Skip to main content

திமுக மிதப்பில் இருந்தால் ஆட்சிக் கனவு அவ்வளவுதான்?!

Published on 15/08/2019 | Edited on 15/08/2019

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணி பெற்ற மிகப்பெரிய வெற்றியும் கடைசியாக கிடைத்த வேலூர் தொகுதி வெற்றியும் திமுக தலைமையை மயக்கத்தில் ஆழ்த்தியிருப்பதாக அந்தக் கட்சிக்குள்ளேயே எச்சரிக்கை குரல்கள் எழுந்திருக்கின்றன. சமீபத்திய அறிவாலய நிகழ்வுகளும், தமிழகத்தின் பல பகுதிகளில் திமுகவினர் அணி அணியாக பாஜக பக்கம் ஒதுங்கும் நிகழ்வுகளும் இதை நிரூபிப்பதாக அந்தக் கட்சியின் பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

 

dmk after vellore elction

 

 

குறிப்பாக அத்திவரதர் தரிசனத்தைப் போல, திமுக தலைவரை சந்திக்க வருபவர்களிடம் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், பணம்படைத்தோர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே ஸ்டாலினின் சிறப்புத் தரிசனம் ஏற்பாடு செய்யப்படுவதாக கட்சிக்காக எதையும் எதிர்பாராமல் உழைத்தவர்கள் குமுறுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் மாவட்டப் பொறுப்புகளில் இருப்போருக்கு எதிரான குழுவினர் திமுகவில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எல்லா வகையிலும் கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசமாகவே இருக்கிறார்கள். லோக்கல் பிரச்சனைகளைத் தாண்டி ஸ்டாலின் மீது அளவுகடந்த பிரியம் வைத்திருக்கிறார்கள். அத்தகைய தொண்டர்களும் பிரமுகர்களும் திமுக தலைவரை சந்திக்க விரும்பி அறிவாலயம் வருகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ஸ்டாலினை எளிதாக சந்தித்து சென்றவர்கள் இப்போது, அறிவாலயத்தில் உருவாகியிருக்கும் புதிய பூசாரிகளைத் தாண்டி ஸ்டாலினை சந்திப்பது இயலாத காரியமாகிவிட்டது என்கிறார்கள்.

இப்படி சந்திக்க வருகிறவர்கள், தங்கள் பகுதிகளில் நிலவும் அரசியல் நிகழ்வுகளையும், திமுகவில் இருப்போரை பாஜகவினர் ஆசைகாட்டி இழுக்க முயற்சிக்கும் நடவடிக்கைகளையும் ஸ்டாலினிடம் முறையிட விரும்புகிறார்கள். திமுகவைச் சேர்ந்தவர்கள் பாஜகவுக்கு செல்வது அதிர்ச்சியளித்தாலும் அதுதான் உண்மை என்று அவர்கள் சொல்கிறார்கள். மத்திய அரசுத் திட்டங்களைப் பெறுவதற்காக பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் பாஜகவுக்கு மாறுவதாக வெளிவரும் செய்திகள் திமுக தலைமைக்கு தெரியுமா தெரியாதா என்பதே அடிமட்ட திமுக தொண்டர்களின் கேள்வியாக இருக்கிறது.

திமுகவைச் சேர்ந்தவர்கள் எப்படி பாஜகவுக்கு செல்கிறார்கள் என்ற அதிர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் கம்யூனிஸ்ட் கட்சிக்கே காலம் காலமாக வாக்களித்தவர்கள் எப்படி பாஜகவுக்கு வாக்களித்தார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால் நிலைமையின் தீவிரம் புரியும்.

நேற்றுக்கூட, சிக்கிம் சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர்கூட இல்லாத பாஜக, எதிர்க்கட்சியாக இருந்த சிக்கிம் மாநிலக் கட்சியிடமிருந்து 10 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, திடீர் புளியோதரை மாதிரி திடீர் எதிர்க்கட்சியாக மாறியிருக்கிறது.

பணத்தாலும், அரசு சலுகைகளை பெற்றுத்தருவதாலும் வாக்காளர்கள் தங்கள் பக்கம் இழுக்கலாம் என்ற திட்டத்தை பாஜக தீவிரமாக அமலாக்கி வருகிறது. இந்த நிலையில் தொண்டர்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டிய தலைவர் ஸ்டாலினை சுற்றி புதிய பூசாரிகள் உருவாகியிருக்கிறார்கள் என்று திமுகவினர் புலம்புகிறார்கள்.

திமுகவிடம் இருந்து இதுவரை அடிமட்ட தொண்டர்கள் எதுவும் பயன் அடைந்ததில்லை. பலன் அடைந்துவிடாதபடி முன்னணி நிர்வாகிகளே தடுத்துவிடுகிறார்கள். காலம் முன்புபோல இல்லை. கொஞ்சம் விட்டிருந்தால் வேலூரில் துரைமுருகனின் மகனை பழிதீர்த்திருப்பார்கள். ஸ்டாலினுக்காக உழைத்த தொண்டர்களால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது. அதிலும் வெளி மாவட்ட திமுக நிர்வாகிகளின் அயராத உழைப்பே வெற்றியைப் பெற காரணமாகியது. முதலில் தன்னால்தான் வேலூரில் கட்சிக்கு செல்வாக்கு இருப்பதாக தோற்றத்தை ஏற்படுத்தும் துரைமுருகன் மாதிரியான ஆட்களின் கொட்டத்தை ஸ்டாலின் அடக்க வேண்டும். இதுபோன்ற சின்ன விஷயங்களை தடுக்கத் தவறியதால்தான் ராகுல் நிலைமை பரிதாபமாக மாறியது என்பதை தலைமை உணர வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள்.

வேலூர் தேர்தலில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் துரைமுருகன் மற்றும் அவருடைய மகனின் படம் மட்டுமே இருந்ததை வெளிமாவட்டத்தில் இருந்து சென்ற நிர்வாகிகள் வேதனையுடன் குறிப்பிடுகிறார்கள். இவருக்கு மட்டும் ஏன் இந்த விதிவிலக்கு? மற்ற மாவட்ட நிர்வாகிகள் இப்படி செய்திருந்தால் தலைமை சும்மா விடுமா என்று கேட்கிறார்கள்.

ஸ்டாலினை, துரைமுருகன் தலைவராக ஏற்றிருக்கிறாரா அல்லது ஸ்டாலினுக்கே தான்தான் தலைவர் என்று எண்ணியிருக்கிறாரா? என்று தேர்தல் வேலைக்கு சென்றிருந்த மாவட்டச் செயலாளர்கள் பொருமுகிறார்கள்.

ஸ்டாலின் இனியாவது அறிவாலயத்தில் இருக்கும்போது தினமும் குறிப்பிட்ட நேரத்தில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினரையும் திமுக அணிகளின் நிர்வாகிகளையும் சந்திப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக திமுகவில் வேகமெடுத்திருக்கும் இளைஞர் அணியைப் போல, மகளிர் அணியையும் சில முன்னுரிமைகளைக் கொடுத்து முடுக்கிவிட்டால் சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக புதிய பலத்துடன் தயாராகும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

திமுக தலைமைக்கு இதெல்லாம் யார் சொல்லப் போகிறார்களோ?

 

 

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.