ADVERTISEMENT

கடவுளின் தேசத்தில் தீபாவளி..

09:53 PM Oct 18, 2017 | Anonymous (not verified)



கடவுளின் தேசத்தில் தீபாவளி..
-கோவி.லெனின்

இந்தியப் பண்டிகைகளின் ‘சூப்பர் ஸ்டார்’ என்றும் நாடு முழுவதும் கொண்டாடப்படும் மதப் பண்டிகை என்றும் பெயர் பெற்றிருக்கிறது தீபாவளி. ஆனாலும் இந்தியாவின் ஒரு மாநிலமான கேரளாவில் சூப்பர் ஸ்டார் பண்டிகை என்பது தீபாவளி அல்ல.. ஓணம்,

இரண்டுமே புராணங்களின் அடிப்படையில் கொண்டாடப்படும் பண்டிகைகள்தான். இரண்டுமே அசுர குலத்து மன்னர்கள் தொடர்புடைய பண்டிகைகளே!

மாவலி (மகாபலி) மன்னன் சிறப்பாக ஆட்சி செய்து வந்தான். அவன் அசுர குலத்தைச் சேர்ந்தவன். அவனுடைய நல்லாட்சியும் அதனால் மக்களிடம் மாவலிக்கு உருவாகியிருந்த செல்வாக்கும் இந்திரன் உள்ளிட்ட தேவர்களை நடுங்க வைத்தது. போதாக்குறைக்கு, அசுரகுல குருவான சுக்ராச்சாரியார் தலைமையில் யாகம் செய்து பலத்தைப் பெருக்கும் முயற்சியிலும் மாவலி மன்னன் ஈடுபட்டிருந்தான். அதனால் தேவர்கள், திருமாலின் (விஷ்ணு) உதவியை நாடினர்.



திருமால் உடனே வாமன (குள்ள) அவதாரம் எடுத்தார். வாரி வழங்கும் தன்மை கொண்ட மாவலியிடம் யாசகம் கேட்பதுபோல வந்தார். யாகம் முடிந்த நிலையில், யாசகம் கேட்டு வந்த வாமனனைப் பார்த்து சுக்ராச்சாரியாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் மாவலியிடம் எச்சரித்தார். ஆனாலும், மாவலி மன்னன் தன்னிடம் யாசகம் கேட்டவரைத் திருப்பி அனுப்ப மனமின்றி, வாமனனின் தேவை என்ன என்று கேட்டான். மூன்றடி நிலம் வேண்டும் என்றார் குள்ள உருவத்தினரான வாமனன். மன்னனும் சரி என்றான்.

வாக்குறுதி கிடைத்ததும், வாமன உருவத்திலிருந்து விஸ்வரூபம் (பேருரு) எடுத்தார் திருமால். பூமிக்கும் ஆகாயத்திற்குமான அந்த விஸ்வரூபத்தில், ஓரடியால் புவி முழுவதையும் அளந்தார். இன்னொரு அடியால் வானத்தை முழுமையாக அளந்தார். கொடுத்த வாக்குறுதிப்படி மூன்றாவது அடிக்கான இடத்தை மாவலி கொடுத்தாக வேண்டும். அதனால், தன் தலையை நீட்ட, மூன்றாவது அடியை, மாவலி மன்னனின் தலையில் வைத்து, பூமிக்குள் அழுத்தினார் வாமன உருவத்தில் வந்து விஸ்வரூபம் எடுத்த திருமால்.

நல்லாட்சி நடத்திய அசுர குலத்து மன்னனை, கடவுளின் துணை கொண்டு சூழ்ச்சியால் முடித்தார்கள் தேவகுலத்தினர். மாவலி கதை இப்படி என்றால், நரகாசுரன் கதை இன்னொரு வகை.



வாமன அவதாரத்திற்கும் முன்பாக வராக (பன்றி) அவதாரத்தில். பாதாளம் நோக்கி சென்று அசுரனுடன் போரிட்டு இரண்யாட்சன் என்ற அரக்கனை வென்று வந்தார் திருமால். போரிட்ட களைப்பில் இருந்த அவருக்கு, பூமாதேவியின் ஸ்பரிசம் சுகமாக அமைய, இருவரது உறவினால் பவுமன் என்ற மகன் பிறந்தான். அவன் கடும் தவம் செய்து, பெற்ற தாயைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படாதபடி பிரம்மனிடம் வரம் பெற்று நரகாசுரன் என்ற பெயரையும் பெற்றான்.

அவனது ஆட்சியில் மக்கள் வதைபட்டார்களாம். அதனால் திருமால் கிருஷ்ணர் அவதாரம் எடுத்தார். பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்தார். இருவரும் திருமணம் செய்துகொண்டனர். நரகாசுரன் தனது மகன் என்ற நினைப்பு சத்யபாமாவாக மாறியிருந்த பூமாதவிக்கு மறந்திருந்தது. நரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர் தனக்குத் தேரோட்டியாக சத்தயபாமாவை அழைத்துச் சென்றார்.

சண்டையில் கிருஷ்ணர் காயமடைந்து மயக்கமடைந்த போது, தேரோட்டி வந்த சத்யபாமா, நரகாசுரனை எதிர்த்து போர் செய்து அவனை அழித்தார். தன் தாயைத்தவிர வேறு யாராலும் மரணம் வரக்கூடாது என வரம் பெற்றிருந்த நரகாசுரனுக்கு அதன்படியே மரணம் நிகழ்ந்தது.



புராணத்தின்படி கிருதயுகத்தில் திருமால், வராக அவதாரம் எடுத்தார். அந்த அவதாரத்தில் பிறந்த நரகாசுரன், அதன் பிறகு நரசிம்ம, வாமன அவதாரம் கடந்து கிருஷ்ண அவதாரத்தில் வதம் செய்யப்பட்டுள்ளான். கிருதயுகம் முடிந்து, திரேதா யுகமும் முடிந்து, துவாபர யுகத்தில் எடுத்த கிருஷ்ணர் அவதாரத்தில் கொல்லப்படுகிறான்.

திருமாலின் அவதாரங்களால் கொல்லப்பட்ட இரண்டு அசுரர்களையும் ஆண்டுக்கொரு முறை மக்கள் நினைக்கிறார்கள். கிருஷ்ண அவதாரத்தில் கொல்லப்பட்ட நரகாசுரனின் கதையின்மீது அப்படியே நம்பிக்கைக் கொண்டு, ஐப்பசி மாத அமாவாசை நாளில், நரகாசுரன் கொல்லப்பட்டதை இந்தியா முழுவதும் கொண்டாடுகிற நிலையில், வாமன அவதாரத்தால் பழிவாங்கப்பட்ட மாவலி மன்னனின் பெருமைகளை நினைத்து, ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில், பூக்கோலமிட்டும் விருந்து படைத்தும் அவனை வரவேற்கிறார்கள் கேரள மக்கள்.

கடவுளின் தேசம் எனப்படும் கேரளாவில் ஓணம் திருநாளே சிறப்பானது. தீபாவளிக்கு அங்கு முக்கியத்துவமில்லை. கேரளாவில் வேலை-வணிகம் இவற்றிக்காக வந்துள்ள வடஇந்தியர்களே தற்போது தீபாவளியை அங்கு பிரபலப்படுத்துவதில் முனைப்பு காட்டுகிறார்கள். மாவலி மன்னனை வரவேற்பதற்கு பதில், அவனைக் கொன்ற திருமாலின் அவதாரமான வாமனனைக் கொண்டாடவேண்டும் என பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்வா சக்திகள் சொன்னதை கேரள மக்கள் ஏற்கவில்லை. சமூக வலைத்தளங்களில் செமத்தியான பதிலடி கொடுத்துவிட்டு, முன்பைவிட முனைப்பாக ஓணம் திருநாளைக் கொண்டாடி, மாவலி மன்னனை வரவேற்று விருந்து படைக்கிறார்கள்.

கடவுளே ஆனாலும், அவர் அவதாரங்கள் எடுத்து வந்தாலும், தங்கள் மன்னனைக் கொன்றவரைக் கொண்டாடமாட்டோம். மக்கள் நலன் காத்த மன்னனைத்தான் கொண்டாடுவோம் என்கிற சுயமரியாதை மண்ணாக இருக்கிறது கடவுளின் தேசமான கேரளா.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT