Advertisment

தோனியின் கவனத்தை ஈர்த்த சி.எஸ்.கே. ரசிகரின் புதுமுயற்சி..! 

Advertisment

2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும்கரோனாவால் முடங்கிக் கிடந்தது. மக்கள் ஒவ்வொருவரும் அவர்களின் பிரச்சனைகுறித்து பேசிக்கொண்டிருக்க, ஐ.பி.எல். ரசிகர்கள் அந்த ஆண்டு ஐ.பி.எல். நடைபெறுமா என பப்ஜி கேம் விளையாடும்போதும் கூட பேசிக்கொண்டிருந்தனர். இந்திய கிரிக்கெட் வாரியமும் என்ன செய்வது எனத் தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தபோது, ஐக்கிய அரபு தங்களது நாட்டில் அந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரை நடத்துவதற்கு அனுமதி கொடுத்தது. அதனைத்தொடர்ந்து 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.பி.எல். நடைபெற்றது.

ஐ.பி.எல். நடைபெறுமா எனும் சோகத்திலிருந்த ரசிகர்கள் ஐ.பி.எல். தொடர் நடைபெறுவதற்கான அறிவிப்பு வந்ததும் உற்சாகத்தில் திளைத்தனர். ஆனால், தல தோனியின் சி.எஸ்.கே.லீக் சுற்றுதாண்டாதது அந்த அணி ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. அதேவேளையில் சி.எஸ்.கே. மீதான விமர்சனமும் வலுத்துக்கொண்டே இருந்தது. அப்போது தமிழக சி.எஸ்.கே. ரசிகர்களின் பார்வையை கடலூர் மாவட்டத்தில் உள்ள அரங்கூர் கிராமத்தின் பக்கம் திருப்பினார் சி.எஸ்.கே. ரசிகர் கோபிகிருஷ்ணன். கடந்த முறை சி.எஸ்.கே.வின் மோசமான தோல்விகளால் தோய்ந்திருந்த தோனி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தனது வீட்டை முழுக்க சி.எஸ்.கே. நிறத்திலும் தோனியின் உருவப்படத்தினாலும் நிறைத்திருந்தார். அப்போது, அவர் நமக்கு அளித்த சிறப்புப்பேட்டியில், “தோனி எப்போதும் சிறந்த ஆட்டக்காரர். எப்போதும் அவர் ‘தல’தான். தோல்விக்கு அவர் மட்டுமே காரணம் என்று சித்தரித்து விமர்சனம் செய்கிறார்கள். வெற்றியைக் கொண்டாடும் நாம், தோல்வியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது நடந்துகொண்டிருக்கும் ஐ.பி.எல். போட்டியிலும் சி.எஸ்.கே.வுக்கும் தோனிக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் புதிய முயற்சியை அவர் எடுத்துள்ளார்.

நக்கீரன் Exclusive ‘ஹோம் ஆஃப் தோனி ஃபேன்’ உருவானது எப்படி? ரசிகர் பகிர்ந்த சுவாரசியம்!

Advertisment

கடலூர் மாவட்டம், ராமநத்தம் அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன், தோனியின் தீவிர ரசிகர். கடந்த முறை வீடு முழுக்க சி.எஸ்.கே.வின் வண்ணத்தால் நிரப்பியிருந்த இவர், இந்த முறை சி.எஸ்.கே. மற்றும் தோனிக்காக ‘ஆல்பம் பாடல்’ ஒன்றை தயார் செய்திருக்கிறார். அதில் தானே பாடியும், நடனம் ஆடியும் உள்ளார்.

தோனியின் தீவிர ரசிகரான கோபிகிருஷ்ணன், வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்த அவர் தனது வீட்டை முழுவதும் மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூசி, வீட்டின் முகப்பில் தோனியின் படத்தை வரைந்தது உலக அளவில் சமூக வலைதளங்களில் பரவியது. தோனி அவருடைய இன்ஸ்டாகிராமில் கோபிகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். வெளியூரில் இருந்து கிரிக்கெட் ரசிகர்களும் அரங்கூர் கிராமத்திற்கு வந்து இவரது வீட்டின் முன்பு நின்று செல்ஃபி எடுத்துச்சென்றனர்.

நடந்து முடிந்த 2021 சட்டமன்றத்தேர்தலின்போது பிரச்சாரத்திற்கு திட்டக்குடி வந்திருந்த திமுக இளைஞர் அணிச்செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், இவரது வீட்டிற்கு வந்து அவரது குடும்பத்தினருடன் செல்ஃபி எடுத்துச் சென்றார். இந்த நிலையில், தற்பொழுது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்கியதும் இந்த முறை சொந்த ஊரான அரங்கூருக்கு வந்த கோபிகிருஷ்ணன், புதுவிதமான முறையில் தோனியை கௌரவப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மற்றும் தோனியை வாழ்த்தி ஆல்பம் பாடல் ஒன்றை எடுக்க திட்டமிட்டார். அதற்கு தானே நடனமும் ஆட திட்டமிட்ட அவர், அதற்காக சென்னையில் இருந்து நடனக்கலைஞர்களை அழைத்துவந்து கடந்த ஒரு வாரமாக நடனம் பழகி அவர்களுடன் இணைந்து அவரே நடனமும் ஆடியுள்ளார்.

முதல் போட்டியில் சி.எஸ்.கே. தோற்றாலும் ரசிகர்கள் மனம் சோர்ந்துவிடாமல் இருக்க இந்த முயற்சியை எடுத்தாக கோபி கிருஷ்ணன் கூறினார். தோனியின் ரசிகர்களுக்கும் உற்சாகம் ஊட்டும் வகையில் ஆல்பம் பாடலை தனது சொந்தப்பணத்தை (இரண்டு லட்சம்) செலவு செய்து எடுத்துள்ளதாகவும், அந்த ஆல்பம் பாடலை சி.எஸ்.கே. அடுத்து விளையாடவிருக்கும் நாளான 16-04-2021 அன்று வெளியிடப்போவதாகவும் தெரிவிக்கிறார். இவர் பாடலை அரங்கூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் படமாக்கி வருகிறார். இதனைப்பொதுமக்களும் கிரிக்கெட் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். மேலும், வரும் 16-04-2021 அன்று நடக்கவிருக்கும் அடுத்த போட்டியில் இருந்து சி.எஸ்.கே. அணி, தல தோனியின் தலைமையில் வெற்றி பெரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Cuddalore CSK
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe