Advertisment

ஓரியூரில் பாண்டியர் கால சூலக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு

Discovery of Pandian stone inscription at Oriyur

Advertisment

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஓரியூரில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால சூலக்கல் கல்வெட்டு மாவட்டத்தில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருவாடானை அருகில் ஓரியூர் கீழக்குடியிருப்பில் ஒரு கல்வெட்டு இருப்பதாக நாகணி ஆசிரியர் அர்ச்சுனன், ஓரியூர் கண்ணன் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அக்கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தார். இதுபற்றி கல்வெட்டு ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது,“சிவன் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லையில் திரிசூலம் பொறித்த சூலக்கற்கள் நடுவது வழக்கம். சேதுபதி மன்னர் கால சூலக்கற்களில் பெரும்பாலும் கல்வெட்டு இருக்கும். ஆனால், பாண்டியர் கால சூலக்கற்களில் கல்வெட்டு இருப்பதில்லை. சூலம் மட்டுமே இருக்கும். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக பாண்டியர் கால கல்வெட்டுடன் கூடிய சூலக்கல் ஓரியூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஓரியூர் கீழக்குடியிருப்பு கால்வாய் பகுதியில் 2 அடி உயரமும் 1½ அடி அகலமும் உள்ள ஒரு கருங்கல்லில் ஒருபுறம் 10 வரிகள் உள்ள கல்வெட்டும், மறுபுறம் திரிசூலமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் சில எழுத்துகள் தேய்ந்து அழிந்துள்ளன. எனினும் முயன்று படித்து இதன் முழு தகவலும் அறியப்பட்டது.

Advertisment

ஸ்வஸ்திஸ்ரீ எனத் தொடங்கி உ எனக் கல்வெட்டு முடிகிறது. உடையார் திருப்புனவாயிலுடைய நாயனார் தேவதானம் ஓரூரான வானவன் மாதேவி நல்லூர் கீழைக்குறுச்சி காராண்கிழமை நின்ற நிலையன்றாதானான் உலகுய்யவந்த நல்லூர் எனக் கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் சிவன் கோயிலுக்கு ஓரூரான வானவன் மாதேவி நல்லூர் கீழைக்குறுச்சி தேவதானமாக கொடுக்கப்பட்டுள்ளது. தானமாக கொடுக்கப்பட்ட நிலத்தில் பயிரிடும் உரிமை உலகுய்யவந்த நல்லூரைச் சேர்ந்த நின்ற நிலையன்றாதானான் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Discovery of Pandian stone inscription at Oriyur

இது நிலத்தில் பயிரிடும் உரிமை வழங்கும் காராண்கிழமை கல்வெட்டு ஆகும். கல்வெட்டில், தற்போது ஓரியூர் எனப்படும் ஊர் ஓரூரான வானவன் மாதேவி நல்லூர் எனவும் அதன் ஒரு பகுதியான கீழக்குடியிருப்பு கீழைக்குறுச்சி எனவும் குறிப்பிடப்படுகிறது. ஓரியூர் கீழக்குடியிருப்பு திருப்புனவாசல் சிவன் கோயிலுக்கு தேவதானமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. திருப்புனவாசல் ஓரியூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது

ஏற்கனவே உள்ள ஒரு ஊரில் பயிரிடும் நிலங்களை அதிகமாக உருவாக்கி, அவ்வூரை மானியமாக கோயில்களுக்கு மன்னர்கள் அளித்து, பழைய பெயருடன் நல்லூர் என்னும் பின்னொட்டுடன் கூடிய புதிய பெயரும் அவ்வூருக்கு சூட்டப்படும். இக்கல்வெட்டில் வானவன் மாதேவி நல்லூர், உலகுய்யவந்த நல்லூர் ஆகிய இரு நல்லூர்கள் உள்ளன. இதில் உலகுய்யவந்தான் என்பது முதலாம் குலோத்துங்க சோழனுடைய சிறப்புப் பெயர். வானவன் மாதேவி என்பவர் முதலாம் ராஜேந்திர சோழனின் மனைவியும், முதலாம் குலோத்துங்க சோழனின் தாய் வழி பாட்டியும் ஆவார்.

இதில் வானவன் மாதேவி நல்லூர் தற்போதைய ஓரியூர் ஆகும். ஆனால் உலகுய்யவந்த நல்லூர் எங்குள்ளது என அறிய இயலவில்லை. தன் பெயரிலும், தன் பாட்டி பெயரிலும் முதலாம் குலோத்துங்கசோழன் நல்லூர்களை உருவாக்கியுள்ளதை அறிய முடிகிறது.ஓரியூர் தேவதானமாக வழங்கப்பட்ட தகவல் திருப்புனவாசல் கோயில் கல்வெட்டுகளில் இல்லை. இதன் எழுத்தமைதி கொண்டு இக்கல்வெட்டு கி.பி.13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தது எனலாம்” என்றார்.

inscription
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe