Advertisment

100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன் 

இன்று முன்னாள் முதல்வர் கலைஞரின் 4ஆவது நினைவுதினமாகும். கலைஞர் குறித்து இயக்குநர் கரு.பழனியப்பன் முன்பு ஒரு மேடையில் பேசியவை இவை...

Advertisment

karu palaniyappan

"எனக்கு முன்பு பேசியவர்கள் எல்லாம் கலைஞருடன் பணியாற்றியவர்கள். ஆனால், நான் என்னை போன்று, 7 கோடி தமிழக மக்களுக்காக ஓயாமல் பணியாற்றிய கலைஞரை பற்றி பேச வந்துள்ளேன். எல்லா மாநிலத்திலும்தான் முதல்வர்கள் இருக்கிறார்கள், இவர் மட்டும் என்ன அப்படி அதிசய முதல்வர் என்றால், முதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே சிறந்த நிர்வாகியாகவும், ஐம்பது ஆண்டு காலம் ஒரு கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இவர் போன்று வேறு யாரும் இல்லையா என்றால், இந்த மூன்று தகுதியும் கொண்ட தலைவர்களில் கவிதை எழுதுபவர்கள் இருப்பார்களா? ஒருவரோ இருவரோ இருப்பார்கள், அதிலும் கலைஞர் இருப்பார். சரி அதுமட்டுமா என்றால் திரைத்துறையில் அவர் இருப்பார். இப்படி எல்லாவற்றிலும் இருக்கும் ஒருவர்தான் கலைஞர். அதனால்தான் இன்றும் தமிழ்நாடு கட்சி பாகுபாடுகளை எல்லாம் தாண்டி ஒருவரை கொண்டாடிக்கொண்டே இருக்கிறது.

கலைஞர் தனது இருபதாவது வயதில், 1944-ஆம் ஆண்டு பழனியப்பன் என்னும் ஒரு நாடகத்தை எழுதுகிறார். அந்த நாடகத்தை ஒரு நாடக நடிகர் சங்கம் நூறு ரூபாய்க்கு வாங்குகிறது. அந்த நூறு ரூபாயை வைத்து திருவாரூரில் தி.க. கூட்டத்தை நடத்தினார். அதன் பின் 1951-ஆம் ஆண்டே அவர் சொந்தமாக கார் வைத்திருந்தார். 1955-ஆம் ஆண்டே அவர் கோபாலபுரத்தின் வீட்டை வாங்கிவிட்டார். அப்போது அவரின் வயது முப்பத்திமூன்று. இதையெல்லாம் எதற்காக சொல்லுகிறேன் என்றால் 1957-ல் எம்.எல்.ஏ ஆவதற்கு முன்னே கலைஞர் சொந்தமாக காரும் வீடும் வைத்து இருந்த கழக நிர்வாகிகளில் அவரும் ஒருவர். இது அனைத்தும் அவர் எழுதியே சம்பாதித்தது. அதன் பிறகு 1957-ல் எம்.எல்.ஏ ஆகுகிறார், அதன் பின் 1962-ல் திமுகவினர் ஐம்பது பேர் எம்.எல்.ஏ ஆகிறார்கள். அதில் கலைஞரும் ஒருவர்.

Advertisment

kalaignar karunanidhi

ஒருவர் வென்றதும் என்ன நினைப்பார்கள்? 'இப்போது வென்றுவிட்டோம் இதோடு இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்துதானே தேர்தல், அப்போது பார்த்துக்கொள்ளலாம்' என்றுதானே நினைப்பார்கள். ஆனால், 1963-ஆம் ஆண்டு கடற்கரைக் கூட்டத்தில் 1967-க்கான தேர்தல் வியூகத்தை வைக்கிறார் கலைஞர், அப்போதுதான் அந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க முடியுமென்று. இவ்வளவு வேகத்தில் சென்றால் எப்படி நம்மால் தாக்குப்பிடிக்க முடியுமென்று உடன் இருந்தவர்கள் எல்லாம் அதிர்ந்து போகின்றனர். அப்போது கலைஞர் சொல்கிறார் இருநூறு தொகுதிகளில் போட்டியிடுகிறோம், ஒரு தொகுதிக்கு ஐந்தாயிரம் என்று மொத்தம் பத்து லட்சம் தேவை என்றார், அந்த பொறுப்பையும் அவரே ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு 1966-ஆம் ஆண்டு விருகம்பாக்கம் பகுதியில் நடக்கின்ற தேர்தல் சிறப்பு மாநாட்டில் அண்ணாவிடம் தான் சொன்னதைவிட ஒரு லட்சம் அதிகமாக மொத்தம் பதினோரு லட்சத்தை நிதியாய் கொடுக்கிறார். அப்போது அண்ணா சொல்லுகிறார் 'உன் அம்மா தெரிந்துதான் உனக்கு கருணாநிதி என்று பெயர் வைத்திருக்கிறார்' என்று.

அதே வருடம் 1967-க்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு பெயராக வாசித்துவந்த அண்ணா, சைதாப்பேட்டை என்று சொல்லி சில விநாடிகள் அமைதியாக இருந்துவிட்டு பதினோரு லட்சம் என்று கூறுகிறார். மொத்த உறுப்பினர்களும் மகிழ்ந்து போகிறார்கள் கலைஞர் அண்ணாவின் அருகில் நிற்கிறார். அதன் பிறகு 1967-ல் முதல்வராகிறார். திராவிடர் கழகத்தின் கொள்கைகளையும் மாநாட்டு தீர்மானங்களையும் ஒவ்வொன்றாக செயல்படுத்த ஆரம்பிக்கிறார். இந்தியா வியந்து திரும்பி தமிழகத்தைப் பார்க்கிறது. எதை எதையெல்லாம் இந்தியா பிற்பாடு செய்ததோ அதை எல்லாம் தமிழகம் 67-ல் இருந்து 77-க்குள் செய்தது."

karunanithi kalaignar karu palaniyappan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe