Advertisment

எடப்பாடி அரசுடன் திமுகவுக்கு என்ன உறவு?

இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த கொடுமையை எல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டும் என்று மக்கள் கொந்தளிக்கிறார்கள். ஆனால், பெரும்பகுதி மக்களின் பிரதிநிதிகளாக இருக்கிற எதிர்க்கட்சிகளோ, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருக்கின்றன.

Advertisment

stalin eps

ஜெயலலிதா இறந்த பிறகு தமிழக ஆட்சியை மோடி தலைமையிலான பாஜக அரசு கைப்பற்றிவிட்டதாக ஒருபக்கம் சொல்கிறார்கள். மறுபக்கம், பாஜகவின் தலையீடு எங்கள் ஆட்சியில் இல்லை என்று அதிமுகவினர் மறுக்கிறார்கள். பாஜகவின் பினாமி ஆட்சியாக இருப்பதால் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்று திமுகவிலேயே ஒருபகுதியினர் கூறத் தொடங்கிவிட்டார்கள். அப்படியானால், இந்தக் கேடுகெட்ட ஆட்சியில் ஏன் சட்டமன்ற உறுப்பினர்களாக திமுகவினர் தொடரவேண்டும் என்று நடுநிலையாளர்கள் கேட்கிறார்கள்.

திமுகவினர் ராஜினாமா செய்தால் ஒன்றும் நடக்காது என்றும், காலியான இடங்களுக்கு இடைத்தேர்தல்தான் அறிவிப்பார்கள் என்றும் முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி கூறியதை திமுகவினர் தங்களுக்குச் சாதகமாக சொல்கிறார்கள். அதிமுக அரசும், மோடி அரசும் தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்கும் திட்டங்களையும், முடிவுகளையும் தொடர்ந்து நிறைவேற்றுகிறார்கள். அதைத் தடுக்க முடியாத நிலையிலும் எம்எல்ஏ பதவியில் நீடிக்க வேண்டுமா என்ற சாதாரண கட்சித் தொண்டர்கள் கேட்கிறார்கள். அதற்கு திமுக தரப்பில் சரியான பதில் இல்லை.

eps with ministers

Advertisment

ஆனால், தொண்டர்கள் மத்தியில் பலவிதமான யூகங்கள் பரவுகின்றன. அவர்கள் தங்கள் கட்சி எம்எல்ஏக்களும், நிர்வாகிகளும் அதிமுகவினருடன் பல விஷயங்களில் இணக்கமாக செயல்படுவை நேரிலேயே பார்ப்பதாக கூறுகிறார்கள். தலைமைச் செயலகத்திலிருந்து, ஊராட்சி ஒன்றியம் அளவுவரை அரசு காண்ட்ராக்ட்டுகளில் திமுகவினருக்கு உரிய பங்கு கிடைத்துவிடுவதாக கூறப்படுகிறது. திமுகவினர் வைத்திருக்கிற எந்திரங்களைத்தான் அதிமுக காண்ட்ராக்டர்கள் பயன்படுத்துகிறார்கள். அதுபோக, மொத்த காண்ட்ராக்ட்டுகளில்கணிசமான தொகை திமுகவினருக்கு கட்டிங்காக போகிறது என்று திமுக தொண்டர்களே கூறுகிறார்கள்.

இது போன்ற நடவடிக்கைகளால்தான் கடந்தமுறை திமுக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தது என்று அவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். இப்படிச் செய்வதற்கு பதிலாக பதவி ஆசையுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் சிலரை திமுக விலைக்கு வாங்கி ஆட்சியையே தனதாக்கிக் கொள்ளலாம் என்றும் அவர்கள் விரக்தியுடன் யோசனை தெரிவிக்கிறார்கள். கொல்லைப்புற வழியாக ஆட்சியைப்பிடிக்க விரும்பவில்லை என்று திமுக தரப்பில் சொல்லிக்கொண்டாலும், பெரும்பான்மையான திமுகவினர் இதை இப்போது நம்பத் தயாராக இல்லை.

stalin dmk

அமைச்சர் அந்தஸ்த்துடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார். திமுக எம்எல்ஏக்களில் பலர் முதன்முறையாக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் பதவியை இழக்கத் தயாராக இல்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் திமுக எம்எல்ஏக்களுக்கு முக்கியத்துவம் கிடைத்திருக்காது. ஆனால், இப்போது, திமுக எம்எல்ஏக்களின் தொகுதி விவகாரங்களில் அதிமுகவினர் அதிகமாக தலையிடுவதில்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. இந்த மரியாதையை திமுக எம்எல்ஏக்கள் இழக்க விரும்பவில்லை என்கிறார்கள்.

இந்த ஆட்சியை கலைக்க ஸ்டாலின் முயற்சி செய்தால், திமுகவினரே எங்களை ஆதரிப்பார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி ஒருமுறை சொன்னார். அது உண்மை என்று இப்போதுதான் புரிகிறது என்றும் சில திமுக நிர்வாகிகளே சொல்கிறார்கள். எவ்வளவுதான் முயன்றாலும் திமுகவில் உள்ள கோஷ்டிகளையும் அவற்றுக்கு இடையிலான மோதல்களையும் தலைமையால் மறைக்கவே முடியவில்லை. கிட்டத்தட்ட எல்லா மாவட்டத்திலும் குறைந்தபட்சம் இரண்டிலிருந்து அதிகபட்சம் 4 கோஷ்டிகள் வரை இருப்பதாக கூறுகிறார்கள்.

stalin erode

'நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும், காவிரி ஆணையம் அமைக்கும்வரை போராட்டம் தொடரும்' என்றெல்லாம் ஸ்டாலின் அறிவித்தார். அவருடைய நடைபயணத்தைக்கூட மீடியாக்கள் லைவ் செய்யவில்லை. அதை லைவ் செய்ய முயன்ற தொலைக்காட்சிகளுக்கு கலைஞர் டி.வி. ஆட்களே இடையூறு செய்தார்கள் என்று கூறப்பட்டது. ஸ்டாலின் போராட்டம் அறிவித்துவிடுகிறார். ஆனால், அந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் எந்த அளவுக்கு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்பதை யோசிக்க மறுக்கிறார். அடுத்தடுத்து போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு இப்போதெல்லாம் தொண்டர்கள் யாரும் தயாராக இல்லை என்று பொறுப்பாளர்கள் புலம்புகிறார்கள்.

திமுக நடத்திய எந்தப் போராட்டத்தையும் மத்திய அரசோ, மாநில அரசோ பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் நடத்தவிரும்பியதை நடத்திக்கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில்தான் எடப்பாடி அரசுக்கு எதிராக திமுகவின் மென்மையான அணுகுமுறைக்கு கொங்கு மண்டலப் பிரமுகர்கள் வேறு ஒரு காரணத்தை சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் நீண்டகாலத்துக்கு பிறகு கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒருவர் முதல்வராகி இருக்கிறார். ஏற்கெனவே கொங்கு மண்டலத்தில் திமுக ஆதரவை இழந்திருக்கிறது. இந்நிலையில் பெரும்பான்மை சாதியைச் சேர்ந்த எடப்பாடி அரசைக் கவிழ்த்து, அந்தச் சாதியினரின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டாம் என்று ஸ்டாலின் நினைப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

எது எப்படியோ, எல்லாத் தரப்பு மக்களாலும் வெறுக்கப்படும் இந்த அரசாங்கத்தை, இனியும் தொடர அனுமதிப்பது எதிர்க்கட்சிகளுக்கு, குறிப்பாக, திமுகவுக்கு, மிகப்பெரிய இழப்பாகவே இருக்கும் என்கிறார்கள்.

ops admk eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe