Skip to main content

தி.மு.க.வுக்கு கிடைத்த மக்கள் ஆதரவு... மு.க.ஸ்டாலினின் வியூகம்... உட்கட்சி அரசியலால் கலக்கத்தில் திமுகவினர்!

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

உள்கட்சித் தேர்தல் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தி.மு.க. தலைமை. அந்த அறிவிப்பு வருவதற்கு முதல்நாள், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் "ஐபேக்' நிறுவனம் தி.மு.க.வுடன் இணைந்து செயலாற்றுவது பற்றி அதிகாரப்பூர்வமாக ட்வீட் செய்தார் மு.க.ஸ்டாலின். உள்கட்சித் தேர்தல் என்பது தொண்டர்களும் நிர்வாகிகளும் பங்கெடுக்கும் கட்சியின் அடிமட்ட ஜனநாயக நடைமுறை. பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தின் தேர்தல் வியூகம் என்பது கார்ப்பரேட் பாணியிலானது. ஒன்றுக்கொன்று மாறுபட்ட இந்த இரு வழிகளில் எதில் பயணிக்கப்போகிறது தி.மு.க. என்ற கேள்வி தொண்டர்கள் முதல் அறிவாலய நிர்வாகிகள் வரை இருக்கிறது. அதுகுறித்து, தலைமையிடம் தெரிவிக்கும் ஜனநாயக வலிமை பலருக்கும் வாய்க்கவில்லை.
 

ipac



ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங் கட்சியை மீறி எதிர்க்கட்சி அதிக இடங்களில் வென்றது இதுதான் முதல் முறை. தி.மு.க.வுக்கு கிடைத்த மக்கள் ஆதரவு என்பது முக்கியமானது. அதேநேரத்தில், மறைமுகத் தேர்தலில் ஆங்காங்கே உள்ளடிகளும் பேரங்களும் தி.மு.க.வை கவிழ்த்திருப்பது கட்சித் தலைமைக்கு பல செய்திகளைச் சொல்கின்றன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் வியூகம் 2021 சட்டமன்றத் தேர்தலை நோக்கியுள்ள நிலையில், அதற்கான தயாரிப்புக் களமாக அவர் தேர்ந்தெடுத்தது, திருச்சி மாநகரை.

 

dmk



தி.மு.க.வின் வரலாற்றில் திருச்சிக்கு எப்போதுமே தனி முக்கியத்துவம் உண்டு. 1956-ல் திருச்சியில் நடந்த மாநில மாநாட்டில்தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் 1957 பொதுத்தேர்தலில் முதன்முதலாகக் களம் கண்டது அண்ணா தலைமையிலான தி.மு.கழகம். அந்தத் தேர்தலில் கலைஞர் போட்டியிட்டு வென்றது, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்த குளித்தலை தொகுதியில்தான். அதற்கு முன்பே, 1953-ல் அதே ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட கல்லக்குடி போராட்டத் தில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்த கலைஞரும் மற்றவர்களும் சிறைப்பட்டதும் திருச்சி மத்திய சிறையில்தான். 2014 வரை பல திருப்புமுனை மாநாடுகளை திருச்சியில் நடத்தியுள்ளது தி.மு.க.

 

dmk



அதனடிப்படையில், ஊரக உள்ளாட்சியில் வெற்றி பெற்ற தி.மு.க.வினருக்கான மாநாட்டை திருச்சியில் நடத்த முடிவு செய்தார் மு.க.ஸ்டாலின். மாநாட்டை நடத்தத் தயாராக இருந்த கே.என். நேருவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பந்தல் சிவா துணையோடு பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்தார் நேரு. அவரும் அன்பில் மகேஷும் புல்லட்டில் வந்து ஏற்பாடுகளைக் கண்காணித்தனர்.

ஜனவரி 31-ந் தேதி நடைபெற்ற தி.மு.க. ஊராட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் 12 பேர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 243 பேர், ஒன்றிய தலைவர்கள் 112 பேர், 512 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் வெற்றி பெற்ற 242 பேர், 5074 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளில் வெற்றி பெற்ற 2090 பேர் உள்பட 6522 பேருடன், சுயேச்சைகள் சிலரும் பங்கேற்க, மொத்தம் 6579 பேர் கலந்து கொண்டனர்.

அத்தனை பேரையும் மக்கள் நலன் காக்கும் உறுதிமொழியை அண்ணா, கலைஞர் மேல் ஆணையிட்டு எடுக்கச் செய்த மு.க.ஸ்டாலின் தனது தலைமையுரையில், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது முதல்வர் கலைஞரிடம் பாராட்டுப் பெற்றதைக் குறிப்பிட்டு, அது போல மக்களிடம் ஊராட்சி பிரதிநிதிகள் பெயர் வாங்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி, "சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதம் 23 நாட்கள்தான் இருக்கிறது. மக்கள் பிரச்சினைகளை தீர்க்க தி.மு.க. தான் ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கேற்ப செயலாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

தன்னிடம் அளிக்கப்பட்ட மாநாட்டுப் பொறுப்பினை, தலைமை எதிர்பார்த்தபடி நிறைவேற்றிவிட்ட நிறைவுடன், மறுநாள் (பிப்ரவரி 1) சென்னைக்கு வந்து முதன்மைச் செயலாளராகப் பொறுப்பேற்றார் கே.என்.நேரு. அதேநாளில் அவரது திருச்சி மாவட்ட தி.மு.க. மூன்றாகப் பிரிக்கப்பட்டது. (அ.ம.மு.க. மட்டுமே இதுவரை இங்கு மூன்று மாவட்ட அமைப்புகளைக் கொண்டிருந்தது) நக்கீரன் ஏற்கனவே சொல்லியிருந்ததுபோல, காடுவெட்டி தியாகராஜன் (திருச்சி வடக்கு), அன்பில் மகேஷ் (திருச்சி தெற்கு), வைரமணி(திருச்சி மத்திய மாவட்டம்) ஆகிய மூன்று பேருக்கு தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர் பொறுப்பு கிடைத்தது.


இதில் பொதுக்குழு உறுப்பினரான வைரமணிக்கு எதிராக அன்று காலையில் தான் திருச்சி மாநகர தி.மு.க. நிர்வாகிகள், அறிவாலயத்துக்கு புகார் அனுப்பியிருந்தனர். அவரது இடத்திற்கு வழக்கறிஞர் பாஸ்கரனைத்தான் நேரு முதலில் சிபாரிசு செய்திருந்தார். அந்த இடத்தை எதிர்பார்த்திருந்த முன்னாள் துணை மேயர் அன்பழகன் தரப்பு எதிர்ப்புத் தெரிவித்து புகார் கிளப்பியது. அன்பழகனை சென்னைக்கு அழைத்து சமாதானப்படுத்திய தலைமை, பாஸ்கரனுக்குப் பதில் நேருவின் மற்றொரு சிபாரிசான வைரமணிக்கு மா.செ. பொறுப்பு தந்தது. திருச்சியின் 3 மா.செ.க்களுக்கும் தலா 3 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன.

உதயநிதியின் குடும்ப நண்பரான அன்பில் மகேஷின் தாத்தா அன்பில் தர்மலிங்கம் கலைஞர் கால அரசியல்வாதி. கட்சிப் பொறுப்பிலும் எம்.எல்.ஏ.வாகவும் இருந்த மகேஷின் அப்பா பொய்யாமொழி, ஸ்டாலினின் நண்பர். அன்பில் தர்மலிங்கம் 1951 ஆம் ஆண்டு முதல் 1971 ஆண்டு வரை தொடர்ந்து 21 ஆண்டுகளாக ஒருங்கிணைந்த திருச்சி மா.செ.வாக இருந்தவர். மாவட்டச் செயலாளர் என்றால் ஜில்லா கலெக்டர் போல என காங்கிரஸ் ஆட்சிக்கால அதிகாரிகளிடம் கெத்தாகப் பேசியவர். கிட்டத்தட்ட 49 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாகப் பிரிக் கப்பட்ட திருச்சி தி.மு.க.வின் மா.செ. பதவி அன்பில் குடும்பத்திற்கு கிடைத்துள்ளது.

அதே நேரத்தில், கடந்த 40 வருட அரசியலில் 30 வருடங்கள் திருச்சி மாவட்ட செயலாளராக வலம் வந்த கே. என். நேரு, இன்னமும் தன் பிடி தளராதபடி கவனமாக இருக்கிறார். மற்ற மா.செ.க்கள் போல தன் வாரிசுகளை நேரு இதுவரை மாவட்ட அரசியலில் முன்னிறுத்தவில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில், நேருவின் தம்பி மணிவண்ணன், ரவிச்சந்திரன் மகன் அருண் ஆகியோர் முக்கிய நிர்வாகி கள் அனைவரையும் கவனித்துக் கொண்டனர். இதுவும் தலைமையால் கவனிக்கப்பட்டுள்ளது. மாவட்ட பஞ்சாயத்துகளை நேரு திறமையாகக் கையாண்டதால்தான், மாநில அளவிலான பஞ்சாயத்துகளை சமாளிக்க அவருக்கு முதன்மைச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டுள்ளது என்கிறார்கள் மேல்மட்டத்தில்.

அதற்கேற்றாற்போல, தி.மு.க. தலைமைக்கு தீராத தலைவலியாக உள்ள சேலம் மாவட்ட நிர்வாகத்தில் பிப்ரவரி 3-ந்தேதி மாற்றங்கள் செய்யப்பட்டன. வீரபாண்டி ராஜாவிடமிருந்து மாவட்ட நிர்வாகம் பறிக்கப்பட்டு, அவரை தேர்தல் பணிக் குழுச் செயலாளராக நியமித்தது அறிவாலயம். சேலம் கிழக்கு மாவட்டத்துக்கு எஸ்.ஆர்.சிவலிங்கமும், மேற்கு மாவட்டத்துக்கு டி.எம்.செல்வகணபதியும் நியமிக்கப்பட்டிருப்பது, நீண்டகால பஞ்சாயத்தை தீர்க்குமா, வேறு சிக்கல்களைக் கிளப்புமா என்பதை போகப் போகத்தான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் வீரபாண்டி ஆறுமுகம் காலத்து தி.மு.க.வினர். தி.மு.க. பலவீனமாக உள்ள நாமக்கல் மாவட்டத்திலும் நிர்வாக மாற்றம் நடைபெற்றுள்ளது.


இந்நிலையில்தான், பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கட்சிக்குள்ளேயும் வெளியிலேயும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. தி.மு.க. போன்ற தொண்டர்களைப் பலமாகக் கொண்ட இயக்கத்திற்கு கார்ப்பரேட் பாணி அரசியல் ஆலோசனைகள் தேவையா, அது நிர்வாகிகளை கட்டுப்படுத்துமா, தொண்டர்கள் விரும்புவார்களா என்ற கேள்விகள் தொடர்கின்றன. மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை அவரது மருமகன் சபரீசன் நிர்வாகத்திலான கட்டமைப்பு 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே செயல்படத் தொடங்கிவிட்டது. சுனில் என்பவர் அரசியல் ஆலோசகராக செயல்பட்டார். ஓ.எம்.ஜி. என்ற பெயரில் ஸ்டாலி னின் நமக்குநாமே திட்டம் தொடங்கி, ஊராட்சிக் கூட்டங்கள் வரையிலான பொதுமக்கள் சந்திப்புகள் இந்த டீமால் வகுக்கப் பட்டன. அது ஸ்டாலினின் இமேஜை உயர்த்தி, தொண்டர்களை களத்தில் தீவிரமாக செயல்பட வைத்தது. நாடாளுமன்றத் தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க.வுக்கு வெற்றியைத் தந்தது. சில மாதங்களுக்கு முன் சுனிலுக்குப் பதில் பிரசாந்த் கிஷோர் என முடிவாகி, இப்போது உறுதியாகியிருக்கிறது.

2014-ல் மோடி பிர தமராவதற்கும், பீகாரில் நிதீஷ்குமாரும் ஆந்திராவில் ஜெகன்மோகனும் முதல்வர் பதவியை அடைவதற்கும் ஆலோசகராக இருந்து வியூகம் வகுத்தவர் காஸ்ட்லி பட்ஜெட்டில் செயல்படும் பிரசாந்த் கிஷோர். அதேநேரத்தில், உ.பி.யில் காங்கிரசுக்கு அவர் வகுத்த வியூகம் வெற்றி பெறவில்லை. களத்தில் வெற்றி வாய்ப்புகள் உள்ள கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது தான் பிரசாந்த் கிஷோரின் வியூகம் என்கிறார்கள் அரசியல் வியூகம் வகுப்பாளர்கள்.

"தேர்தல் களத்திற்கான தரவுகளைத் திரட்டி வெற்றிக்கான வியூகம் வகுப்பதுதான் கார்ப்பரேட் பாணி அரசியல் ஆலோசகர்களின் வேலையாக உள்ளது. அத னை செயல்படுத்த வேண்டியது தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கொண்ட கட்சியின் பலமான கட்டமைப்புதான். சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகவேண்டும் என கட்சியினரை ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், கட்சியின் 15-வது உள்கட்சித் தேர்தல் பிப்ரவரி 21 முதல் தொடங்கும் என்கிற தலைமையின் அறிவிப்பு, உள்ளடிகளை மேலும் அதிகமாக்கிவிடுமோ என்ற அச்சத்தை தி.மு.க.வினரிடம் ஏற்படுத்தியுள்ளது.

கிளை அமைப்புகள் தொடங்கி மாநிலத் தலைமை வரை உள்கட்சித் தேர்தல் என்று சொல்லப்பட்டாலும், பெரும்பாலும் மா.செ.க்களே ஊராட்சி முதல் ஒன்றியம் வரையிலான பதவிகள் யாருக்கு என்று முடிவு செய்துவிடுகிறார்கள். தேர்தல் நாளன்று பெரும் பதட்டமும் போராட்டமுமாகி, கட்சி அமைப்பை சிதைத்துவிடுகிறது. அது பொதுத்தேர்தலில் பாதிப்பை உண்டாக்குகிறது. கட்சி அறிவிக்கும் வேட்பாளரைத் தோற்கடிக்கும் உள்குத்துகள் சகஜமாகிவிடுகின்றன'' என்கிறார்கள் உள்கட்சித் தேர்தல் பொறுப்பாளர்களாக சென்ற அனுபவமுள்ள தி.மு.க.வினர்.

தொண்டர்களை நிர்வாகிகளும், நிர்வாகி களை தலைமையும் அரவணைத்துப் பயணிப்பது தான் தி.மு.க. பாணி அரசியல். கட்சியின் முடிவு களை மீறுபவர்கள் மீது தாட்சண்யமின்றி ஒழுங்கு நடவடிக்கை பாய வேண்டும். ஆனால், அந்த முடிவு களை எடுப்பது தலைமையாக இருக்கவேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களாக இருக்கக்கூடாது என்பதே உடன்பிறப்புகளின் அச்சம் கலந்த எதிர்பார்ப்பாக இருக்கிறது. கலைஞர் காலத்து அரசியல் இப்போது இல்லை. தேர்தல் நடைமுறைகளும் நேர்மையாக இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற ஒற்றை இலக்குடன் பல கட்சிகளும் செயல்படும் நிலையில், கள நிலவரத்தை "மைக்ரோ லெவலில்' துல்லியமாக தெரிந்து கொள்ள ஆலோசகர்கள் அவசியப்படுகிறார்கள். ஆனால், அவர்களால் மட்டுமே வெற்றி அமைந்துவிடாது. தி.மு.க. தனது வாக்கு வங்கியை உயர்த்துவதில்தான் வெற்றியின் சூட்சுமம் உள்ளது.

9 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத தி.மு.க. கோட்டையைப் பிடிப்பதற்கேற்ப கட்சி அமைப் பையும் கார்ப்பரேட் ஆலோசகரையும் பேலன்ஸ் செய்வாரா ஸ்டாலின் என்பதை தி.மு.க.வினர் மட்டுமின்றி, அ.தி.மு.க.வும் உன்னிப்பாகக் கவனிக்கிறது.


-கீரன், ஜெ.தாவீதுராஜ்
 

 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.