Skip to main content

கொங்கு மண்டலத்தில் கிடைத்த வெற்றியை பறிகொடுக்கிறதா திமுக... அதிர்ச்சி தகவல்!

கொங்கு மண்டலத்தில் பாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த தி.மு.க.வின் செல்வாக்கு சரிவை, கடந்த எம்.பி. தேர்தலில் கிடைத்த அமோக வெற்றிமூலம் தடுத்து நிறுத்தினார் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால் இப்போது அந்த ஏரியா கட்சிக்குள் நடந்துவரும் கூத்துக்களைப் பார்த்தால், மீண்டும் சரிவை நோக்கிப் போகிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. திருப்பூர் நகர தி.மு.க. வர்த்தக அணி அமைப்பாளராக இருந்த ராஜ்மோகன் (எ) வில்லன்ராஜ், போலி பாஸ்போர்ட் தயாரித்த வழக்கில் கைதாகி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். ஐந்து வருடங்களுக்கு முன்புதான் தி.மு.க.விற்கு வந்து மா.செ.வை கவனித்து, கட்சியில் பதவியும் வாங்கியவர் ராஜ்மோகன்.

 

dmkஇப்போது கோவையிலும் கையில காசு, கட்சியில போஸ்டிங் என்ற புகார் சூறாவளி, புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மீது சுழன்றடிக்கிறது. அந்தப் புகாரைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வதற்கு முன், தென்றல் செல்வராஜ் அரங்கேற்றிய மினி போராட்டம் பற்றிய செய்தி.

கடந்த வாரம் கோவை தெற்கு மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் பார் லைசென்ஸ் வாங்குவதற்கான டெண்டர் விண்ணப்பங்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. விண்ணப்பம் வாங்குவதற்காக தென்றல் செல்வராஜும் அவரது ஆட்களும் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் நவநீதகிருஷ்ணனும் அவரது ஆட்களும் போயிருக்கிறார்கள். சில காரணங்களால் இன்று விண்ணப்பம் வழங்க முடியாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்ததும், இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றியதால், டாஸ்மாக் கண்காணிப்பாளர் திருக்குமார் போலீசில் புகார் கொடுத்துவிட்டார்.

இதில் நவநீத கிருஷ்ணன் ஆட்கள் மீது மட்டும் பொள்ளாச்சி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்துவிட்டனர். இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து, டி.எஸ்.பி.சிவக்குமாரிடம் பெர்மிஷன் கேட்கப் போனார் தென்றல் செல்வராஜ். "டாஸ்மாக்கை கண்டிச்சுத்தானே ஆர்ப்பாட்டம் பண்ணணும், எங்களைக் கண்டிச்சு ஏன் ஆர்ப்பாட்டம் பண்றீங்க?'’என டி.எஸ்.பி. கேட்க, "போலீசை கண்டிச்சுத்தான் ஆர்ப்பாட்டம் பண்ணுவேன்' என்றிருக்கிறார் தென்றல். ந.செ. டாக்டர் வரதராஜ் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி, அதில் 65 பேர் கைதாகி, நான்கு நாட்கள் கழித்து ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

நகர உ.பி. ஒருவரோ,’பொதுப்பிரச்சனைக்கு ஆர்ப்பாட்டம் பண்ணாம டாஸ்மாக் பார் பிரச்சினைக்கு ஆர்ப்பாட்டம் பண்ணிருக்காரு தென்றல் செல்வராஜ். அதுவும் தலைமையிடம் பெர்மிஷன் வாங்காம. இப்ப லோக்கல் பார் முதலாளிகள் தரப்புக்கும் தென்றல் செல்வராஜ் தரப்புக்குமிடையே சுமுகமாயிடுச்சு. நவநீதகிருஷ்ணன் நிலைமை தான் இப்ப பரிதாபம்''’என புலம்பியபடியே ஒரு வாட்ஸ்-ஆப் ஆடியோவை நமக்குப் போட்டுக் காட்டினார் அந்த உ.பி.

அதில் இருக்கும் சில துளிகள்...

நம்ம தென்றல் இப்படி பண்ணுவாருன்னு எதிர் பார்க்கவே இல்லைன்னு காலம் காலமா நம்ம கட்சியில இருக்குற ஆளுங்க புலம்பித் தள்றாங்கப்பா''’’

"அப்படி என்னங்க பண்ணிப்போட்டாரு நம்ம தென்றல்''’’

"தம்பி, இப்ப நம்ம கட்சியில நெசவாளர் அணி மாநில இணைச் செயலாளராக இருக்கும் கே.எம்.நாகராஜ் யாரு தெரியுமா, பெங்களூரு சிறையிலிருந்து ஜெயலலிதா ஜாமீன்ல வந்தப்ப பட்டாசு வெடிச்சு, லட்டு கொடுத்தவன். அவனுக்கு நம்ம கட்சியில போஸ்டிங் வாங்கிக் கொடுத்தது தென்றல்தான். இதே மாதிரி வெள்ளலூர் பேரூராட்சி காங்கிரஸ் தலைவரா இருந்த ஈ.வி.பி.பாலகிருஷ்ணன், நம்ம கட்சிக்கு வந்து ஒரு வருஷம் கூட ஆகல, இப்ப நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாள ராயிட்டாரு.''


"ஆதி திராவிட நலக்குழு அமைப்பாளரா இருந்த மாணிக்கராஜ், சின்ஸியரான கட்சிக்காரனப்பா. அந்த தம்பிய தூக்கிட்டு, புதுசா வந்த தேவேந்திரனுக்கு அந்தப் போஸ்டிங்கை கொடுத்துட்டாரு தென்றல். அதேபோல் மதுக்கரை, பேரூர்னு எல்லா இடத்துலயும் இதே விளையாட்டுத்தான்’''

-இப்படியே நீள்கிறது அந்த ஆடியோ.

"ஏனுங்க இதெல்லாம் உண்மையா?'' என தென்றல் செல்வராஜிடம் கேட்டோம்.’

"பார் டெண்டருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. தலைமையிடம் அனுமதி வாங்கித் தான் ஆர்ப்பாட்டம் நடத்தினேன்''’என்றார் உறுதியாக.
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்