Advertisment

தேமுதிகவுக்காக எடப்பாடிக்கு பாஜக நெருக்கடி! தொகுதிகளை விட்டுத்தருமா பாமக? உடையும் அபாயத்தில் அதிமுக கூட்டணி? 

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக இரு கட்சிகளும் ஐக்கியமாகிவிட்ட நிலையில், தேமுதிகவை இக்கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என ஏகத்துக்கும் அழுத்தம் கொடுத்து வருகிறது பாஜக தலைமை.

Advertisment

அதிமுக கூட்டணியில் விஜயகாந்தை கொண்டு வருவதில் முதல்வர் எடப்பாடிக்கு ஆர்வம் இருக்கவில்லை. அதனாலேயே, ஆரம்பத்திலிருந்து தேமுதிகவுடன் அதிமுகவினர் பேச்சுவார்த்தையை நடத்தவில்லை. தேமுதிகவுக்காக பாஜகதான் அக்கட்சியுடன் பேசி வந்தது. பிரேமலதா, சுதீஷ் இருவரும் பாஜகவின் மூத்த தலைவர் பியூஸ் கோயலிடம் பேசி வந்தனர்.

Advertisment

vijayagath-bjp

இந்த நிலையில், பாஜக தலைமை கொடுத்த அழுத்தங்களுக்கு பணிந்து தேமுதிகவை கூட்டணிக்குள் இணைத்துக்கொள்ள சம்மதித்த எடப்பாடி, 3 சீட்டுகளுக்கு மேல் தர இயலாது என்பதை வலியுறுத்தியிருந்தார். இதனை தேமுதிக தலைமைக்கு பியூஸ் கோயல் பாஸ் செய்ய, அதனை நிராகரித்தார் பிரேமலதா. இதனால் இடைப்பட்ட சில நாட்கள் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை தடைபட்டது.

ஆனால், தனது முயற்சியை கைவிடாத பாஜக தலைமை தொடர்ந்து கொடுத்த நெருக்கடியும், மிரட்டலும் அதிமுகவை பணிய வைத்தது. அதனைத்தொடர்ந்து பேச்சுவார்த்தை மெல்ல சூடு பிடிக்க, தேமுதிக வைத்த சில பல கோரிக்கைகளை பாஜக தனது கஸ்டடியிலிருந்து நிறைவேற்ற உறுதி தந்த நிலையில், தேமுதிகவுக்கு சீட்டுகளை கூடுதலாக்கி தர வேண்டும் எனவும் உத்தரவிட்டது பாஜக. இதனை தட்ட முடியாமல் ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் எடப்பாடி.

விஜயகாந்திடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் போடுங்கள் என பாஜக தலைமையின் உத்தரவுக்கு இணங்க விஜயகாந்தை சந்திக்க ஓபிஎஸ்சை அனுப்பி வைத்தார் எடப்பாடி. அதிமுக பேச்சுவார்த்தைக் குழுவில் உள்ள கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், தங்கமணி, வேலுமணி, ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் செல்லக்கூடாது; ஓபிஎஸ் தான் போக வேண்டும் என பாஜக தரப்பிலிருந்து எடப்பாடிக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதனால்தான் ஓபிஎஸ் அனுப்பி வைக்கப்பட்டார். அதேசமயம், தனது ஆதரவாளர் ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரையும் அனுப்பினார் எடப்பாடி. ஆனால், ஜெயக்குமாருக்கு பிடிக்காதவரான மீனவர் அணியைச் சேர்ந்த தனது சிஷ்யர் ரமேஷை தன்னுடன் அழைத்துச் சென்று விஜயகாந்தை சந்தித்தார் ஓபிஎஸ் !

vijayagath-ops

விஜயகாந்த் – ஓபிஎஸ் சந்திப்பு குறித்து அதிமுக தலைமை வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘’ தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வருவது அனைத்துமே பாஜகவின் விருப்பப்படியே நடக்கிறது. தற்போது 5 லோக் சபா சீட் , 1 ராஜ்யசபா சீட் தருவதற்கு அதிமுக தலைமை சம்மதித்திருக்கிறது. பாஜக தனது கோட்டாவிலிருந்து ராஜ்யசபா சீட்டை ஒதுக்கித் தரும். இதைத்தான் விஜயகாந்திடம் ஓபிஎஸ் எடுத்துச் சொன்னார்.

ஆனால், விஜயகாந்த்தோ 5-ஐ 6 ஆக உயர்த்தி தருமாறு கேட்கிறார். அதேபோல அந்த 6 லோக்சபா தொகுதிகளில் 4 தொகுதிகள் பாமகவுக்காக உறுதி செய்யப்பட்ட தொகுதிகள். இதனை எப்படி தேமுதிகவுக்காக தர முடியும் ? பாமக ஏற்குமா? அதனால்தான் நேற்று தேமுதிகவுடன் கூட்டணி ஒப்பந்தம் போட முடியாமல் தடை ஏற்பட்டது. அந்த சந்திப்பில், 2014 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக-பாஜக-பாமக கூட்டணி அமைந்த போது எங்களுக்கு 14 சீட்டுகள் ஒதுக்கப்பட்டன. அந்த வகையில் நாங்கள் தான் பெரிய கட்சியாகவும் முதல் நிலை கட்சியாகவுன் அன்றைக்கு கூட்டணியில் இருந்தோம். பாஜகவுக்காகத்தான் சில விசயங்களை அன்றைக்குப் பொருத்துக்கொண்டோம். அதேபோல, 14 சீட்டுகளில் போட்டியிட்டு 6 சதவீத வாக்குகள் வாங்கினோம். அதுவே தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட்ட்டிருந்தால் 13 சதவீத வாக்குகளை வாங்கியிருப்போம். தனித்துப் போட்டியிடலாம் என்கிற முடிவை அன்றைக்கு பாஜக வலியுறுத்தியதால்தான் மாற்றினோமே தவிர கூட்டணிக்காக நாங்கள் ஏங்கவில்லை. ஆனால், இன்றைக்கு பாமகவுடன் எங்களுக்கு குறைவாக சீட் கொடுத்து முடிக்கலாம்னு பார்த்தால் எடப்பாடி ஒப்புக்கொள்ள முடியும்? பாமகவை விட செல்வாக்கு குறைந்த கட்சியா, தேமுதிக? என்றெல்லாம் கொட்டித்தீர்த்திருக்கிறார் பிரேமலதா. அதற்கேற்ப இடையிடையே விஜயகாந்தும் சில வார்த்தைகளை கடுமையாக சொல்லியுள்ளார்.

இதனை எதிர்கொண்ட ஓபிஎஸ்சும் ஜெயக்குமாரும், சீட்டுகளின் எண்ணிக்கையை கூடுதலாக்கி தருகிறோம். அதில் பிரச்சனை இல்லை. ஆனால், பாமகவுக்கு உறுதித் தரப்பட்ட தொகுதிகளை எப்படி தருவது ? என்பதுதான் புரியவில்லை. அதில்தான் சிக்கல் இருக்கிறது. இருப்பினும் பேசிப்பார்க்கிறோம் என சொல்லி விட்டு வெளியேறினார்கள். இந்த சிக்கல்களால்தான் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

விஜயகாந்துடனான சந்திப்பு விபரங்களை எடப்பாடியிடம் ஓபிஎஸ்சும், ஜெயக்குமாரும் ஒப்புவித்தனர். பாமகவின் தொகுதிகளை தேமுதிக கேட்பதையறிந்து இடிந்து போய்விட்டார் எடப்பாடி. அதே வேளை, பியூஸ் கோயலிடமிருந்து எடப்பாடிக்கு ஃபோன் வந்தது. அப்போது, விஜயகாந்த் சந்திப்பில் நடந்ததை அனைத்தும் எனக்கு தெரியும். அதனால், தேமுதிக எதிர்பார்க்கும் தொகுதிகள் பாமகவிடமிருந்தால் அதனை அவர்களிடமிருந்து மாற்றி தேமுதிகவுக்கு ஒதுக்குங்கள். பிரதமர் மோடி சென்னைக்கு வரும்போது கூட்டணி தலைவர்கள் அனைவரும் மேடையில் இருக்க வேண்டும். அதற்கேற்ப விரைந்து முடியுங்கள் என கட்டளையிட்டார்.

ops-ramadoss

பாஜகவை பொருத்த வரைக்கும், பாமகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தை அதிமுக தலைமை திடீரென்று போட்டதை ரசிக்கவில்லை. குறிப்பாக, பாஜக-பாமக இரு கட்சிகளையும் வைத்துக்கொண்டுதான் கூட்டணி பேச்சுக்களை நடத்த வேண்டும் என பாஜக விரும்பியது. அதைத்தான் எடப்பாடியிடம் பாஜக வலியுறுத்தவும் செய்தது. ஆனால், பாஜகவுடன் சரிசமமாக அமர்ந்து தங்களுக்கான கூட்டணி ஒப்பந்ததை முடிவு செய்ய டாக்டர் ராமதாஸ் விரும்பவில்லை. அதனால்தான், பாஜகவின் விருப்பத்துக்கு மாறாக பாமகவுடன் சட்டென்று கூட்டணியை இறுதி செய்தது. அதனால், அதிமுக தலைமை மீது ஏக கோபத்தில் இருந்த பாஜக தலைமை, தேமுதிக விசயத்தில் ஏறி அடிக்கிறது. பாஜகவை குறைந்த எண்ணிக்கையாக 5 சீட்டுகளில் முடக்கிய எடப்பாடியால், இப்போது பாஜகவின் ஏறி அடித்தலை எதிர்கொள்ள முடியவில்லை. பாஜகவின் நெருக்கடிக்கேற்ப தலையாட்டும் எடப்பாடி, தேமுதிகவுக்காக பாமகவை எப்படி சரி கட்டப்போகிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி ! ‘’ என விரிவாக சுட்டிக்காட்டினார்கள்.

இந்த நிலையில், விஜயகாந்தின் சந்திப்பில் நடந்ததையும், பாஜக கொடுக்கும் நெருக்கடியையும் டாக்டர் ராமதாசிடமும், அன்புமணியிடமும் நேற்று இரவே தெரிவித்திருக்கிறார் எடப்பாடி. இதனைத் தொடர்ந்து இன்று ( 5.3.2019 ) முதல்வர் எடப்பாடியை சந்தித்துள்ளார் டாக்டர் அன்புமணி. இந்த சந்திப்பில், தேமுதிகவுக்காக சில தொகுதிகளை விட்டுக்கொடுத்து மாற்று தொகுதிகளை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார் எடப்பாடி ! ஆனால், இதற்கு உடனடியாக சம்மதிக்காத அன்புமணி, டாக்டர் ராமதாஸ் மற்றும் பாமகவின் மூத்த தலைவர்களிடம் கலந்தாலோசித்து விட்டு சொல்வதாக சொல்லி கிளம்பியுள்ளார்.

பாஜகவின் நெருக்கடிக்கும் மிரட்டலுக்கும் பயந்து தேமுதிகவுக்காக பாமக தொகுதிகளை எடப்பாடி கேட்பதால், தொகுதிகளை மாற்றித் தர ராமதாஸ் சம்மதிப்பாரா ? என்கிற பரபரப்பு அதிமுக வட்டாரத்தில் எதிரொலிக்கிறது. தேமுதிகவை எதிரியாக கருதும் பாமக தலைமை, அவர்களுக்காக விட்டுக்கொடுக்காத பட்சத்தில் அதிமுக கூட்டணிக்குள் குழப்பம் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் அதிமுகவின் பேச்சுவார்த்தை குழுவினர்.

aiadmk Alliance dmdk j guru pmk ops_eps vijayagath
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe