Skip to main content

"தி.மு.க. பக்கம் தே.மு.தி.க. போகக்கூடாது .உளவுத்துறை...

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

குடும்ப ஜோதிடரின் அறிவுறுத்தலால் அஷ்டமி-நவமியைக் காரணம் காட்டி அ.தி.மு.க-தி.மு.க. இரு கட்சிகளுக்கும் வியாழன்வரை போக்கு காட்டியபடி இருந்தார் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா. பிப்ரவரி 16-ந் தேதி அமெரிக்காவிலிருந்து விஜயகாந்த் ரிட்டன் ஆனதிலிருந்தே தே.மு.தி.க.வில் தேர்தல் கூட்டணி விறுவிறுப்பு அதிகமானது. பிப்ரவரி 19 அன்று விஜயகாந்த்தை பா.ஜ.க.வின் பியூஷ் கோயல் நலன் விசாரிக்கச் சென்றதும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள்களை கட்டின. ஆனாலும் அ.தி.மு.க. தரப்பில் இழுபறி நீடிக்க, பிப்ரவரி…21 அன்று திருநாவுக்கரசர், பிப்ரவரி 22 அன்று ரஜினி, மு.க.ஸ்டாலின் ஆகியோரும் சந்தித்தனர்.

election



நலன் விசாரிப்பதற்கான சந்திப்பு என்று ஸ்டாலின் சொல்ல, அரசியலும் பேசப்பட்டது என பிப்.24-ல் பிரேமலதா சொல்ல, இதன் தொடர்ச்சியாக கூட்டணி முயற்சிகளும் தொடங்கின. தே.மு.தி.க.வை தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டுவர இரண்டு சேனல்களில் தி.மு.க. தலைமை முயற்சிகளை மேற்கொண்டது. முதல் முயற்சியை எடுத்தவர் தி.மு.க. மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி. பிரேமலதாவிடம் பேசி பிப்ரவரி 25 வாக்கில், அரசியல்ரீதியாக தே.மு.தி.க.வை, தி.மு.க. பக்கம் திருப்பியதில் பாசிட்டிவ்வான பதிலை பெற்றார். இது குறித்து கனிமொழி தரப்பில் நாம் விசாரித்தபோது, தி.மு.க. மீதுள்ள தங்களது வருத்தங்களை கனிமொழி யிடம் பகிர்ந்து கொண்டார் பிரேமலதா. குறிப்பாக, தே.மு.தி.க.வை உடைக்கும் நோக்கத்தில் தி.மு.க. செயல்பட்டதாக தெரிவித்திருக்கிறார். அதற்கு விளக்கமளித்த கனிமொழி, தே.மு.தி.க.வை தி.மு.க. உடைக்கவில்லை என்பதையும், மாற்றுக்கட்சிகளை உடைப்பதை கலைஞர் விரும் பியதில்லை என்பதையும் எடுத்துச் சொன்னதுடன், தே.மு.தி.கவிலிருந்து விலகிய முக்கி யஸ்தர்கள் தி.மு.க.வில் இணையும் விருப்பத்தை தெரிவித்ததால், விரும்பி வருபவர்களைத்தான் இணைத்தோம் என்பதையும் கனிமொழி சொல்லியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, 2011 தேர்தலில் அ.தி.மு.க- தே.மு.தி.க கூட்டணியால் விஜயகாந்த்தின் செல்வாக்கு ஜெ. முதல்வராகப் பயன்பட்டதை யும், அ.தி.மு.க. வாக்குகள் தே.மு.தி.க.வுக்கு வரவில்லை என்பதையும் சொந்த பலத்தால்தான் தே.மு.தி.க. வெற்றி பெற்று விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவரானதையும் புள்ளிவிவரங்களுடன் எடுத்துச் சொல்லி, அப்போது விஜயகாந்த்தையும் தே.மு.தி.க.வையும் சட்டமன்றத்தில் ஜெ. எப்படி நடத்தினார் என்பதையும் கனிமொழி எடுத்துக் காட்டியுள்ளார். தே.மு.தி.க. எம். எல்.ஏ.க்களை அ.தி.மு.க. இழுத்ததையும் சுட்டி காட்டினார். இதுதான் உடைப்பு முயற்சி. இதை நீங்கள் மறந்திருக்கமாட்டீங்க என்ற கனிமொழி, 2014 எம்.பி. தேர்தலில் பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் ஒரே கூட்டணியில் இருந்தபோது, ராமதாஸ் எப் படி நடந்துகொண்டார் என்பதையும் எடுத்துக் கூறி "அப்படிப்பட்ட அ.தி.மு.க.வும் அதனுடன் இணைந்திருக்கும் பா.ம.க.வோடும் கூட்டணியா? அதை மக்கள் ஏற்பார்களா?' எனக் கேட்டு, பொதுஎதிரிகளை வீழ்த்த தி.மு.க. கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கனிமொழி சொன்னதில் நம்பிக்கை கொண்ட பிரேமலதா, "தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு 7+1 சீட் கிடைக்குமா' என கேட்க, "தற்போதைய சூழலில் 3+1 சீட்டுக்கு கேரண்டி தரலாம். அதேசமயம், ராஜ்யசபா சீட் குறித்து தலைமையிடம் உங்களுக்காக அழுத்தமாக சொல்கிறேன். முடிவு தலைமைதான் எடுக்க வேண்டும்' எனச் சொல்லியிருக்கிறார் கனிமொழி.

இதே தொனியில் பல்வேறு விசயங்கள் பேசப்பட, தி.மு.க. கூட்டணிக்கு வர ஒப்புக்கொண்டார் பிரேமலதா. சீட்டுகளுடன் தேர்தல் செலவு குறித்த பொருளாதார கணக்குகளும் கூட்டணிப் பேச்சில் விவாதிக்கப்பட்டும் அதில் கனிமொழி தலையிடவில்லை. தி.மு.க.வில் வேறு ஒரு சேனல் அதைக் கையாளுகிறது. அதில், பிப்ரவரி 28 வியாழக்கிழமை வரை 50 சதவீதம் மட்டுமே பாசிட்டிவ் சிக்னல் வந்தது'' என்றனர் விரிவாக.

தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே நிறைய கட்சிகள் இருப்பதால், தே.மு.தி.க.வுக்கு காங்கிரசிடமிருந்து 2 சீட்டுகள் பெற பேச்சு நடப்பதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால், தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் இழுபறி நீடித்தபடியே இருக்க, உளவுத்துறை அட்வைஸ் படி பா.ஜ.க. தீவிரமாக களமிறங்கியது. 27-ம் தேதி பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா, "தி.மு.க. பக்கம் தே.மு.தி.க. போகக்கூடாது. சுதீஷ், பிரேமலதா தரப்பில் என்ன கோரிக்கையாக இருந்தாலும் நிறைவேற்ற முயற்சியுங்கள்'' என ஸ்ட்ரிக்ட்டான அட்வைஸை எடப்பாடி தரப்புக்கு தந்திருக்கிறார். இதையடுத்து, உடனடியாக முடிவை தெரிவியுங்கள் என அ.தி.மு.க. தரப்பிலிருந்து தே.மு.தி.க.வுக்குத் தெரிவிக்கப்பட்டது. 3 சீட்டுக்கு மேல் உயர்த்தித் தர அ.தி.மு.க. தயாராக இல்லை. மற்ற பிரச்சினைகளை சரி செய்யலாம் என்பதே அ.தி.மு.க.வின் நிலை.

பா.ஜ.க.வின் அட்வைஸ்படி எடப்பாடியின் இறுதிக்கட்ட டீலிங் வேகம் அதிகரித்தது. பிரேமலதாவின் கைகளில் இருக்கிறது கூட்டணி க்ளைமாக்ஸ்.