Discovery of 13th century Pandiyar period Tamil inscription!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்திலிருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள சோழபுரத்தில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால தமிழ் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisment

சோழபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டிடம் கட்டும் பணியின் போது மண்ணுக்கு அடியில் புதைந்திருந்த கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருநாவுக்கரசு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் போ.கந்தசாமி மற்றும் வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர்களோடு அக்கல்வெட்டை ஆய்வு செய்தார்.

Advertisment

இது குறித்து வரலாற்றுத்துறை பேராசிரியர் கந்தசாமி கூறியதாவது, "மூன்றரை அடி நீளமும், முக்கால் அடி அகலமும் உடைய பட்டைக்கல் ஒன்றில் தமிழில் எழுதப்பட்டுள்ள இக்கல்வெட்டு நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ளது. முதல் வரி சிதைந்துக் காணப்படுவதால் படிக்க இயலவில்லை. மற்ற வரிகளில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.

2. பிரம்மதேயம் ஸ்ரீ சுந்தரபாண்டிய சதுர்வேதிமங்கலத்து நூ

3. ருங் கைக்கொண்டு இக்கோயிலில் ஸ்ரீ வைகானசர்க்கு

4. லிவூட்டாக இட்டேன் காண வினியப் பெருமாள் பிள்

இறைவனுக்குரிய திருவிடையாட்ட பிரம்மதேயமாக விளங்கிய ஸ்ரீ சுந்தரபாண்டிய சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் வைணவத்தின் ஒரு பிரிவினரான வைகானசர் மூலம் பெருமாள் கோவிலுக்கு பணத்தை தானமாக வழங்கப்பட்ட செய்தியை குறிக்கக் கூடிய கல்வெட்டாக அமைந்துள்ளது. எனினும், இதன் தொடர்ச்சியான கல்வெட்டுகளை ஒப்பிடும்போது முழுமையான செய்தியை அறிய முடியும். பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட கோவில் நிலங்களை பிரம்மதேயம் என்று அழைக்கப்படுகிறது. சோழபுரத்தில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உத்தமச் சோழ விணணகராழ்வாரான ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் கோவிலும் மற்றும் விக்கிரம பாண்டீஸ்வரமுடையாரான சிவன் கோவிலும் அமைந்துள்ளது. பெருமாள் கோவில் புனரமைப்பின் போது, இக்கல்வெட்டு இடம் மாறி நாளடைவில் மண்ணில் புதைந்திருக்ககூடும். இப்பகுதியில் ஏராளமான கோவில் கற்கள் சிதறிய நிலையிலும் காணப்படுகிறது.

Discovery of 13th century Pandiyar period Tamil inscription!

சோழபுரத்தை உத்தம சோழ சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தேவியாற்றின் மேற்கு கரையோரத்தில் கிழக்கு பார்த்த நிலையில், அமைந்துள்ள சிவன் கோயில் மாறவர்மன் விக்கிரம பாண்டியன் (கி.பி.1250 முதல் கி.பி.1278 வரை) காலத்தில் சிவன் கோயில் கட்டப்பட்டதாக கல்வெட்டு சான்றிதழ் தெரிவிக்கிறது. சிவன் கோயிலின் தென் மேற்கே அமைந்துள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் கிழக்கு நோக்கியதாக அமைந்துள்ளது. இக்கோவில் உத்தமச் சோழ விண்ணகர் ஆழ்வார் கோவில் என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்பெருமாள் கோயில் கல்வெட்டொன்றில் நந்தா விளக்கு ஒன்று எரிப்பதற்காக ஏழரை அச்சும், சந்தியா தீபம் எரிப்பதற்காக வேண்டி, ஒரு அச்சும் ஆக மொத்தம் எட்டரை அச்சுக்கள் பெருமாள் கோயிலின் திருவிடையாட்ட பிரம்மதேயமான உத்தமச்சோழச் சதுர்வேதிமங்கலத்து நல்லூர் நாராயண பட்டன் என்பவர் வழங்க இவ்வைணவ ஆலயத்தில் பெருமாள் திருவடி பிடிக்கும் பாண்டவ தூதன் யாதவனாகிய அழகிய மணவாளப் பட்டனும் பெற்றுக்கொண்டு பொலிவூட்டாக செலுத்தி பெற ஒப்புக்கொண்டு இருந்தமையை விக்கிரம பாண்டியனின் கல்வெட்டுச் செய்தி கூறுகின்றது.

எனவே, சோழபுரத்தில் சிவன் கோயிலுக்கும் பெருமாள் கோயிலுக்கும் தான, தர்மங்களை பற்றி ஏராளமான செய்திகள் கல்வெட்டுக்களில் எழுதப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டை பெருமாள் கோவிலுக்குள் வைத்து பாதுகாப்பதாக பொதுமக்கள் உறுதியளித்துள்ளதாக பேராசிரியர் கந்தசாமி கூறுகின்றார். தேவியாற்றின் கரையோரம் அமைந்துள்ள இவ்வூரில் ஏராளமான நுண்கற்கருவிகளும், ரோமானிய நாணயங்களும், ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியில் கருப்பு சிவப்பு மண்பாண்ட ஓடுகளும் மிகப் பரவலாகக் காணப்படுகிறது. மேலும் இப்பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொண்டு, இப்பகுதியின் முழுமையான வரலாற்றை வெளிக்கொணர முடியும்". இவ்வாறு பேராசிரியர் கூறினார்.