திருவண்ணாமலையில் ஜவுளிக்கடை உட்பட பலதொழில்கள் செய்தவரும், திருவண்ணாமலையை சுற்றியுள்ள கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கருக்கு உரிமையாளராக இருந்தவர் உத்தரண்டி பிள்ளை. இவரின் மனைவி ராதாபாய். இந்த தம்பதிக்கு சரஸ்வதி, நாகரத்தினம், சண்முகம், தியாகராஜன், கண்ணன் என ஐந்து பிள்ளைகள். தனது பிள்ளைகளின் தொடக்ககல்வியை பெங்களுரூவில் படிக்கவைத்தவர், பின்னர் திருவண்ணாமலையில் அரசு பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தார் உத்தண்டி. இவரின் மகன்களில் ஒருவரான அழகான, உயரமான முகத்தில் மீசைக்கூட முளைக்காத இளைஞன் சண்முகம்.

சமூகத்தின் மீது அக்கறைக்கொண்டு வலம்வந்தவர், இளைஞர் பருவத்தை தெடும்போதே பெரியார் மீதான ஈர்ப்பு அவருக்கு வந்துவிட்டது. சாதி ஆதிக்கம் நிறைந்திருந்த அக்காலத்திலேயே தனது 20வது வயதில் மாற்று சமூகத்தை சேர்ந்த புஷ்பா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு நான் பெரியாரின் சீடன் என்பதை நிரூபித்தார். நீதிக்கட்சியில் இணைந்து பெரியாரோடு தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர், நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாறியபின்பு ப.உ.சண்முகம் பெரியரோடு பயணத்தை தொடர்ந்தார்.

திராவிடர் கழகம் தேர்தல் களத்தில் நேரடியாக களம்மிறங்காத இயக்கம். 1947ல் ப.உ.ச சுயேட்சையாக திருவண்ணாமலை நகரமன்ற தேர்தலில் போட்டியிட்டு, திருவண்ணாமலை நகரமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பெரும் பணக்காரரும், வயதில் மூத்தவருமான கதிர்வேல்பிள்ளையை தோற்கடித்து நகரமன்ற தலைவரானபோது ப.உ.சவின் வயது 23. அதன்பின் அவர் எம்.எல்.ஏ, எம்.எல்.சி, அமைச்சர் என உயரத்துக்கு போனாலும் திருவண்ணாமலை நகராட்சி கவுன்சிலர் பதவியில் தொடர்ந்தார், மக்கள் அவரை தேர்வு செய்தார்கள். சுமார் 25 ஆண்டுகாலம் கவுன்சிலராக இருந்தார். அந்தக்காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சியிலும் பதவியில் இருக்கமுடியும்.

1948ல் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி சிறப்பு ரயிலில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பாதாள லிங்கத்தை திறந்துவைக்க தந்தார். அவரை நகரமன்ற தலைவர் என்கிற முறையில் வரவேற்ற ப.உ.ச, அதேநாளில் தந்தை பெரியார் திருவண்ணாமலைக்கு ரயிலில் வந்து இறங்கியதும், தனது பியாட் காரில் ரயில் நிலையத்துக்கு சென்று பெரியாரை வரவேற்று அழைத்து சென்றார். தமிழக வரலாற்றில் முக்கியத்தும் வாய்ந்த பெரியார் – ராஜாஜி சந்திப்பு, மணியம்மையை திருமணம் செய்துக்கொள்வது தொடர்பான ஆலோசனை திருவண்ணாமலையில் நடைப்பெற்றபோது சாட்சியாக இருந்தவர் ப.உ.ச. இந்த சந்திப்பு திராவிடர் கழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. பெரியாரின் முடிவை எதிர்த்து அண்ணா தலைமையில் திராவிடர் கழகத்திலிருந்து வெளியே வந்து சென்னை ராபின்சன் பூங்காவில் 18-9-1949 ஆம் தேதி திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது. அண்ணாவின் தலைமையை ஏற்று திமுகவில் இணைந்தார் ப.உ.ச. அப்போது நகரமன்ற தலைவராக ப.உ.ச இருந்ததால் திமுகவின் முதல் நகரமன்ற தலைவராக அடையாளம் காணப்பட்டார்.

Advertisment

திமுகவின் முதல் பொதுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றபோது, அதற்கான நிதி தந்த ஐவரில் ப.உ.சவும் அடக்கம். அந்தளவுக்கு வசதியாக இருந்தார். அடுத்ததாக திமுக சார்பில் அடுத்தடுத்த மாவட்ட மாநாடுகள் அண்ணாவால் அறிவிக்கப்பட்டது. திருச்சி, சென்னையை அடுத்து மூன்றாவது மாவட்ட மாநாடு கோவையில் 29-1-1950 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டின் தலைவராக ப.உ.ச இருந்தார்.

103

திமுக தொடங்கப்பட்டு 7 ஆண்டுகளுக்கு பின்பு முதல்முறையாக பொதுத்தேர்தலில் போட்.டியிடுவது என 1956ல் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் முடிவு செய்யப்பட்டு களம்மிறங்கியது. அப்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 15 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. அண்ணா, கலைஞர் வரிசையில் ப.உ.சண்முகம் திருவண்ணாமலை தொகுதியில் வெற்றி பெற்றார். அந்த தேர்தலின்போது நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலும் நடைபெற்றது. அதில் திமுகவின் முதல் எம்.பிக்கள் என்கிற பெயரை திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இரா.தர்மலிங்கமும், ஈ.வி.கே சம்பத்தும் பெற்று தந்தனர்.

Advertisment

ஒரேநேரத்தில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியிலும், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியிலும் திமுக வெற்றி பெற்றது. இந்த வெற்றிகள் கிடைத்தபோது வடாற்காடு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ப.உ.சண்முகம். 1962ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டார் ப.உ.ச. காங்கிரஸ் தன்கட்சியின் வேட்பாளராக நகரமன்ற தலைவராக இருந்த பழனிபிள்ளையை நிறுத்தியது. காங்கிரஸ் வெற்றி பெற்றது. பதவி ஏற்றுக்கொண்டபின் அதற்கடுத்த ஆண்டு எம்.எல்.ஏ பழனி பிள்ளை வடக்கே யாத்திரை சென்றபோது, கோதாவரி ஆற்றில் மூழ்கி இறந்து போனார். இதனால் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக போட்டியிட்ட முதல் தேர்தலில் 15 இடத்தில் வெற்றி, இரண்டாவது தேர்தலில் 50 இடங்களில் வெற்றி என்பதால் அப்போது முதலமைச்சராக இருந்த காமராஜர் இடைத்தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதை கவுரவ பிரச்சனையாக எடுத்துக்கொண்டார். இன்றையக்காலக்கட்டத்தில் எப்படி இடைத்தேர்தல் நடக்கிறதோ ஏறத்தாழ அதே அளவுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும்கட்சியான காங்கிரஸ் பக்தவச்சலம் என்பவரை களம்மிறங்கியது. சட்டமன்ற எதிர்கட்சியான திமுக ப.உ.சண்முகத்தை களம்மிறங்கியது.

தனது அமைச்சரவை சகாக்களுடன் இருபது நாட்கள் திருவண்ணாமலை நகரத்திலேயே தங்கி பகல் – இரவு என பிரச்சாரம் செய்தார் காமராஜர். சலுகைகளை அள்ளிவிட்டார். தமிழ்நாடே இந்த இடைத்தேர்தல் வெற்றியை உற்றுநோக்கவைத்தார் காமராஜர். திமுக சார்பில் அண்ணா, கலைஞர், நாவலர், சம்பத் என வரிசைக்கட்டி வந்து பிரச்சாரம் செய்துவிட்டு சென்றார்கள். கலைஞர் தேர்தல் பிரச்சாரத்தை ஒருங்கிணைத்து களமாடினார். இடைத்தேர்தலில் ப.உ.ச வெற்றி பெற்றார். இது ஆளும்கட்சியான காங்கிரஸ்க்கும், காமராஜருக்கும் பெருத்த அதிர்ச்சி.

இந்தியா முழுவதும் காங்கிரஸ் சரிவை சந்தித்து வந்ததால் மூத்தவர்கள் ஆட்சியில் இருந்து விலகி கட்சி பணிக்கு வரவேண்டும் என்கிற கே பிளானை காங்கிரஸில் செயல்படுத்த வேண்டும் எனச்சொல்லிவந்தார். தமிழ்நாட்டில் தான் முதலமைச்சராக இருக்கும் மாநிலத்தில் திருவண்ணாமலை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை என்றால் கட்சி தேய்கிறது என்பதை உணர்ந்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கட்சி பணிக்கு சென்றார் காமராஜர். அவரை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவைத்தது திருவண்ணாமலை இடைத்தேர்தல் தான்.

இந்த வெற்றி கொண்டாட்டத்தை தமிழ்நாடு முழுவதும் ஊர் ஊராக சென்று கொண்டாட முடிவுச்செய்து தமிழ்நாடு முழுவதும் ப.உ.சவை மேடையேற்றியது திமுக. இது ப.உ.சவை எந்தளவுக்கு பிரபலமாக்கியது என்றால் ப.உ.ச பெயரியல் தமிழ்நாட்டில் பல இடங்களில் நகர்கள், படிப்பகங்கள், மன்றங்கள் உருவாக்கும் அளவுக்கு பிரபலமாக்கியது. மேடைகள் தோறும் திருவண்ணாமலை இடைத்தேர்தல் வெற்றி ஆட்சி மாற்றத்துக்கான வெற்றி என முழங்கினார்கள் அண்ணா, கலைஞர், நாவலர் உட்பட அனைவரும். வெற்று முழக்கம் என காங்கிரஸ் கிண்டலடித்தபோது, இது வெற்றி முழக்கமாக மாறும் என்றார்கள் திமுக தலைவர்கள். 1967 சட்டமன்ற தேர்தல் வெற்றியை வெளிப்படுத்தியது.

1967 சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட ப.உ.ச தோல்வியை சந்தித்தார். காஞ்சிபுரத்தில் போட்டியிட்டுயிருந்த அண்ணாவும் அத்தேர்தலில் தோல்வியை சந்தித்திருந்தார். ஆனால் திமுக பெரும் வெற்றி பெற்றுயிருந்தது மேலவை உறுப்பினராக்கப்பட்டு முதலமைச்சராக அண்ணா பொறுப்புக்கு வந்தார். அண்ணா மறைவுக்கு பின்னர் 1969ல் கலைஞர் தலைமையிலான அமைச்சரவையில் ப.உ.ச சட்ட மேலவை உறுப்பினராக்கப்பட்டு அமைச்சரவையில் வணிகவரித்துறை அமைச்சராக்கப்பட்டார். 1971 தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ப.உ.ச. கலைஞர் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக்கப்பட்டார். திமுக என்கிற இயக்கத்தின் துணைப்பொதுச்செயலாளர் என்கிற அதிகாரம் மிக்க பதவியில் இருந்தார்.

திமுகவின் பொருளாளராக எம்.எல்.ஏவாக இருந்து பிரிந்து எம்.ஜி.ஆர் அதிமுகவை உருவாக்கியபோது ப.உ.ச திமுகவிலேயே இருந்தார். திமுகவின் அமைப்பு செயலாளரானார். பொருளாளராக சாதிக்பாட்சா நியமிக்கப்பட்டார். சாதிக்பாட்சாவுக்கு பின்னர் திமுகவின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டு அதிகாரம் மிக்கவராக இருந்தார் ப.உ.ச. 1977 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். திமுக எதிர்கட்சியானது. மாநிலத்தில் அதிமுக ஆட்சி அமைந்தது, எம்.ஜி.ஆர் முதல்வரானார்.

பதவி ஆசைக்கொண்டு திமுகவில் இருந்து பிரிந்துச்சென்று நாவலர் நெடுஞ்செழியன், க.ராசாராம் இணைந்து மக்கள் திராவிட முன்னேற்ற கழகம் என்கிற பெயரில் கட்சி தொடங்கினார்கள். அந்த கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக ப.உ.சண்முகம் இருந்தார். இவர்கள் பின்னர் கட்சியை அதிமுகவுடன் இணைத்தார்கள். 1980ல் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார் ப.உ.ச. இதனால் 1984ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மேல்மலையனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அதேக்காலக்கட்டத்தில் 1980 முதல் 1985 வரை அதிமுகவின் அதிகாரம்மிக்க பொதுச்செயலாளர் பதவியில் இருந்தார். முதலமைச்சர் எம்.ஜி.ஆர்க்கு பல நேரங்களில் ஆலோசகராக இருந்தார். அவர் அதிமுகவின் அதிகாரத்தில் இருந்தபோது அவரால் வளர்த்துவிடப்பட்டவர்கள் இன்றும் தமிழக அரசியலில் பெரிய பதவிகளில் உள்ளனர். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் அதிமுக உடைந்தபோது ஜானகி அணியில் இருந்தவர் அதே மேல்மலையனூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். அதிமுக ஒன்றிணைந்தபின் ஜெயலலிதா தலைமையின் கீழ் சில ஆண்டுகள் இருந்தவர், அங்கே அவருக்கு மரியாதை தரவில்லையென 1992 காலக்கட்டத்தில் திமுகவுக்கு திரும்பிவந்தார். அப்போது அவரால் வளர்த்துவிடப்பட்ட எம்.பிகள் வேணுகோபால், முருகையன், எம்.எல்.ஏக்கள் பெ.சு.திருவேங்கடம் போன்றோர் திமுகவில் கோலோச்சிக்கொண்டு இருந்தனர். கட்சியில் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1993ல் திமுகவின் முப்பெரும்விழாவில் அண்ணா விருதினை கலைஞர் வழங்கி ப.உ.சவை சிறப்பித்தார்.

102

திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசியல் வரலாற்றில் தவிர்க்கமுடியாத பெயர் என்றால் அது ப.உ.சண்முகம். 1924 ஆகஸ்ட் 15ஆம் தேதி திருவண்ணாமலை நகரத்தில் பிறந்தவர் 2007 ஏப்ரல் 11ஆம் தேதி உடல்நலக்குறைவால் மறைந்தார். அவரின் மறைவுக்கு பின்னர் திருவண்ணாமலை தெற்கு மா.செ அமைச்சர் எ.வ.வேலு ஈசான்யத்தில் சிறிய அளவில் நினைவிடம் அமைக்கச்செய்தார். அவரின் நூற்றாண்டு வரும் ஆகஸ்ட் மாதத்தோடு நிறைவு பெறுகிறது. அவரின் முதல் மனைவி வழியில் ஒரு மகள் மட்டுமே. இரண்டாவது மனைவி விசாலினிக்கு ஒரு மகன். இவரது வாரிசுகள் யாரும் அரசியலில் இல்லாததால் அவரின் சாதனைகளை யாரும் வெளிப்படுத்தவில்லை என்கிறார்கள்.

வடாற்காடு மாவட்ட (வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை) மாவட்ட திமுக செயலாளராக, திமுக, அதிமுக கட்சிகளில் உயர்ந்த அதிகாரமிக்க பதவிகளில் இருந்தவர். எம்.எல்.ஏவாக, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் முதல்முறையாக அமைச்சராக இருந்தார். இவர் அதிகாரத்தில் இருந்தபோது திருவண்ணாமலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு கலைக்கல்லூரி, நகராட்சி பூ மார்க்கெட் கொண்டு வந்தார். நகரத்தில் காந்தி சிலை அமைத்தார். தியாகி அண்ணாமலை பிள்ளை பெயரில் பள்ளி அமைக்க உதவி செய்தார், இப்படி பலவற்றை செய்தவரின் வரலாற்றை, சாதனைகளை சொல்லக்கூட புத்தங்கள் இல்லை. திருவண்ணாமலையில் உள்ள இன்றைய அதிமுகவினருக்கு ப.உ.ச பொதுச்செயலாளராக இருந்தார் என்பது தெரியுமா என்பதுக்கூட தெரியவில்லை.  அவரால் திமுக, அதிமுகவில் அரசியலில் வாழ்வு பெற்றவர்களும், அவரது குடும்பத்தை சார்ந்தவர்களும் பெரியதாக அவரை கொண்டாடாமல் மறந்துவிட்டார்கள் என்கிறார்கள். வருங்கால அரசியல் தலைமுறை மட்டும்மல்ல உள்ளுர் மக்களும்  அவரை தெரியாமலே போகிறார்கள்.

டெல்லிக்கு பாதுஷா, திருவண்ணாமலைக்கு ப.உ.ச. என்றும் திருவண்ணாமலையின் தீபம் என்று அவரது காலத்தில் புகழப்பட்டவருக்கு அவரின் நூற்றாண்டில் அவரது நினைவை போற்றும் வகையில் அவரது பெயர் நிலைத்து நிற்கும் வகையில் திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையத்துக்கு அவரது பெயர் சூட்டவேண்டும் அல்லது அவருக்கு நகரத்தில் மார்பளவில் ஒரு சிலை அமைக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுப்புகின்றனர். அவரின் நூற்றாண்டில் அது செய்யப்படுமா?