ADVERTISEMENT

மோடி செஞ்சாக... கனடா பிரதமர் செஞ்சாக... நாமளும் செய்வோம்! தல தீபாவளிக்கு மட்டுமல்ல... எல்லா தீபாவளிக்கும் இதை செய்வோம்!  

05:45 PM Nov 13, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் தங்களது பாரம்பரிய முறைப்படி ஆடைகள் உடுத்துவர். அந்த வரிசையில் தமிழகத்தில் வேஷ்டி மற்றும் சேலைகள் மிகவும் பாரம்பரியமானது. தமிழகத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகள், காதணி விழா, தீபாவளி பண்டிகை, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட முக்கியமான நாட்களில் மக்கள் பட்டு வேஷ்டிகள் மற்றும் பட்டு சேலைகளை உடுத்தி மகிழ்வர். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உடுத்தும் வகையில் வேட்டிகள் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

மேலும் தீபாவளி பண்டிகை அன்று 'தலை தீபாவளி'யை கொண்டாடும் புதுமண தம்பதிகள் பட்டு சேலை மற்றும் பட்டு வேஷ்டி உடுத்தி தங்களது குடும்பத்தினருடன் கொண்டாடுவதை தமிழக மக்கள் பாரம்பரியமாக கொண்டுள்ளனர். தமிழகம் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள மக்களும் வேஷ்டி மற்றும் சேலையை உடுத்தி மகிழ்கின்றனர். அதேபோல் இந்தியாவில் பல்வேறு மாநில மக்களும் வேஷ்டிகள் மற்றும் சேலைகள் உள்ளிட்ட ஆடைகளை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

கடந்த காலங்களில் வேஷ்டி மற்றும் சேலைகள் கைத்தறி மூலம் தயார் செய்யப்பட்டு வந்தது. இதனால் ஆடைகள் நீண்டநாள் வரை உடுத்தும் அளவிற்கு தரமானதாக இருக்கும். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது விசைத்தறி மூலம் இத்தகைய ஆடைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் தரம் கைத்தறி ஆடைகளை ஒப்பிடும் போது சற்று குறைவாகத்தான் இருக்கும்.

விசைத்தறி காரணமாக கைத்தறி நெசவாளர்கள் நலிவடைந்துள்ளனர். இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர் நெசவாளர்கள். கரோனா காலத்தில் திருமண விழா உள்ளிட்டவை ஒத்திவைக்கப்பட்டிருப்பதாலும், சில நிகழ்ச்சிகள் எளிமையாக நடத்தப்பட்டிருப்பதாலும் பட்டு வேஷ்டிகள் மற்றும் பட்டு சேலைகளின் விற்பனை முற்றிலுமாக நின்று போனது.

தமிழகத்தில் பட்டுச்சேலைக்கு புகழ்பெற்ற மாவட்டம் காஞ்சிபுரம். பட்டு வேஷ்டி மற்றும் காட்டன் வேஷ்டி உள்ளிட்ட ஆடைகளை அதிக அளவில் உற்பத்தி செய்வது சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களே! இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டு வேஷ்டி உள்ளிட்ட ஆடைகள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் இந்த ஆண்டு உலக அளவில் கரோனா பரவல் காரணமாக உற்பத்தி இருந்தும், அதனை விற்பனை செய்ய முடியாத சூழலில் வியாபாரிகள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர்.

இது குறித்து நெசவாளர்கள் கூறுகையில், "ஏற்கனவே எங்கள் நெசவுத் தொழில் நலிவடைந்துள்ளது. தற்போதைய கரோனா பொதுமுடக்கம் எங்களது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்தத் தலைமுறை இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் விஷேச நாட்களில் நமது பாரம்பரிய ஆடைகளான வேஷ்டிகள் மற்றும் சேலைகள் வாங்கி உடுத்த வேண்டும். அப்போதுதான் நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயரும். மேலும் நமது பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்ற முடிவும்". என்று கூறினர்.

கடந்த ஆண்டு சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வந்திருந்தபோது, சீன அதிபருடனான சந்திப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வேஷ்டி அணிந்திருந்தார். அதேபோல் கனடா பிரதமரும் வேஷ்டி அணிந்து பொங்கல் பண்டிகையை கனடாவில் வசிக்கும் தமிழர்களுடன் கொண்டாடினார் என்பது நினைவுக்கூறத்தக்கது. உண்மையில் 1990-2000 காலகட்டத்தை ஒப்பிடுகையில் வேஷ்டி மீதான நாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. அதற்கான அடையாளங்களே, வித விதமான வண்ணங்கள், டிசைன்களில் வேஷ்டி, பாக்கெட் வைத்த வேஷ்டி, சிறுவர்களுக்கான வேஷ்டி உள்ளிட்ட தயாரிப்புகள். நம் பாரம்பரியம், கலாச்சாரம் மீதான ஈர்ப்பும் ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளும் இதற்குக் காரணம். இது இன்னும் அதிகரிக்க வேண்டும். பெரும் நிறுவனங்கள் பெறும் வருவாயை போல நெசவாளர்களும் பெற்று மகிழ வேண்டும். எனவே நெசவாளர்களுக்கு கைக்கொடுக்கும் வகையில் இந்தாண்டு தீபாவளியை நாம் அனைவரும் பாரம்பரிய ஆடைகளை வாங்கி உடுத்தி நெசவாளர்களோடு கொண்டாடுவோம். நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம்.

வேஷ்டியைக் கட்டுவோம்! தீபாவளியைக் கொண்டாடுவோம்! கைத்தறி நெசவாளர்களுக்கு கைக்கொடுப்போம்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT