Skip to main content

வாரிசு என்பதாலேயே திமுகவில் தலைவர் பதவிக்கு வந்துவிடலாமா? திமுக எம்.பி. செந்தில் பேட்டி

தருமபுரியில் திமுக வேட்பாளராக களமிறங்கி அன்புமணியை எதிர்த்து வெற்றிபெற்றவர் மருத்துவர் செந்தில். அவர் நக்கீரனுக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சி...
 

முந்தைய பேட்டி: "திருமாவளவனை மட்டுமல்ல அன்புமணியையும் கட்டியணைப்பேன்" - திமுக எம்.பி தடாலடி!  
 

senthil dharmapuri


உங்கள் தாத்தா காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகளில் இருந்துள்ளார். அப்படி இருக்கிற நிலையில், நீங்கள் எப்படி திமுகவில்?

அவர் கட்சியில் இருந்த போதும் கூட என்ன செய்தார்கள், செய்யவில்லை என்று எனக்கு தெரியாது. நான் அரசியலுக்கு வரும்போதே ஒரு முடிவோடுதான் வந்தேன். வெற்றியோ, தோல்வியோ அது என்னை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அதையும் தாண்டி நான் ஒரு பெரியாரிஸ்ட். தற்போது பெரியார் கொள்கைகளை பேசும் ஒரே கட்சி திமுகதான். அந்த வகையில் எனக்கு திமுக மீது ஈர்ப்பு வந்தது.மேலும் சமூக நீதியை பேசும் ஒரு கட்சியாக திமுக இருப்பதால் இயல்பாகவே எனக்கு திமுக பிடித்திருந்தது.


பாமகவிலும்தான் சமூக நீதி பற்றி பேசுகிறார்கள். மாநாடுகளை நடத்துகிறார்களே?

இருக்கலாம்... எனக்கு கலைஞர் மீது உள்ள ஈர்ப்பு... தலைவர் ஸ்டாலினின் உழைப்பு பிடித்திருந்தது. ஏன் எனக்கே பல நேரங்களில் சந்தேகம் வரும். காலையில் தலைவர் தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்கிறார். மாலையில் தருமபுரியில் பிரச்சாரம் செய்கிறார். மருத்துவ ரீதியாகவே இது சாத்தியமில்லை. இந்த இடைப்பட்ட நேரத்தில் தலைவரின் பாதுகாவலர்கள் மாறுவார்கள். கார் ஓட்டுபவர்கள் கூட மாறுவார்கள். ஆனால், அவர் மட்டும் எப்படி இதனை சாத்தியப்படுத்துகிறார். தலைவர் போல 6, 7 பேர் இருப்பார்களோனு நான் கூட விளையாட்டா நினைச்சது உண்டு. இந்த நாடாளுமன்ற வெற்றி கூட தலைவரின் உழைப்புக்குக் கிடைத்த பரிசுதான். இந்த மாதிரியான அணுகுமுறையே திமுகவின் மீது எனக்கு ஈடுபாடு ஏற்பட காரணமாக அமைந்தது.


சமூக நீதிக் கொள்கைதான் உங்களை திமுகவை நோக்கி ஈர்த்ததுனு சொல்றீங்க. ஆனா அன்புமணியை எதிர்த்து அதே சமூகத்தை சேர்ந்த உங்களைத்தானே திமுக வேட்பாளரா போட்டு இருக்காங்க?

அப்படி இல்லை. மற்ற சிறுபான்மை இனத்தை சார்ந்தவர்களைக் கூட தருமபுரி சட்டப்பேரவை தொகுதியில திமுக நிறுத்தி வெற்றிபெற வைத்துள்ளார்கள். அதையும் தாண்டி என்னை நான் குறிப்பிட்ட சமூதாயத்தை சேர்ந்தவன் என்று கருதவில்லை. நான் அனைவருக்கும் பொதுவானவன். தொகுதி மக்களும் என்னை அவ்வாறே என்னை கருதினார்கள்.


பல சீனியர்கள் இருக்கும் போது உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது சரினு நினைக்கிறீர்களா?

திமுக ஜனநாயக கட்சி. விருப்ப மனு, நேர்க்காணல் என்று வேட்பாளர்களை தேர்வு செய்ய பல்வேறு வழிமுறைகளை திமுக பின்பற்றுகிறது. எனக்கு கட்சிக்கு அப்பாற்பட்டு வாக்குகள் வரும் என்றுகூட தலைமை நினைத்திருக்கலாம். 

 

 

senthil dharmapuriஉங்களை வேட்பாளராக்க உதயநிதி ஸ்டாலின் அதிக அக்கறை காட்டியதாக செய்திகள் வெளிவந்ததே?

எனக்கு தனிப்பட்ட முறையில் உதயநிதி அவர்களை தெரியாது. அவரின் பிறந்த நாள் விழாக்களின் போது ஆயிரக்கணக்காணவர்களில் ஒருவனாக அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கலாம். அவர் எனக்காக காட்டிய அக்கறைக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். 


அப்படி என்றால் திமுகவில் உதயநிதியின் கை ஓங்கியுள்ளதாக எடுத்துக்கொள்ளலாமா?

அப்படி இல்லை... தொகுதியில் இருந்து ஏராளமான மக்கள் என்னை வேட்பாளராக்க தலைமைக்கு ஃபேக்ஸ் அனுப்பியிருந்தனர். இதை பரிந்துரை என்ற அளவில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். உதயநிதி அவர்களும் திமுக தொண்டர்தான். அதைத்தாண்டி வேறு எதையும் சிந்திக்க தேவையில்லை.


உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி தலைவராக வரப் போறதா தகவல் வெளியாகி வருகிறதே... திமுகவுல வாரிசா இருந்தாலே தலைவர் பதவிக்கு வரலாம்னு மற்ற கட்சிகாரர்கள் பேசுவது உண்மையாகாதா?

இந்தத் தேர்தல்ல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திமுகவிற்கு வாக்களித்துள்ளனர். அவர்களை முறையாக வழிநடத்த வேண்டும். நாங்களும் கூட உதயநிதி இளைஞர் அணிக்கு வர வேண்டும் என்று கோரியிருந்தோம். அருமையாக பிரச்சாரம் செய்திருந்தார்.


கொள்கை சார்ந்து என்ன பேசினார்?

இப்ப அவரு வந்தது தேர்தல் பிரச்சாரத்துக்காக. இதனுடைய நோக்கமே வாக்குகளை கவர வேண்டும் என்பதே. அவர் ஒரு நடிகரும் கூட. அந்த பலமும் எங்களுக்கு உதவியது. இன்னும் வரும் காலங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போது கொள்கை ரீதியாகவும் தன்னுடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்வார்.
 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்