ADVERTISEMENT

நாடாளுமன்றத்தில் வாக்களித்து அதிமுகவும், பாமகவும் படுபாதக செயலை செய்துள்ளார்கள் - இயக்குநர் அமீர் பேச்சு!

05:28 PM Feb 20, 2020 | suthakar@nakkh…


நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது இதனை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை இயக்குநர் அமீரிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவருடைய அதிரடியான பதில்கள் வருமாறு,

ADVERTISEMENT


ADVERTISEMENT


குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் மட்டுமே எதிர்தது போராடுவதை போன்று காட்டுவதற்கு மத்திய அரசு முயல்வதாக நினைக்கிறீர்களா?

இஸ்லாமியர்களுக்கு எதிரான போராட்டமாக மாற்றப்பட்டதையும் தாண்டி காவலர்களுக்கும், முஸ்லிம்களுக்குமான போராட்டமாக இது மாற்றப்பட்டுள்ளது. இதை அரசின் திட்டமிட்ட சதியாகத்தான் நாம் பார்க்கிரோம். முஸ்லிம்களுக்கும், காவலர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தினால் இவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்கள். அதன் மூலம் இந்த போராட்டம் தனிமைப்படுத்தப்பட்டு அதனை அடக்கி ஒடுக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. நடக்கவும் விடமாட்டோம்.

பக்கத்து மாநிலங்களில் இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகின்றது. கேரளா மற்றும் பாண்டிச்சேரியில் இந்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுள்ளது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று சொல்கிறார். அப்படி என்றால் இந்த போராட்டம் எதை நோக்கிச் செல்கிறது?

எடப்பாடி பழனிச்சாமி இந்த சட்டத்தை கொண்டுவர வில்லை. அவர் அதற்கான அதிகாரத்திலும் இல்லை. அவருடைய தலைக்கு மேலேயும் கத்தி தொங்கிட்டு இருப்பதை நாம் பார்க்கிறோம்.


அவர் இந்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்துள்ளாரே?

அதைத்தான் சொல்கிறேன், அவரே மத்தியில் இருக்கின்ற பாஜக அரசு என்ன சொல்கிறதோ அதை கேட்டு செயல்படுத்துகின்ற இடத்தில் தான் இருக்கின்றார். மாநிலங்களவையில் இந்த அதிமுகவும், பாமகவும் வாக்களிக்காமல் இருந்திருந்தால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அவர்கள் நன்மை செய்ததாக இருந்திருக்கும். இந்த படுபாதக செயலை செய்துவிட்டு தமிழகத்தில் அமர்ந்துள்ளார். பாஜகவுக்கு மக்களவையில் பெரும்பான்மை இருந்ததால் அங்கு இந்த சட்டத்தை நிறைவேற்றி விட்டார்கள். ஆனால் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத போது அவர்களுக்கு இந்த அதிமுக எம்பிக்களும், பாமக எம்பியும் ஆதரவளித்து இந்த கருப்பு சட்டத்தை கொண்டுவந்து இந்தியா முழுவதும் போராட்ட களமாக இன்றைக்கு மாற்றி வைத்துள்ளார்கள். அவர்கள் ஆதரவு கொடுக்காமல் இருந்திருந்தால் இந்த சட்டம் வந்திருக்காது. இவ்வளவு போராட்டங்கள் கடந்த 60 நாட்களாக இருந்திருக்காது. ஆகவே இந்த போராட்டங்களுக்கு மிக முக்கிய காரணமாக இவர்கள் இருக்கிறார்கள்.

இப்போதும் கூட இந்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்த சில மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களில் அந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். ஆனால் தமிழக அரசு இதுவரைக்கு அந்த மாதிரியான எந்த நிலைபாட்டையும் இதுவரைக்கும் எடுக்கவில்லை. அவ்வாறு எடுத்திருந்தால் இன்று தமிழகத்தில் நடக்கும் இந்த போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால் வெறும் வாய் வார்த்தைகளால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பில்லை என்று சொல்கிறார்கள். அறவழிப்போராட்டம் நடத்திவந்த பெண்களை அதுவும் நீதிமன்றம் உத்தரவின் படி அவர்களின் வீடுகளுக்கு வெளியே போராட்டம் நடத்தி வந்த அவர்களை காவல்துறையினர் நடத்திய விதம் என்பது ஏற்றுக்கொள்ள கூடிய வித்தில் இருந்ததா, இந்த மக்களிடம் காவல்துறை மிகப்பெரிய அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT