Skip to main content

தி.மு.க. மாஸ்! ஸ்டாலின் அடித்த சிக்ஸர்!

 

ddd

 

கலைஞர் இல்லாத தேர்தல் களத்தை மு.க.ஸ்டாலின் எப்படி கையாள்கிறார் என்பதை எல்லா தரப்பும் உற்றுக் கவனிக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 1.1% வித்தியாசத்தில் பறிபோனது தி.மு.க.வின் வெற்றி. இந்தத் தேர்தல் களத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க. என இரண்டு ஆளுங்கட்சிகள் அடங்கிய கூட்டணியை எதிர்த்து நின்று வெற்றிபெற்றாக வேண்டும். அதற்கான தேர்தல் வியூக அமைப்பினை ஐ-பேக் நிறுவனம் மேற்கொள்ள, தி.மு.க.வின் இயல்பான கட்டமைப்பு முறைக்கு இது சரியாக வருமா என்ற கேள்வியும் சர்ச்சைகளும் தொடர்ந்துகொண்டிருக்கிற நிலையில்தான், திருச்சி சிறுகனூரில் ‘விடியலுக்கான முழக்கம்' என்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தை மார்ச் 7 அன்று நடத்தியது தி.மு.க.

 

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, 300 ஏக்கர் பரப்பளவில் மாநாடாக திட்டமிட்டு, பொதுக்கூட்டமாக மாற்றி, அதை மாநாடுபோல நடத்திட எல்லா ஏற்பாடுகளையும் திருச்சியின் 3 மா.செ.க்கள் ஒத்துழைப்புடன் முழுமையாக செய்திருந்தார் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு. ஐ-பேக் கொடுத்த மேடை அமைப்பு முறைகளின்படி டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருந்தது சிறுகனூர் பொதுக்கூட்ட வளாகம்.

 

இளைஞர்கள் முதல் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை கரைவேட்டி, கறுப்பு - சிவப்பு துண்டுடன் தி.மு.கவினர் பொதுக்கூட்ட அரங்கில் போடப்பட்டிருந்த 5 லட்சம் நாற்காலிகளை நிறைத்து, அதனைத் தாண்டியும் திரண்டிருந்தனர். பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியிடமிருந்து தமிழகத்தை மீட்டு, அடுத்த பத்தாண்டுகளுக்கான தி.மு.க.வின் தொலைநோக்குத் திட்டத்தை வெளியிடுவதுதான் ‘விடியலுக்கான முழக்கம்’ கூட்டத்தின் நோக்கம்.

 

அதற்கேற்ப பொருளாதாரம், விவசாயம், கல்வி, சுகாதாரம், நகரக் கட்டமைப்பு, ஊரக உள்கட்டமைப்பு, சமூகநீதி ஆகிய துறைகள் பற்றிய இன்றைய நிலையையும், அதனை மேம்படுத்த வேண்டிய அவசியத்தையும் ஜெயரஞ்சன், பாலகிருஷ்ண தீட்சிதர், டாக்டர் ரவீந்திரநாத், டாக்டர் எழிலன், வே.மதிமாறன், சுப.வீ ஆகியோர் விளக்கிப் பேசினர்.

 

இவற்றுக்கு தி.மு.க என்ன திட்டம் வைத்திருக்கிறது, ஆட்சிக்கு வந்து இவற்றைச் செயல்படுத்த வேண்டுமென்றால் அதற்கேற்ப மக்களின் ஆதரவைத் திரட்டுவது எப்படி என்பதற்காகத்தான் இந்த தேர்தல் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் நெரிசலை ஏற்படுத்தியிருந்த கட்சிக்காரர்களின் வாகனங்களால், போக்குவரத்து நெருக்கடியைக் கடந்து, ‘விடியலுக்கான முழக்கம்’ கூட்டத்திற்கு இருட்டிய பிறகுதான் வந்து சேர முடிந்தது மு.க.ஸ்டாலினால்.

 

"ஸ்டாலின்தான் வராரு... விடியல்தரப் போறாரு...'’என்ற பாட்டு முழங்க, திரண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரிக்க, மேடைக்கு ஸ்டாலின் வந்தபோது வாணவேடிக்கைகள், டிஜிட்டல் கோலாகலங்கள் என அமர்க்களமாகின. மக்கள் திரண்டிருக்கும் பகுதிக்கு நடந்து வருவதுபோல அமைக்கப்பட்டிருந்த நடைமேடையில் நடந்தபடி தொண்டர்களை நெருங்கி கையசைத்தார் ஸ்டாலின்.

 

ddd

 

தலைமைக்கழக நிர்வாகிகளுக்கு ஒரு மேடை, மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு மற்றொரு மேடை, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மேடை என அருகருகே மூன்று மேடைகள் அமைக்கப்பட்டிருந்ததாலும், வளாகத்தின் இரு புறமும் 300 மீட்டர் நீளத்திற்கு எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டிருந்ததாலும் நிகழ்ச்சியைத் தொண்டர்கள் எளிதாகப் பார்க்க முடிந்தது.

 

‘ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்’ என்கிற தொலைநோக்குத் திட்டத்தை மேடையில் மு.க.ஸ்டாலின் வெளியிடத் தொடங்கியபோது, அதன் விவரங்கள் எல்.இ.டி. திரையில் ஒளிர்ந்தன. பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு சார்ந்த வளமான தமிழ்நாடு, விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் வேளாண்மையில் மகசூல் பெருக்கம், குடிமக்கள் அனைவருக்கும் குறைவின்றித் தண்ணீருடன் கூடிய நீர் மேலாண்மை, அனைவருக்குமான உயர்தரக் கல்வி, மருத்துவம், 85% கான்க்ரீட் வீடுகள், பிராட்பேண்ட் அலைக்கற்றை வசதிகொண்ட கிராமப்புற உள்கட்டமைப்பு, புதிய மாநகராட்சிகளை உருவாக்கும் மாநகரக் கட்டமைப்பு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகையுடன் கூடிய சமூகநீதி என அறிவித்த ஸ்டாலின், இதனை நிறைவேற்றித் தர வேண்டுமென்றால், தி.மு.க.வினர் தேர்தல் களத்தில் தோழமைக் கட்சிகளுடன் சேர்ந்து பாடுபட்டு வெற்றியைப் பெற்றாக வேண்டும் என்பதை வலியுறுத்தினார். திரண்டிருந்த கூட்டத்தாரை எழுந்து நிற்கச் சொல்லி, உறுதிமொழி எடுக்கச் செய்தார். மாஸ் காட்டிய கூட்டத்தில் சிக்ஸர் அடித்தார் ஸ்டாலின்.

 

பொதுக்கூட்ட வளாகத்தில் 90 அடி உயரக் கம்பத்தில் கொடி பறந்தது. அந்தக் கொடி மேடையைச் சுற்றிய 5,500 சதுர அடியை சொந்தமாக வாங்கியிருக்கிறார் கே.என்.நேரு. அதில் கலைஞர் சிலையுடன் கூடிய நிரந்தரப் பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்டாலினின் உறுதிமொழிகளால் தமிழகத்திற்கு நிரந்தரப் பலனைக் கிடைக்கச் செய்வது, தி.மு.க நிர்வாகிகள் - தொண்டர்கள் உழைப்பில் உள்ளது. இந்நிலையில் இன்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியது. இது அக்கட்சியினருக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.