Skip to main content

பெருங்கற்கால கல்வட்ட எச்சங்கள் கண்டுபிடிப்பு!

Published on 18/09/2023 | Edited on 18/09/2023

 

Discover the stone remains of the Paleolithic era

 

காளையார்கோவில் நகர்ப் பகுதியில் பெருங்கற்கால கல்வட்ட எச்சங்களை சிவகங்கை தொல்நடைக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

 

சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர், புலவர் கா.காளிராசா, செயலர் இரா. நரசிம்மன், கள ஆய்வாளர் கா.சரவணன் ஆகியோர் காளையார் கோவில் பாண்டியன் கோட்டைப்பகுதி மற்றும் காளையார் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்நிலையில் காளையார் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விளையாட்டுத் திடலில் 3000 ஆண்டுகள் பழமையான கல்வட்ட எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது; “கானப்பேர், கானப்பேரெயில்,திருக்கானப்பேர், சோமநாத மங்கலம் என வழங்கப்படும் காளையார் கோவில், சங்ககாலம் முதல் இயங்கிவரும் ஊராகும் இதற்குச் சான்றாக பாண்டியன் கோட்டை திகழ்கிறது.

 

Discover the stone remains of the Paleolithic era

 

பாண்டியன் கோட்டை

காளையார் கோவிலில் நகர்ப்பகுதியின் மையப் பகுதியில் வாள் மேல் நடந்த அம்மன் கோவிலுக்கு வடக்குப் பகுதியில் 33 ஏக்கர் பரப்பளவில் வட்ட வடிவில் அகழி சூழ நிராவிக்குளத்துடன் பாண்டியன் கோட்டை தொல்லியல் மேடாகவும் காடாகவும்  காட்சி தருகிறது. கானப்பேர் கோட்டை பற்றியும் அதன் அகழி பற்றியும் இப்பகுதியை ஆண்ட வேங்கை மார்பனை பாண்டியன் உக்கிரப் பெருவழுதி வெற்றி கொண்ட செய்தி பற்றியும் புறநானூற்றின் 21 பாடல் எடுத்துரைக்கிறது.மேலும் இதற்குச் சான்றாக பானை ஓடுகள் விரவிக் கிடப்பதோடு மோசிதபன் என எழுதப்பெற்ற தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடு, பானை ஓட்டுக் கீறல்கள்,வட்டச் சில்லுகள்,சங்க கால ஓட்டு எச்சம், சங்க கால செங்கல் எச்சங்கள் முதலியன கிடைக்கப் பெற்றுள்ளன.

 

சங்க காலத்திற்கும் முந்தைய ஊர்

பொதுவாக சங்க காலத்தை  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர். ஆனால் அதற்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது பெருங்கற்காலம் எனலாம். நகர்ப்பகுதியிலே இக்கல்வட்டங்கள் காணப்படுவதால் சங்ககாலத்திற்கு முன்பிருந்தே இப்பகுதி மனிதர்களின் வாழ்விடப்பகுதியாக இருந்ததை அறிய முடிகிறது.

 

பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்வட்டங்கள்

இறந்த மனிதனுக்கு மீண்டும் வாழ்வு உண்டு என்ற நம்பிக்கையிலோ நல்லடக்கம் செய்யவோ பெருங்கற்களைக் கொண்டு ஈமச்சின்னங்களை அமைத்த காலங்களை பெருங்கற்காலம் என்கிறோம்.இவ்வாறான கல்வட்டங்கள் பெருங்கற்கள் வட்ட வடிவமாக அடுக்கி காணப்படுகின்றன. 

 

காளையார் கோவிலில் கல்வட்டம்

காளையார்கோவில் தென்றல் நகரை அடுத்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலில் முழுதும் தரையில் புதைந்த நிலையில் அடுத்தடுத்து  கல்வட்டங்கள் எச்சங்களாக காணக் கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு இப்பகுதி பெருங்கற்கால ஈமக்காடாக இருந்ததை அறிய முடிகிறது. மேலும் மேற்பரப்பிலே பெருங்கற்கள் இப்பகுதியில் சாலையோரங்களில் கிடப்பதும் இதற்கு கூடுதல் வலு சேர்க்கின்றன‌. இந்தப் பகுதியில் மற்ற பணிகளின் போது பானை ஓடுகளும் எலும்புகளும் தான் சிறுவனாக இருந்த போது கண்டெடுக்கப்பட்டதாக இப்பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் தெரிவித்தார். இப்பகுதியில் நல்லேந்தல், அ. வேளாங்குளம் போன்ற இடங்களில் சிதைவுறாத கல்வட்டங்கள் பெருமளவில் காணக் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

பாண்டியன் கோட்டையை அகழாய்வு செய்ய சிவகங்கை தொல்நடைக் குழு மாண்புமிகு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களிடம் கோரிக்கை வைத்ததை அடுத்து தொல்லியல் துறை  அவ்விடத்தில் ஆய்வு செய்து முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு செய்யப்படும் என்று கூறிய நிலையில் காளையார் கோவில் நகர்ப்பகுதியில் கல்வட்ட எச்சங்கள் காணக் கிடைப்பது மேலும் ஒரு தரவாக பார்க்கப்படும்” என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

224 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
224 year old inscription discovered

சிவகங்கையில் 1800 ஆம் ஆண்டு நிலதானக் கல்வெட்டை சிவகங்கை தொல்நடைக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

சிவகங்கையில் சிவன் கோயிலுக்கு பின்னால் கல்லெழுத்துடைய கல் ஒன்று கிடப்பதாக கிடைத்த  தகவலின் பெயரில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா, தலைவர் சுந்தரராஜன், செயலர் நரசிம்மன், ஓவியர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் அவ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில், கொல்லங்குடியைச் சேர்ந்த தினேஷ்குமார் கொடுத்த தகவலின் படி சிவன் கோவில் பின்னால் உள்ள பழச்சாறு கடைக்கு அருகில்   ஆய்வு மேற்கொண்டோம், அக்கல்லை அங்கு கடை நடத்தி வரும் பரமசிவம் அவர்களின் அனுமதியோடு நகர்த்தி வாசித்துப் பார்த்ததில் அது 1800 ஆவது ஆண்டு கல்வெட்டு,224 ஆண்டுகள் பழமையானது என்பது தெரிய வந்தது.

சிவகங்கையின் ஐந்தாவது மன்னர்

1729ல் தொடங்கிய சிவகங்கை மன்னராட்சியின் ஐந்தாவது மன்னரான வேங்கன் பெரிய உடையாத் தேவர் முத்து வடுகநாத பெரிய உடையாத் தேவர் கொடுத்த நிலதானக் கல்வெட்டு என்பதை கண்டறிந்தோம்.

இதில் சாலிவாகன சகாப்தம், கலியுக சகாப்தம் குறிக்கப்பெற்றதோடு ரௌத்திரி வருடம் ஆடி மாதம் 26 ஆம் தேதி சுக்கிரபூரம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வழங்கப்பட்ட செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வெட்டு

கல்வெட்டு ஸ்ரீராமஜெயம் என்று தொடங்குகிறது. கல்வெட்டில் மூன்று பக்கங்களில் எழுத்துக்கள் உள்ளன. முதல் பக்கத்தில் 35 வரிகளும் மற்றொரு பக்கத்தில் 35 வரிகளும் இதற்கு இடைப்பட்ட குறுகலான பக்கத்தில் 15 வரிகளும் இடம்பெற்றுள்ளன.

35 வரிகள் இடம்பெற்றுள்ள பகுதியும் மற்றொரு பகுதியில் 35 வரிகள் இடம் பெற்றுள்ள பகுதியும் நிலத்தை தானம் கொடுத்த செய்தியை, சிவகங்கை மன்னர்  வீரப்பட்டனுக்கு நிதானம் கொடுத்த  செய்தி இடம் பெற்றுள்ளது. குறுகலான 15 வரிகளில் இதை எழுதியவர்  விஸ்வாமிதாசன் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.

224 year old inscription discovered

கல்வெட்டுச்செய்தி

மோர்க்குளி எனும் கிராமத்தை நான்கு எல்லை பிரித்து அளவிட்டு சர்வ மானியமாக சடச்சியம்மனை பூசிக்கிற வீர பட்டனுக்கு பரம்பரையாக அனுபவித்துக் கொள்ள இந்த நிலதானம் வழங்கப்பட்டுள்ளது‌.எல்லை பிரிப்பில் முத்தூர் குடியிருப்பு, அரியநாச்சி புரம், மற்றும் பல கண்மாய்கள், கண்மாய் நீர் பிடிப்பகுதிகள் இடம்பெற்றுள்ளன. கல்வெட்டு யாதொரு காரணத்தினாலோ  மோர்க்குளி கிராமத்திற்கு போகாமல் இங்கேயே கிடந்துள்ளது‌. மேலும் இது தொடர்பான செப்பேடு உரியவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம்.

கல்வெட்டுவரிகள் முதற்பக்கம்

ஸ்ரீ ராம ஜெயம் ஸ்வஸ்தி ஸ்ரீமன் மகாமண்டலாதிபன் பாண்டி மண்டல ஸ்தாபனச்சாரியார் சிங்காசனதிபன் ரவி குலதிலகன் ராஜசிகாமணி சிங்கக் கொடியரதிபன் அஷ்டலட்சுமி விலாசம் பொருந்திய ஸ்ரீமது சிவகங்கைச்சீமை  ஆதி நகரத்தாராகிய ஸ்ரீ முத்து அரசு நிலையிட்ட முத்து விசைய ரகுநாத முத்து வடுகநாத பெரிய உடையாத் தேவர் அவர்கள் தர்மசாசனம் பண்ணிக் கொடுத்தபடி சாலிவாகன சகாப்தம் 1722 கலியுகாப்தம் 4902 யின் மேல்செல்லா' நின்ற ரௌத்திரி வருஷம் ஆடி மாதம் 26 ஆம் தேதி சுக்கிரபூரம் உத்திரட்டாதி நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதர்ணத்தில் மோர்க்குழி சடைச்சியம்மனை பூசிக்கிற வீர பட்டனுக்கு அரி(தெலுங்குச் சொல்) னு சாசனம் பண்ணிக் கொடுத்தபடி மோர்க்குளி கிராமத்துக்கு நான்கு எல்லைப்படி கீழ்பார்க் கெல்லை உலகாண்டான் அழகிச்சி பள்ளத்துக்கும் அரியநாச்சி கண்மாய் நீர்ப்பிடிப்புக்கும்

இரண்டாம் பக்கம்

மேற்கு தென்பாக்கெல்லை நம்பி செட்டிக் கண்மாய் நீர் பிடிப்புக்கும் கல்லுச்சேரி தர்மத்துக்கும் தென்கரைக்கும் வடக்கு மேல் பார்க் கெல்லை வீராணிக்கண்மாய் கரைக்கும் முத்தூர் குடியிருப்புக்கும் கிழக்கு குத்து  உசலாம்பாரைக்கும் கிழக்கு வடபார்கெல்லை சூலக்கான கண்மாய் பிறகரைக்கும் அய்யனார் குளத்து கண்மாய் தென் கோடி புகும் இதற்கு இந்நான்கெல்லைக்குள் உட்பட்ட மோர்க்குழி கிராமமாக சர்வ மானியமாக சாசனம் செய்து கொடுத்ததுனாலே இதைச் சேர்ந்த நஞ்சை புஞ்சை திட்டு திடல் குட்டங் குளம் நத்தம் செய் தலை பாசி படுகை மேல் நோக்கிய மரம் கீழ்நோக்கிய கிணறு நிதி நிட்சேப செல தரு பாசன சித்த சாத்தியம் என்று சொல்ல செய்த அட்ட போகமும் சாசனம் செய்து கொடுத்ததனாலே  அச்சந்திரார்த்தமாக புத்திர பரம்பரையாக ஆண்டு அனுபவித்துக் கொள்வார்.

மூன்றாம் பக்கம்

இந்த சாசனத்தை எழுதியவன் உபய சம்பந்த நம் கோத்திரத்தைச் சார்ந்த திருவேங்கடம் ஆசாரியன் குமாரன் விஸ்வாமி தாசன்.

கல்வெட்டு வடிவமைப்பு

செப்பு பட்டயங்களில் இடம்பெறும் நஞ்சை, புஞ்சை, திட்டு, திடல், பாசி, படுகை போன்ற சொற்கள்  இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன.  மேலும்  பல இடங்களில்  கிரந்த எழுத்துடைய சமஸ்கிருத சொற்கள் விரவியதாகவும் ஓரிடத்தில் தெலுங்குச் சொல்லும் இடம்பெற்றுள்ளது‌. குறுகலான பக்கத்தில் இந்தச் சாசனத்தை எழுதியவன் உபய சம்பந்த நம் கோத்திரத்தைச் சார்ந்த திருவேங்கடம் ஆசாரியான் குமரன் விஸ்வாமிதாசன். என்று கிரந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரந்த எழுத்துகள் இடம்பெற்றுள்ள வரிகள் தொல்லியல் துறை அலுவலர்களிடம் மேல ஆய்வு செய்யப்பட்டன, இக்கல்வெட்டு விரைவில் சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

பாஜக தேர்தல் அறிக்கை; ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகைய சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நேற்று (14.04.2024) வெளியிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பாஜக தேர்தல் அறிக்கை குறித்துப் பேசுகையில், “எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில், குழாய் மூலம் எரிவாயு எப்படிக் கொண்டு செல்ல முடியும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கையான செயல் ஆகும். பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு ஆகும். அதாவது 4 கோடி வீடுகளை கட்டி இருந்தால் 52 ஆயிரம் வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளைக் காட்ட முடியுமா?. 

 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

நாடாளுமன்றத்தில் 33 சதவித மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருந்தாலும் அந்த சட்டம் இப்போதைக்கு அமலுக்கு வராது. பெண்களுக்கான 33 சதவித இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய ரயில் விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கெனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல. பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றும் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்தார்.