Skip to main content

டெண்டரில் அவசரம் காட்டுவது ஏன்? எடப்பாடி பழனிசாமி மீது ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்!  

Published on 08/05/2020 | Edited on 08/05/2020

 

admk


கரோனா பரவுதலில் நாடே அச்சத்தில் இருக்கும் சூழலிலும் முதல்வர் எடப்பாடியின் நெடுஞ்சாலைத்துறையில் விடப்பட்டுள்ள பல ஆயிரம் கோடிக்கான டெண்டர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அதனைச் சுட்டிக்காட்டி எடப்பாடி மீது சாட்டையைச் சுழற்றியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.


தமிழகம் முழுவதுமுள்ள நெடுஞ்சாலைகளை பராமரிக்கவும் பாதுகாக்கவும், "செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம்' (PBMC-Performance Based Maintenance Contract ) என்கிற கோட்பாட்டின்கீழ் பல டெண்டர்களை நடத்துகிறது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழக நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு. ஐந்து வருடங்களுக்கான காண்ட்ராக்ட் முறை இது. அந்த வகையில், தற்போதைய ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி 3,300 கோடிக்கான 43 டெண்டர்களை அறிவித்துள்ளது நெடுஞ்சாலைத்துறை. இதில், தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் மட்டும் 1,827 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
 

 

notice


இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினரிடம் விசாரித்தபோது, "தஞ்சை கோட்டத்தில் 462.211 கி.மீ. நீளமுள்ள சாலைகளைப் பராமரிக்க 1,165 கோடி ரூபாய்க்கு ஒரு டெண்டரும், 371.440 கி.மீ. நீளமுள்ள சாலைகளைப் பராமரிக்க 662 கோடி ரூபாய்க்கு ஒரு டெண்டரும் என 2 டெண்டர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெண்டர் (எண் 37/2019-20/ஐஉஞ) கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி (25.02.2020) விடப்பட்டதாகத் தமிழ்நாடு டெண்டருக்கான வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த டெண்டர் 16.03.2020 அன்றுதான், கரோனா நோய்த்தொற்று சம்பந்தமான விவாதம் சட்டசபையில் நடைபெற்ற காலகட்டத்தில் அரசின் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்குக் கடைசி தேதியாக 15.04.2020 என முடிவு செய்திருந்தனர். ஆனால், ஊரடங்கின் காரணமாக இந்தத் தேதி 17.04.2020 மற்றும் 21.05.2020 என 2 முறை மாற்றப்பட்டுள்ளது. இரண்டாவது டெண்டர் (எண் 39/2019-20/ஐஉஞ) ஊரடங்கு அமலில் இருக்கும் போது கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி (20.04.2020) அழைக்கப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கான கடைசி தேதி 21.05.2020. ஆக, இரண்டு டெண்டர்களையும் ஒரே நாளில் பரிசீலித்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளது நெடுஞ்சாலைத்துறையின் தலைமை.


திருச்சி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டத்தில் அடங்கியிருக்கிறது தஞ்சை கோட்டம். இந்த வட்டத்தின் சூப்பிரடெண்ட் இன்ஜினியராக இருக்கும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவரான பழனி, வருகிற ஜூலையில் ஓய்வு பெறவிருப்பதால் அதற்குள் இந்த காண்ட்ராக்டை நிறை வேற்றுவதில் தீவிரம் காட்டிவருகிறார்'' என்கின்றனர் நெடுஞ்சாலைத்துறையினர். இந்த நிலையில்தான், டெண்டரை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள காண்ட்ராக்டரான துரை ஜெயக்குமார், "பதிவு பெற்ற முதல்நிலை காண்ட்ராக்டர்கள் 32 பேர் செய்யும் வேலையை ஒரே ஒரு நபருக்குக் கொடுக்கும் விதத்தில் டெண்டர் முடிவுகள் எடுக்கப்படுகிறது'' என்று நம்மிடம் தெரிவித்தார்.
 

 

notice


கோர்ட் படியேறி பரபரப்பாகியிருக்கும் இந்த விவகாரத்தைச் சுட்டிக்காட்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டெண்டரில் கூறப்பட்டுள்ள பணிகள் 500 கோடி ரூபாய் மதிப்பிலானவை. ஆனால், 1,165 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அரசாணையிலுள்ள பணியின் ரூபாய் மதிப்பிற்கும், டெண்டரிலுள்ள பணியின் ரூபாய் மதிப்பிற்கும் வேறுபாடு இருக்கிறது. கரோனா பணிகளுக்கு இடையேயும் டெண்டரில் முதல்வர் பழனிச்சாமி அவசரம் காட்டுவது ஏன்? ஊழல்களிலிருந்து யாரும் தப்பித்துவிடமுடியாது" என எச்சரித்திருக்கிறார். அரசின் திட்டங்கள் மற்றும் டெண்டர்கள் குறித்த முறைகேடுகளைக் கண்காணித்து வரும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "நெடுஞ்சாலைத் துறையிலுள்ள சாலைப் பணிகளைச் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் மூலம் நிறைவேற்றத்தான் ஆட்சியாளர்களும் உயரதிகாரிகளும் விரும்புகின்றனர். ஏனெனில், இதில் நடக்கும் ஊழல்களை அவ்வளவு எளிதாகக் கண்டுபிடித்து விட முடியாது; இந்த ஒப்பந்தத்தில்தான் கமிஷன் பெர்சண்டேஜும் அதிகம்.

பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, பழனி ஆகிய கோட்டங்களில் மேற்கண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலைகள் நடந்து வருகின்றன. இதில், பழனி கோட்டத்தைத் தவிர மற்ற எல்லா கோட்டங்களிலும் இந்த ஒப்பந்தத்தைக் காண்ட்ராக்டர் நாகராஜன் செய்யாதுரைக்குச் சொந்தமான எஸ்.பி.கே. நிறுவனத்துக்குத் தந்துள்ளனர். பழனி கோட்டத்தை மட்டும் மதுரை பி.ஆர்.பி. குடும்பத்தைச் சேர்ந்த ஆர்.ஆர். கண்ஸ்ட்ரக்ஷனுக்கு கொடுத்திருக்கிறார்கள். பொதுவாக, இத்தகைய ஒப்பந்தங்கள் ஒவ்வொரு கோட்டத்திலும் ஆட்சியாளருக்கு நெருக்கமான முக்கிய காண்ட்ராக்டருக்கு கொடுக்கப்படுகிறது.


அதேபோல, தஞ்சை கோட்டத்திற்கான தற்போதைய இரண்டு டெண்டர்களை வட மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு காண்ட்ராக்டருக்கும், மதுரையைச் சேர்ந்த ஒரு காண்ட்ராக்டருக்கும் கொடுக்க திட்டமிட்டே டெண்டர்களை இரண்டாகப் பிரித்துள்ளது கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு. மொத்தத்தில் நெடுஞ்சாலைத் துறையும் ஊழல்களும் பிரிக்க முடியாதவை'' என்கின்றனர். அரசின் டெண்டர் உலகத்தில் விசாரித்தபோது, ’நெடுஞ்சாலைத்துறையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்புக் கோட்டங்கள் 41 இருக்கின்றன. ஒவ்வொரு கோட்டத்திலும் ஒவ்வொரு வருடமும் 100 முதல் 150 கோடி ரூபாய் என 5 வருடங்களில் சுமார் 700 கோடி ரூபாய் சாலைப் பணிகளுக்காகச் செலவிடுவார்கள். அதனைப் பல பகுதிகளாகப் பிரித்து பெரிய வேலைகளைத் தங்களுக்கான காண்ட்ராக்டருக்கும் சிறிய வேலைகளை மற்ற காண்ட்ராக்டர்களுக்கும் தருவார்கள். 2,000 கி.மீ. சாலைகளைப் பராமரிக்கும் பெரிய கோட்டமான தஞ்சாவூர் கோட்டம், ஐந்து வருடங்களில் 1,000 கோடி செலவு செய்யும். ஆனால் தற்போது விடப்பட்டுள்ள இரண்டு டெண்டர்களின்படி 833 கி.மீ சாலைகளுக்காக மட்டுமே 1,827 கோடி ரூபாய் செலவிடவுள்ளது. காரணம், செயல் பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தங்களில் தேவையற்ற வேலைகளையும் சேர்த்து மிக அதிகமான தொகையில் மதிப்பீடுகள் தயாரிக்கப்படுவதுதான்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தின்போது, "செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் என்கிற கோட்பாடு கிடையாது. கடந்த 4 வருடங்களாகத்தான் 7 கோட்டங்களில் இந்தப் புதிய முறையைக் கடைப்பிடிக்கிறது நெடுஞ்சாலைத்துறை. இந்த முறையில்தான், சாலைகளை அகலப்படுத்துதல், வலுப்படுத்துதல் ஆகியவைகளை இணைத்து அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும். அதிக நிதி ஒதுக்குவதன் மூலம் கமிஷன் லாபமும் அதிகரிக்கும். ஆட்சியாளர்கள், அதிகாரிகள், காண்ட்ராக்டர்கள், பொறியாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அதனைப் பங்கு பிரித்துக்கொள்கிறார்கள். கமிஷன் லாபம் குறைவாக இருக்கும் என்பதால் பாலம் கட்டும் பணிகளை இந்தப் புதிய முறையில் இணைக்க மாட்டார்கள்.

இந்த முறையில் நடக்கும் வேலையில் ஏற்கனவே உள்ள நடைமுறைகள் பின்பற்றப்பட்டாலும் ஒரு வேலை முடிந்தபின் தரத்துடன் செய்யப்பட்டுள்ளதா என்பதை பொறியாளர்கள் உறுதி செய்தபிறகே ஒப்பந்ததாரருக்குப் பணம் கொடுக்கப்பட வேண்டும். தரமில்லையெனில் காண்ட்ராக்டர்களுக்கு அபராதம் விதிக்க முடியும். வெளிமாநிலங்களில் இந்த ஒப்பந்த முறையை மக்கள் கண்காணிக்கும் வகையில் இருப்பதால் ஊழல்கள் நடப்பதில்லை. ஆனால், தமிழக அரசில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் சாலைகளின் பயனாளிகளான மக்களுக்கு இந்த ஒப்பந்த முறையைப் பற்றி தெரியப்படுத்தப்படுவதே இல்லை. இதுதான் ஊழல்களுக்கு முதல்படி.

ஒப்பந்த தொகையை 5 வருடங்களில்தான் காண்ட்ராக்டர்களுக்கு பிரித்துத் தர வேண்டும். ஆனால், தீர்மானிக்கப்பட்ட கமிஷனை துவக்கத்திலேயே எடுத்துவிட வேண்டுமென்பதற்காக மொத்த தொகையில் 3- இல் 1 பங்கை முதல் வருடத்திலேயே கொடுத்துவிடுகிறது அரசு. பொதுவான பணிகளுக்கு மதிப்பீட்டைவிட 0.01 சதவீதம் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ விலையைக் குறிப்பிடும் காண்ட்ராக்டர்கள், உலக வங்கியில் கடன் பெற்று செய்யப்படும் வேலைகளுக்கு மட்டும் 20 சதவீதம் அதிகமாக விலையைக் குறிப்பிட்டு காண்ட்ராக்ட் பெறுவார்கள். ஆக, நெடுஞ்சாலைத்துறையில் திட்டங்கள் தீட்டுவது திருடுவதற்காக மட்டுமே'' எனக் குற்றம்சாட்டுகின்றனர்.
 

http://onelink.to/nknapp


நெடுஞ்சாலைத்துறையில் ஆன்-லைன் மூலமாகவே ஒப்பந்தங்கள் பெறப்படுகின்றன; அதனால் டெண்டர் திறக்கும்வரை யார் யார் போட்டுள்ளனர் என்பது எங்களுக்கே தெரியாது என அரசுத் தரப்பில் அடிக்கடி சொல்கிறார் முதல்வர் எடப்பாடி. ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. கரோனா பாதிப்புக்கு முன்பு தீர்மானிக்கப்பட்ட இந்த டெண்டர்களுக்கான வேலைகளை உடனடியாகத் துவக்க வேண்டுமா என்பதை நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன்தான் ஆய்வு செய்ய வேண்டும். நேர்மையாக ஆய்வு செய்தால் மக்களின் வரிப்பணம் எப்படி விரயமாகிறது என்பது அம்பலமாவதுடன், ஊழல்களில் புரையோடி குட்டிச்சுவராகியிருக்கும் நெடுஞ்சாலைத்துறையின் கோரமுகமும் வெளிப்படும் என்கிறார்கள் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர்.


 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.