Skip to main content

தினகரன், கமல் - மோடியின் ஸ்பெஷல் உளவுத்துறை ஸ்கெட்ச்!

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

அ.தி.மு.க-தி.மு.க. இருதரப்பும் பதட்டத்துடன் கவனிக்கக்கூடியவராக இருக்கிறார் டி.டி.வி.தினகரன். அவரது அ.ம.மு.க.வுடன் எஸ்.டி.பி. கட்சி கைகோர்த்துள்ளது. பெரியளவில் கூட்டணி அமைக்காததற்கு பா.ஜ.க. போட்டுத் தந்த வியூகம்தான் காரணம் என திடீர் அதிர்ச்சி தருகிறது டெல்லி தரப்பு. 

 

ttv


டெல்லி தலைமையுடன் தொடர்பில் உள்ள அறிவுஜீவிகள் குழுவின் தமிழக வி.ஐ.பி. ஒருவர் நம்மிடம், ""தேர்தல் களம் பற்றி தெரிந்துகொள்ள மத்திய உளவுத்துறையைத் தாண்டி, தனிப்பட்ட முறையில் ஒரு உளவுத்துறையை 3 மாதங்களுக்கு முன்பே உருவாக்கிவிட்டார் மோடி. இதில் அரசு அதிகாரிகள் யாரும் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் 16 ஸ்பெஷலிஸ்ட்டுகள் கொண்ட டீம் செயல்படுகிறது.

 

kamal



தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. கூட்டணியைத் தாண்டி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமைப்பதில் இந்தக்குழு தந்த ஆலோசனைகள் முக்கியமானவை. அத்துடன், தினகரனைப் பற்றி மத்திய உளவுத்துறை சில  விபரங்களை சுட்டிக்காட்டியிருந்தது. அதனை ஆராய்ந்தபோது எடுக்கப்பட்ட முடிவுதான் பலே வியூகம்'' என்றார். 

தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர், ""பா.ஜ.க.வுக்கும் பா.ஜ.க. கூட்டணி வைக்கும் அ.தி.மு.க.வுக்கும் எதிரான வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்குத்தான் செல்கிறது என தமிழகத்திலிருந்து, தங்களது குழுவினர் சொன்ன தகவல்களை டெல்லியில் இருக்கும் தலைமைக் குழு சீரியசாக எடுத்துக்கொண்டது. பா.ஜ.க.வை கடுமையாக தி.மு.க. விமர்சிப்பதாலும், பா.ஜ.க.வுக்கு எதிராக வேறு ஒரு கட்சியோ அல்லது புதிய முகமோ இல்லாததாலும்தான் இந்த வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கு செல்கிறது. அந்த எதிர்ப்பு வாக்குகளை சுவீகரித்துக்கொள்ளும் வலிமையான ஒரு அரசியல் முகம் தேவை என மோடியின் உளவுத்துறை தேர்வு செய்த முகம்தான் தினகரன். 

 

modi



மோடியையும் அமித்சஷாவையும் சந்தித்த இந்த டீம், "பா.ஜ.க.வையும் அ.தி.மு.க.வையும் தினகரன் இன்னும் கூடுதலாக விமர்சித்தால் தமிழகம் முழுவதுமுள்ள சிறுபான்மையினர் உள்ளிட்ட எதிர்ப்பு வாக்குகள் அவரது  கட்சிக்குப் போக அதிக வாய்ப்புகள் உண்டு. எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கு போவதை தடுத்தாலே அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உருவாகும்' என தெரிவித்தது. 

"ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து 1991-ல் நடந்த தேர்தலில் தி.மு.க. வாங்கிய 21 சதவீத வாக்குகள்தான் அக்கட்சியின் உண்மையான பலம். அ.தி.மு.க.வின் வலிமை ஜெ. மரணத்தின்போது 45 சதவீதமாக இருந்தது. இதில்,  தினகரனால் 7 சதவீதமும், எதிர்ப்புகளால் 8 சதவீதமும் என 15 சதவீத வாக்குகள் பிரிந்தாலும் 30 சதவீத வாக்குகள் அ.தி.மு.க.வில் உள்ளது. அதன் கூட்டணி கட்சிகளுக்குள்ள வாக்குகளை கணக்கிட்டால் 7 சதவீத வாக்குகள் கூடுதலாகி அ.தி.மு.க.வின் பலம் 37 சதவீதமாக இருக்கும்.

அதுவே, தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சதவீதத்தை கணக்கிட்டால் 30 சதவீதமாக (21+9) மாறும். அ.தி.மு.க.-பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளான 8 சதவீதத்தையும் சேர்த்தால் 38 சதவீதமாக தி.மு.க. கூட்டணி வலிமைபெறும். அதனால்தான் எதிர்ப்பு வாக்குகளை தி.மு.க.வுக்கு போகாமல் தடுத்து வேறு திசையில் மாற்றிவிட்டால் தி.மு.க. கூட்டணியின் வலிமை குறையும்' என தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டார் மோடி. அவர் தந்த அசைன்மென்ட்படி, தினகரனிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார் அமித்ஷா. அவரது மகன் இருமுறை சென்னைக்கு வந்து தினகரனை சந்தித்து விவாதித்து சென்றார்.

"உங்கள் தலைமையில் பெரிய கூட்டணி அமைக்கக்கூடாது. நீங்கள் சிறுபான்மையினருடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம்; பா.ஜ.க.-அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்கலாம்' என வலியுறுத்தப்பட்டதை ஒருகட்டத்தில் ஒப்புக்கொண்டார் தினகரன். இதுதான் பா.ஜ.க உருவாக்கியுள்ள ரகசிய கூட்டணி'' என்று சுட்டிக்காட்டினார். 

இதுகுறித்து அ.ம.மு.க. சீனியர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘""பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய குடியரசு கட்சி, த.மா.கா., த.வா.க., முஸ்லிம் அரசியல் கட்சிகள் உள்பட பல கட்சிகள் தினகரனிடம் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தின.  காங்கிரஸ் தலைமையும் கூட எங்களிடம் பேசியது. பா.ஜ.க. பிடியில் இருந்ததால் எல்லா கட்சிகளையும் உதறினார் தினகரன். வலிமையான கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. தி.மு.க. கூட்டணிக்குள் செல்லாத இந்திய தவுஹீத் ஜமாத், இந்திய தேசிய லீக், எஸ்.டி.பி.ஐ.போன்ற முஸ்லீம் கட்சிகளை மட்டும் தனது கூட்டணிக்குள் இணைத்துக்கொண்டார் தினகரன். தி.மு.க. கூட்டணிக்கு செல்லும் வாக்குகளை தடுப்பதுதான் இதன் நோக்கம்''’ என்கின்றனர். 

பா.ஜ.க.-தினகரன் ரகசிய கூட்டணி பற்றி தமிழக பா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, "எங்களின் தேசிய தலைமை வகுத்த வியூகங்களில் இதுவும் ஒன்று. கமல் தனித்து நிற்பதன் பின்னணியிலும் இந்த வியூகம் உண்டு. தி.மு.க. ஆதரவு ஓட்டுகள் சிதறவேண்டும். அதேசமயம், தினகரனுக்கும் குக்கர் சின்னம் கிடைத்து வலிமையாகிவிடக்கூடாது. புது சின்னம் கிடைத்தால் பரவாயில்லை என தீர்மானித்தோம். எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்கிறது. தினகரனும் கமலும் பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்கள்'' என்கிறார்கள். 
 

Next Story

'என்னாது எண்ணி முடிக்க இவ்வளவு நாள் ஆகுமா?' -நீதிமன்றம் சொன்ன பதில்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதி வருடத்திற்கு கொண்டு வந்த பொழுது, அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்படுகிறது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது.

nn

இதைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், 'இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 என்ற தொகுதிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது' என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பில், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்' என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

Next Story

“டி.வி முன் மோடி தோன்றினாலே மக்கள் அலறியதுதான் சாதனை” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 Chief Minister M.K.Stalin says When Modi appeared in front of the TV, people screamed

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் வடசென்னை திமுக வேட்பாளர்  கலாநிதி வீராசாமியை ஆதரித்து இன்று (15-04-24) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடசென்னையில் வாக்கு சேகரித்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “பிரதமர் நரேந்திர மோடி வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு. நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா? அல்லது சர்வாதிகாரம் இருக்க வேண்டுமா? என்பதை மக்களின் முடிவு தான் தீர்மானிக்கும். ஓர் இரவில் ஊழலை ஒழிக்க போவதாக அவதார புருஷராக தோன்றி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அறிவித்தார். ஜிஎஸ்டியை அமல்படுத்தி தொழில் முனைவோரையும் மத்திய தர மக்களையும் மோடி கொடுமைப்படுத்தினார். 

கொரோனாவை ஒழிக்க, இரவில் விளக்கு ஏற்ற கூறியும், மணி அடிக்க கூறியும் ஏதோ விஞ்ஞானி போல் மோடி பேசினார். பாஜக தேர்தல் அறிக்கை நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வில்லன். நாட்டுக்கு வரப்போகும் ஆபத்துக்கான ட்ரெய்லர் தான் பாஜகவின் தேர்தல் அறிக்கை. பாஜக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கையாக உள்ளது. மத அடிப்படையில் நாட்டு மக்களை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது” எனக் கூறி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான வீடியோவை அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு செய்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இரவில் டி.வி. முன் மோடி தோன்றினாலே, இந்திய மக்கள் அலறியதுதான் அவரது ஒரே சாதனை! பிரதமராக தொடரமுடியாத அச்சத்தில் பிரிவினைவாதத்தைத் தூண்டியும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை அவதூறு செய்தும், தம் பதவியின் தரத்தையே தாழ்த்துகிறார். ஒருவர் உண்ணும் உணவு பற்றிப் புகார்கூறி வாக்கு சேகரிக்கும் மலிவான செயல் இதுவரை எந்தப் பிரதமரும் செய்யாதது! அம்பேத்கர் இயற்றிய சட்டம் இருக்க வேண்டுமா? ஆர்.எஸ்.எஸ் சொல்லும் சட்டம் இருக்க வேண்டுமா? என்பதை முடிவுசெய்யும் தேர்தல் இது. இந்தியாவில் மதநல்லிணக்கம் நீடிக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.