ADVERTISEMENT

முஸ்லிம்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று அதிகார வர்க்கம் துடிக்கின்றது - இயக்குநர் அமீர் பேச்சு!

08:36 AM Feb 18, 2020 | suthakar@nakkh…


நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது இதனை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை இயக்குநர் அமீரிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவருடைய அதிரடியான பதில்கள் வருமாறு,

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் போராடங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகின்றது. தமிழகத்திலும் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. சென்னையில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டபோது அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

மக்கள் விரும்பாத, மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் கருப்பு சட்டங்கள் வரும்போது அதனை எதிர்த்து மக்கள் எதிர்வினை ஆற்றுவது என்பது போராட்டங்கள் வாயிலாகத்தான். அதுவும் அரசியலமைப்பு சட்டம் கொடுத்துள்ள வழிமுறையின் படிதான் இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றது. சாதாரண குடிமகனுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளின் அடிப்படையில்தான் அது முன்னெடுக்கப்படுகின்றது. உலகம் முழுவதும் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் போது அதற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடிக்கொண்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். அது இந்த குடியுரிமை சட்டத்தின் மூலம் இந்தியாவிலும் நடைபெற்று வருகின்றது. இந்த கருப்பு சட்டம் தேவையில்லாத ஒன்று. இது எதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மக்கள் மீது திணித்ததே ஒரு வரலாற்றுப் பிழை. என்பிஆர் மற்றும் என்சிஆர் ஆகிய இரண்டும் இந்த நாட்டில் பூர்வகுடிகளாக இருக்கும் மக்களை அகதிகளாக்க கொண்டு வரப்பட்ட சட்டங்களாகவே நாங்கள் பார்க்கிறோம்.

என்ஆர்சி இந்தியாவில் அஸ்ஸாமில் மட்டும் தானே இருக்கிறது?

அஸ்ஸாம் இந்தியாவில் தானே இருக்கின்றது. எப்படி ஒற்றை வரியில் அதை கடந்து போக முடிகின்றது. அஸ்ஸாமில் மட்டும் தானே கொண்டு வந்தார்கள், 13 பேரை தானே சுட்டுக்கொன்றார்கள் என்று எப்படி எளிதாக கடந்து போகிறீர்கள். அஸ்ஸாமில் இருப்பவர்கள் மனிதர்கள் இல்லையா? 19 லட்சம் பேர் என்பது சிறிய எண்ணிக்கையா, ஒவ்வொருவராக எண்ணி பாருங்கள், அப்போதுதான் அவர்களின் எண்ணிக்கை என்பது உங்களுக்கு புரிய வரும்.

ADVERTISEMENT



ADVERTISEMENT

அஸ்ஸாமில் இந்த சட்டம் மூலம் கணக்கிடப்பட்டவர்களில் 9 லட்சம் பேர் மட்டுமே முஸ்லிம்கள். மீதி 10 லட்சம் பேர் இந்துக்கள். நிலமை அப்படியிருக்க தில்லியில் ஜாமியா கல்லூரி போராட்டமாக இருந்தாலும், சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டமாக இருந்தாலும், திருவல்லிக்கேணி என்றாலும் முஸ்லிம்கள் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றது. இது முஸ்லிம்களை தனிமைப்படுத்துவதாக நினைக்கவில்லையா?

ஆளும் பாஜக அரசு இதை முஸ்லிம்களுக்கு எதிரான, சிறும்பான்மை மக்களுக்கு எதிரான சட்டமாக மாற்றவே துடிக்கின்றது. அதுவும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அதனை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிடுகின்றது. அதில் ஓரளவு அவர்கள் வெற்றியும் பெற்றிருக்கிறது. மத்திய அரசு விரும்புவதும் அதைத்தான். இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான சமூகத்தை இந்துக்களாகவும், முஸ்லிம்களாகவும், கிருஸ்துவர்களாகவும் பிரிக்க வேண்டும் என்பதே அதனுடைய எண்ணமாக இருக்கின்றது. அந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டிய பாதையில்தான் ஆளும் பாஜக அரசு பயணிக்கின்றது. இங்கே போராடி கொண்டிருக்கின்ற மாணவர்கள், அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், எதிர்க்கட்சிகள் அனைத்தும் அனைத்து சமூகத்துக்காகவும் தான் சேர்ந்து போராடி கொண்டிருக்கிறார்கள்.

அஸ்ஸாமில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் தான் தற்போது அகதிகள் ஆக்கப்பட்டுள்ளார்கள். அந்த நிலை நாளை தமிழகத்திற்கு வரக்கூடாது என்றுதான் நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம். ஆளும் பாஜக அரசு, அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் இந்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு அதனை மக்கள் மனதில் விதைக்கப்பார்க்கிறார்கள். ஆனால் இது ஒட்டுமொத்த மக்களுக்கான பிரச்சனையாகவே நாங்கள் பார்க்கிறோம். இதை முஸ்லிம்கள் பிரச்சனை என்று குறுகிய எண்ணத்தில் பார்ப்பதே முற்றிலும் தவறான ஒன்றாகவே நாங்கள் கருதுகிறோம்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT