Advertisment

வழக்கறிஞர் டூ துணைப் பொதுச்செயலாளர் - ஆண்டிமுத்து ராசா சாதித்தது எப்படி..?

jkl

திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் நிழல் என்று தொண்டர்களால் கூறப்பட்டு வந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தற்போது திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாணவ பருவத்திலேயே பெரியாரிய, அம்பேத்காரிய சிந்தனையில் விருப்பம் உள்ளவராக இருந்த ராசா, 1996ம் ஆண்டு எதிர்பாராத விதமாக திமுகவின் பெரம்பலூர் தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டார். திமுக தலைவர் கலைஞர் அவர்களின் தேர்வு சரி என்று சொல்லுமளவுக்கு அவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதுதான் ராசாவின் முதல் அரசியல் வெற்றி. வெற்றி பெற்றதுமே அவரைவிட்டுவிடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டார் திமுக தலைவர் கலைஞர். முப்பதை தொட்ட இளைஞனான ராசாவுக்கு மத்திய இணை அமைச்சர் பதவியை பெற்றுக்கொடுத்தார்.

Advertisment

கலைஞரின் நம்பிக்கையை அந்த தருணத்தில் பெற்ற ராசா, கலைஞர் உயிருடன் இருக்கும் வரையில் அந்த நம்பிக்கையை மட்டும் உயிர்புடனே வைத்திருந்தார். அதனால் தான் இந்தியாவே ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் அவர் மீது குற்றம் சாட்டிய போது என் தம்பி அதிகாரத்தை மீறி எதையும் செய்யவில்லை என்று சொல்ல காரணமாக இருந்தது. டெல்லி அரசியல் சற்று சூழ்ச்சி நிறைந்ததாக எப்போதும் இருக்கும் என்பார்கள், ஆனால் ஆ.ராசைவை பொருத்த வரையில் தில்லி அவருக்கு பெரிய தொல்லை கொடுக்க முயன்றது என்றால் அது மிகையல்ல. தொலை தொடர்பு நிறுவனங்கள், தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்றுஆட்டம் போட்டுகொண்டிருந்த கால கட்டத்தில் என் பெயர் மட்டுமல்ல ராசா, என் துறைக்கும் நான் ராசா என்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க முயன்றார். இது எதுவுமே அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆசி பெற்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு படிக்கவில்லை. விளைவு வேறு வடிவில் அவருக்கு நெருக்கடிகள் தரப்பட்டன.

Advertisment

kj

தளரவில்லை, சட்டப்படி சந்திப்போம் என்றார். ஆனால் ஆட்சியை கைக்குள் வைத்திருக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் வேறு வழிகளில் அவருக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்கள். விளைவு, 2 ஜி ஊழல் என்ற பூதத்தை லாவகமாக கொண்டு வந்தார்கள். பூஜ்ஜியத்தை இந்தியர்கள் கண்டுபிடித்தார்கள் என்பதாலோ என்னவோ பத்து பதினைந்து பூஜ்ஜியங்களை போட்டு இத்தனை கோடிகள் இந்த துறையில் ஊழல் நடந்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டார். அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். அதன் பிறகு அதிகார வர்க்கம் அவர்களுக்கு தோதான பத்திரிகைகளை வைத்து உலகின் அனைத்து நாடுகளிலும் பணத்தை அவர் பதுக்கி வைத்துள்ளதை போன்று கட்டுரைகளை புனைய வைத்தார்கள். அவர்களும் அதனை செவ்வனே செய்தார்கள். இதற்காக டெல்லி காவலர்களால் கைது செய்யப்பட்ட அவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தினசரி விசாரணை நடைபெற்றது. 15 மாதங்களுக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். வந்த அவரிடம் அகில இந்திய மீடியா முதல் உள்ளூர் மீடியா வரை பேட்டி எடுத்தனர். யாரும் அவருக்கு ஆதரவாக இருந்ததாக தெரியவில்லை.

ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இந்த விவகாரத்தால் திராவிட முன்னேற்றக்கழகம் பெரிய தோல்வியை 2011ம் ஆண்டு சந்திக்கநேர்ந்தது. இதை அவரே கூட பேட்டிகளில் ஒத்துக்கொண்டார். பெரிதுபடுத்தப்பட்ட ஒன்றை பெரும்பாலான மக்கள் நம்பவேண்டிய சூழ்நிலைகளை அவர்களே ஏற்படுத்தினார்கள் என்றார். சோதனைகளை தாண்டி அவர் வெற்றி வீரராக தமிழகம் வந்தார். அப்போதே அவருக்கு பொறுப்புக்கள் வழங்க வேண்டும் என்று பேச்சுக்கள் எழுந்தது. ஆனால், அந்த பேச்சுக்கள் வெறும் பேச்சுக்களாகவே தொடர்ந்து இருந்து வந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தற்போது அவருக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பொன்முடியுடன் சேர்த்து 5 துணைப் பொதுச்செயலாளர் பதவி திமுகவில் உருவாக்கப்பட்டுள்ளது. தொண்டனாக திமுக தலைவர் கலைஞரிடம் பெற்ற நம்பிக்கையை, துணைப் பொதுசெயலாளராக பொறுப்பேற்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ராசா அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதை சிறப்பாக செய்ய கூடிய ஆற்றல் படைத்தவர் ராசா என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை, ஏனென்றால் அவர் ராசா!

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe