Skip to main content

ரஜினியின் அரசியல் குறித்து பரபரப்பாக பேசிய பாரதி ராஜா, கலைப்புலி தாணு, பாண்டே, பேச்சாளர் ராஜா!

Published on 09/12/2019 | Edited on 09/12/2019

ஒவ்வொரு ஆண்டும் ரஜினியின் பிறந்தநாளான டிச. 12-ஆம் தேதியன்று நலத்திட்ட உதவிகள், பொதுக் கூட்டம் என பிரமாண்டமாக நடத்துவது வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் வழக்கம். இந்தாண்டு வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மா.செ. சோளிங்கர் ரவி ஏற்பாட்டில் வேலூர் மாவட்டம் (ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உட்பட) சார்பில் வேலூரில் உள்ள தனியார் மண்டபத்தில், பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார். இதில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் "கலைப்புலி' எஸ்.தாணு, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே போன்றோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

 

bharathiraja



விழாவில், தயாரிப்பாளர் "கலைப்புலி' தாணு பேசும்போது, "என் நாடி நரம்பு ரத்தம் அனைத்திலும் ஊறிப்போனவர் என் தலைவர் கலைஞர். அவரை மட்டுமே நான் தலைவராக ஏற்றுக்கொண்டேன். அவருக்கு பின் நான் நேசிப்பது ரஜினியைத் தான். நன்றி மறக்காதவர். அதனாலேயே அவரின் பிறந்தநாள் விழா என்றதும் வந்துவிட்டேன்'' என்றார். பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, "அரசியல் என்பது சாதாரணமானதல்ல. பலம் பொருந்திய தி.மு.க., ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. போன்ற கட்சிகளை சமாளிக்க முடியும் என்கிற உறுதியை ரசிகர்களான நீங்கள்தான் அவருக்குத் தரவேண்டும். ரஜினிக்கு தற்போது வயது 70. அவரால் ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திக்க முடியும்'' என எதார்த்தத்தைப் பேசினார்.

 

rajini fans



"சிவாஜி படப்பிடிப்பு முடிந்து நாங்கள் புனே விமான நிலையத்தில் செக்கிங்கிற்காக வரிசையில் நின்றிருந்தபோது, எங்களைத்தாண்டி ரஜினி வேகவேகமாக ஃபிளைட்டுக்குச் சென்றார். அறையில் இருந்த எனக்கு இரவு அவருடைய உதவியாளர் போன்செய்து, "தலைவர் பேசணும்னு சொல்றார்' எனச் சொல்லி போனை தந்தார். "ஏர்போர்ட்டில் நின்று பேசினால் செக்யூரிட்டி ப்ராப்ளம் வரும், அதனால்தான் பேசவில்லை, தவறாக நினைக்க வேண்டாம்' எனச் சொன்னதும் அதிர்ச்சியாகிவிட்டேன். எவ்வளவு பெரிய மனிதர் நம்மிடம் இப்படிப் பேசுகிறாரே என ஆச்சர்ய மானேன்'' என்றார் பட்டிமன்ற ராஜா.


இயக்குநர் பாரதிராஜா பேசவந்தபோது, ஏதாவது வில்லங்கமா பேசிவிடுவாரோ என பயந்தனர் நிர்வாகிகள் பலரும். "எளிமை மனிதர் என தலைப்பிட்டுள்ளீர்கள். நிச்சயமாக இந்த தலைப்பு அவருக்குப் பொருந்தும். "16 வயதினிலே' ஷூட்டிங் மலைக் கிராமத்தில் நடந்தபோது... ஒரே ஒரு கெஸ்ட்ஹவுஸ் மட்டும் இருந்தது. அங்கிருந்த ரூம்களை நாயகன், நாயகிக்கு தந்துவிட்டோம். நானும், ரஜினியும் அந்த கெஸ்ட்ஹவுஸ் ஹாலில் படுத்துக்கொண்டு பல கதைகள் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம். அப்போது நான் பார்த்த அதே எளிமையான ரஜினியாகத்தான் பெரிய உயரத்துக்கு சென்ற பின்பும் இருக்கிறார். நான் அவரின் அரசியல் நிலைப்பாட்டுக்குள் போக விரும்பவில்லை. அவரது கொள்கை வேறு, என்னுடைய கொள்கை வேறு. அரசியலையும், நட்பையும் நாங்கள் பிரித்தே வைத்துள்ளோம்'' என்றார். 

 

 

Next Story

கட்சியை பாஜகவில் இணைத்த சரத்குமார் 

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Sarathkumar merged the party into the BJP

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

திமுக, கூட்டணி, தொகுதிப்பங்கீட்டை முடித்து வேட்பாளர் தேர்வை தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக, பாமக திடீரென பாஜகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜக கூட்டணியில் உள்ள தமாகா, தமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டி.டி.வி.தினகரனின் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணி வைக்கவும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. அதேநேரம் சமத்துவ மக்கள் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அண்மையில் நடிகர் சரத்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

பாஜக-சமத்துவ மக்கள் கட்சி இடையே விரைவில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய அறிவிப்பாக தனது கட்சியான சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார் சரத்குமார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக தெரிவித்துள்ள சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தது கட்சியின் முடிவல்ல என்றும் இது மக்கள் பணிக்கான தொடக்கம் என விளக்கம் அளித்துள்ளார்.

Next Story

'அன்று அமலாக்கத்துறை; இன்று என்சிபி; பாஜக அரசியல் எடுபடாது'- அமைச்சர் ரகுபதி பேட்டி 

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
'BJP has abandoned the anti-narcotics unit' - Minister Raghupathi interview

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு நேற்று கைது செய்தது. இந்த கைதை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரி, ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை திரைப்படங்களை எடுப்பதில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அமைச்சர் ரகுபதி பேசுகையில், ''ஏற்கனவே வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை இறக்கி விட்ட பாஜக தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவை ஏவி விட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பதவியேற்றது முதல் தற்பொழுது வரை போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைப் பொருள் வழக்கு விசாரணை முடிவடையும் முன்பே டெல்லியில் என்சிபி அதிகாரி ஒருவர் பேட்டியளிக்கிறார்.

என்சிபி அதிகாரியின் பேட்டியை வைத்து அரசியல் செய்யலாம் என பாஜக நினைக்கிறது. ஒன்றிய அரசின் புலன் விசாரணை அமைப்புகள் பாஜகவை எப்படியாவது தாங்கி பிடிக்கலாம் என நினைக்கின்றன. ஜாபர் சாதிக் தேடப்படும் குற்றவாளியாக பிப்ரவரி 16ஆம் தேதி அறிவித்த என்சிபி, 21ஆம் தேதி திரைப்பட விழாவில் பங்கேற்றபோது கைது செய்யாதது ஏன் என்று தெரியவில்லை. ஜாபர் சாதிக் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்காமல் திமுகவிற்கு களங்கம் கற்பிக்க முயற்சி நடைபெறுகிறது.

ஜாபர் சாதிக் மீது 2013ஆம் ஆண்டே  அதிமுக ஆட்சியில் போதைப்பொருள் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அப்பொழுது பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் ஜாபர் சாதிக்கிற்காக ஆஜராகி உள்ளார். ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தியதாகக் கூறப்படும் இடம் டெல்லி தானே தவிர தமிழ்நாடு அல்ல. திமுக அரசுக்கு எதிராக பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்கவே போதைப்பொருள் மாநிலம் போல் சித்தரிக்க பாஜக முயற்சிக்கிறது.

நாட்டிலேயே அதிகமாக போதைப்பொருள் கடத்துவது பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் தான். ஜாபர் சாதிக்கிற்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போதைப்பொருள் தொடர்பாக புகார் எழுந்த உடனேயே ஜாபர் சாதிக்கை உடனடியாக திமுகவிலிருந்து நீக்கி விட்டோம். பாஜக அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது''என்றார்.