம் கனிமொழியை காயப்படுத்தியிருக்கிறது. அவரும் மகளிர் அணியினரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இளம் பெண்கள் அணி வெளிப்படையாக உருவாக்கப்பட்டால் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளார் கனிமொழி” என விவரிக்கின்றனர்.
இது குறித்து கருத்தறிய திமுக இளைஞரணி நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, யாரும் கருத்து சொல்ல முன்வரவில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)