Advertisment

பெருங்கற்கால இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டுபிடிப்பு!

Discovery of iron

சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த சரவணன், சிவகங்கை பையூர் பகுதியில் கருப்பு நிற கற்கள் காணப்படுவதாக சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு தகவல் தெரிவித்தார். அவ்விடத்தில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா தலைமையில் சிவகங்கை தொல்நடைக் குழு தலைவர் நா.சுந்தரராஜன், செயலர் இரா.நரசிம்மன், உறுப்பினர் கா.சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Advertisment

இது குறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது; ‘சிவகங்கை அடுத்த பையூரின் வடக்கு பக்கத்தில் அமைந்துள்ள இராகினிப்பட்டி கண்மாயில் 3500 ஆண்டுகளுக்கு பழமையான பெருங்கற்கால இரும்பு உருக்காலை கழிவு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Advertisment

இரும்பு உருக்காலை:

உலகில் மற்றவர்கள் அறியும் முன்னே தமிழர்கள் இரும்பு பயன்பாட்டை அறிந்திருந்தனர். இரும்பை இயற்கையான மூலப்பொருட்களிலிருந்து பிரித்தெடுத்து கருவி செய்யும் தொழில் நுட்பத்தையும் பரவலாக பெற்றிருந்தனர். குடிசைத் தொழில் போல, தேவையான இடங்களில் அவர்களே இரும்பை உருக்கி ஆயுதங்களை உருவாக்கியிருக்கலாம். அப்படியான ஒன்றே இங்கு காணக்கிடைக்கிறது.

குவியல் குவியலாக இரும்புக் கழிவுகள்:

சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் நெடுஞ்சாலையில் பையூர் அருகே வடக்கு பகுதியில் உள்ள இராகினிபட்டி கண்மாயில் ஆறு இடங்களில் அடுத்தடுத்து குவியலாக இரும்புக் கழிவுகள் தென்படுகின்றன. இக்கற்களை உடைத்துப் பார்த்தால் அவை இரும்புகளைப் போல காணப்படுகின்றன.

Discovery of iron

குழாய்கள்:

இரும்பு கழிவுகள் காணப்படும் இடங்களில் சுடுமண் குழாய்களும் காணப்படுவது இரும்பு உருக்காலைகள் இருந்ததை மேலும் உறுதிப்படுத்துகின்றன. இவை இரும்பை வார்த்தெடுக்கவோ அல்லது இக்குழாய் வழியாக காற்றைச் செலுத்தி நெருப்பை அணையாது வைக்கவோ இக்குழாய்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

புறநானுற்றில் காளையார்கோவிலில் இரும்பு உவமை:

'கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய

இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிது'.

- புறநானூறு, 21.

கானப்பேரெயிலின் அரண்களின் சிறப்பையும், அந்த ஊருக்கு உரியவனான வேங்கை மார்பன், உக்கிரப் பெருவழுதியிடம் தோல்வியுற்ற பிறகு, தன் ஊரை மீட்பது, உலையில் காய்ச்சிய இரும்பின் மீது சொரிந்த நீரை மீட்பது போன்ற அரிய செயல் என்று எண்ணி வருந்துவதாகவும் இப்பாடலில், ஐயூர் மூலங்கிழார் கூறுகிறார். இப்பாடலில் கூறப் பெறும் உவமை இப்பகுதியில் அடிக்கடி கண்ணுற்று புலவர் கூறியிருக்கலாம்.

செந்நாக்குழிகள்:

இரும்பு உருக்குவதற்காக மண்ணாலான பெரிய வட்ட வடிவ தொட்டிகளை உருவாக்கி அதில் நெருப்பு உண்டாக்கி அணையாது இரும்பை உருக்க பயன்படுத்தியிருக்கலாம் இவ்வாறான வட்ட வடிவிலான தொட்டிகள், குழிகள் இரும்பு கழிவுகள், கிடைக்கும் இடத்தில் காணக் கிடைக்கின்றன இவைகள் தீயை உமிழ்ந்ததால் சென்னாக்குழிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இராகினிபட்டி கண்மாயிலும் செந்நாக்குழி ஒன்ற காணப்படுவது சிறப்பு.

சூரக்குளம் புதுக்கோட்டை, அரசனேரி கீழமேடு பகுதிக்கு, இடையில் இருப்புப் பாதைக்கு அருகில் இரண்டு வட்ட வடிவிலான சென்னாக்குழிகளும் இரும்பு உருக்கு எச்சங்களும் காணப்படுகின்றன.

சிறப்பாக நடைபெற்ற இரும்பு உருக்கு தொழில்:

இதற்கு முன்பாக சிவகங்கை தொல் நடைக் குழு சிவகங்கை அருகாமையில் உள்ள அரசனேரி கீழ மேடு பகுதியில் இரும்பு உருக்காலை எச்சங்களை செந்நாக்குழியோடு கண்டுபிடித்து வெளிப்படுத்தியிருந்தது, அடுத்தடுத்து இந்த பகுதியில் பெருங்கற்கால இரும்புக் கழிவுகளும் இரும்பு உருக்காலை எச்சங்களும் கணக்கிடைப்பதால் இப்பகுதியில் மிகச் சிறப்பாக இரும்பு உருக்கும் தொழிலும் ஆலைகளும் இருந்திருக்கும் என அறியமுடிகிறது.

அகழாய்வுகளில் இரும்பு பொருட்கள்:

ஆதிச்சநல்லூர், கீழடி, கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை போன்ற இடங்களில் கத்தி, வாள் முதலான இரும்பு பொருட்கள் கிடைத்திருப்பது தொன்மையான காலம் தொட்டு தமிழர்களிடையே இரும்பு பயன்பாடு இருந்ததை உறுதி செய்கிறது.

பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவில்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழமையான சங்ககால கோட்டையின் வாயிலில் பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் காவல் தெய்வமாக இன்றும் மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. அதே பெயரில் அங்கிருந்து பிடிமண் எடுத்து வந்து இராகினி பட்டி கண்மாய் கரையில் பற்பனைக்கோட்டை முனீஸ்வரருக்கு கோவில் கட்டி மக்களால் வணங்கப்பட்டு வருவது பழமையோடு தொடர்புடையதாக உள்ளது என்றார்.

puthukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe