Advertisment

750 ஆண்டுகள் பழமையான துலாக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு

Discovery of 750-year-old Dulagkal inscription

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளம் சல்லிப்பட்டியில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 750 ஆண்டுகள் பழமையான துலாக்கல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisment

துலா அல்லது ஏற்றம்

கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும் ஒருவகை நெம்புகோல் அமைப்பு துலா அல்லது ஏற்றம் எனப்படும். மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான மழைநீர் கிடைக்காமல் கண்மாய், குளங்கள் வறண்டு போகும் காலங்களில் கிணறுகள் தோண்டப்பட்டு பயன்படுத்தப்படுவது வழக்கம். இத்தகைய கிணறுகளை அப்பகுதிகளின் ஆட்சியாளர்கள், வணிகர்கள் போன்றோர் அமைத்துத் தந்துள்ளார்கள். இது பாண்டியர் காலம் முதல் வழக்கத்தில் இருந்துள்ளது. கோயில் அருகில் வெட்டப்பட்டுள்ளவை திருமஞ்சனக் கிணறுகள் என்றும், வழிப்பாதைகளில் உள்ளவை பொது குடிநீர்க் கிணறுகள் என்றும் அறிய முடிகிறது.

Advertisment

இந்நிலையில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர், பாட்டக்குளம் சல்லிப்பட்டி ஸ்ரீபாலாண்டி அய்யனார் கோயில் முன்பு உள்ள ஒரு துலாக்கல்லில் கல்வெட்டு இருப்பதைக் கள ஆய்வின் போது கண்டறிந்து படியெடுத்து படித்து ஆய்வு செய்தனர். இதுபற்றி வே,ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கூறியதாவது...

Discovery of 750-year-old Dulagkal inscription

கல்வெட்டு

பாட்டக்குளம் சல்லிப்பட்டி ஸ்ரீபாலாண்டி அய்யனார் கோயில் முன்பு 7 அடி உயரமும் 1½ அடி அகலமும் உள்ள செவ்வக வடிவிலான ஒரு கல் தூண் உள்ளது. இதன் மேற்பகுதி குறுகலாக அமைந்துள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் 5 வரியில் அமைந்த ஒரு கல்வெட்டு உள்ளது. இதில் “ஸ்வஸ்திஸ்ரீ இத்தன்மம் அரியான் சோறனான விசைய கங்கர் செய்தது உ” என எழுதப்பட்டுள்ளது. இக்கோயில் பாட்டக்குளம் கண்மாய்க் கரையில் அமைந்துள்ளது. இது கிணற்றில் இருந்து நீர் இறைக்கப் பயன்படும் ஒரு துலாக்கல் ஆகும். அரியான் சோறனான விசைய கங்கர் என்பவர் கிணற்றையும், துலாக்கல்லையும் அமைத்துக் கொடுத்துள்ளார். பாண்டியர் காலத்தில் இவர் இப்பகுதியின் ஆட்சியாளராக இருந்திருக்கலாம். இங்கு துலாக்கல் மட்டுமே உள்ளது. கிணறு மூடப்பட்டிருக்கலாம்.

இவ்வூருக்கு மிக அருகில் உள்ள விழுப்பனூரிலும் இதேபோன்ற ஒரு துலாக்கல் உள்ளது. இதில் உள்ள சுந்தரபாண்டியன் கல்வெட்டில், மலைமண்டலத்தைச் சேர்ந்த ஒருவன் கிணறு, துலாக்கல், படிக்கட்டு, தொட்டி அமைத்த தகவல் உள்ளது.

மேலும் விருதுநகரில் இருந்து ஆமத்தூர், மங்கலம் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் வெள்ளூர், விழுப்பனூர், மானகச்சேரி, மாறனேரி, அர்ச்சுனாபுரம் போன்ற ஊர்களில் பாண்டியர் காலத்தில் கி.பி.13-ம் நூற்றாண்டின் இறுதியில் இது போன்ற கிணறுகள் வெட்டப்பட்டுள்ளன. கி.பி.13-ம் நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதிகளில் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியுள்ளதை அறியமுடிகிறது. கல்வெட்டு எழுத்தமைதியைக் கொண்டு இது பிற்காலப் பாண்டியர்களின் கி.பி.13-14-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

inscription viruthunagar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe