ADVERTISEMENT

களை கட்டும் தர்மபுரி-கிருஷ்ணகிரி தொகுதிகள் !

11:50 AM Mar 21, 2019 | Anonymous (not verified)

கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. வேட்பாளராக கே.பி.முனுசாமி களமிறங்கும் நிலையில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசின் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது. தி.மு.க.வில் சுகவனம் எக்ஸ். எம்.பி வெற்றிச்செல்வன், அண்மையில் இணைந்த மதியழகன் என 42 பேர் விருப்பமனு தாக்கல் செய்த நிலையில் ராகுலே நேரடியாக கிருஷ்ணகிரியை கேட்டதால் காங்கிரசுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி வேட்பாளராக விரும்பி டாக்டர் ஏ. செல்லகுமார், நடிகை குஷ்பு, ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ஆகியோர் விண்ணப்பித்துள்ள நிலையில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவர் எல்.சுப்பிரமணியன் செல்லகுமாரையே ஆதரித்துள்ளார். தி.மு.க. நிர்வாகிகளுடனும் நெருங்கிய நட்பில் உள்ளார்.

ADVERTISEMENT


அ.தி.மு.க. முனுசாமி தனக்கான வேலையில் ஈடுபட தற்போதே களம் இறங்கியுள்ளார். அ.தி.மு.க. தரப்பில் 50 சி வரை களமிறக்கும் என்கிறது மேலிடத் தகவல். இன்னொருபுறம் கே.பி.முனுசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி மேற்கு மாவட்டத்திலும், கிழக்கு மாவட்டத்தில் பர்கூர் தம்பிதுரையின் விசுவாசியான பர்கூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரனும், சில பல வேலைகளில் உள்ளனராம். கிருஷ்ணகிரியில் முன்னாள் மா.செ.வான கோவிந்தராஜ் தன் பதவியை பறித்து அசோக்குமாருக்கு கொடுத்த கோபத்தில் முனுசாமிக்கு எதிராக உள்ள நிலையில் ஊத்தங்கரையில் ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், மத்தூரில் செயலாளர் ஹரிராமுலு ஆகியோரும் அதே பாணியில் இருப்பதால் எல்லோரையும் சரிக்கட்டும் பணி வேகமாக நடக்கிறது. காங்கிரஸ், அ.தி.மு.க., அ.ம.மு.க. என மும்முனைப் போட்டியை சந்திக்கிறது கிருஷ்ணகிரி.

ADVERTISEMENT


எதிர்பார்ப்பிற்குரிய தர்மபுரி எம்.பி. தொகுதியில் சிட்டிங் எம்.பி. பா.ம.க. அன்புமணியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளராக டாக்டர் செந்தில் குமார் களமிறக்கப்பட்டுள்ளார். அ.ம.மு.க. முன்னாள் அமைச்சர் பழனியப்பனை நிறுத்துமானால் இங்கும் மும்முனை போட்டி நிலவும். தர்மபுரி வன்னியர் பெல்ட் என்பதால் அன்புமணிக்கு எதிராக அதே வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களையே தி.மு.க.வும் அ.ம.மு.க. வும் நிறுத்தியுள்ளன. இதனால் நிச்சயம் பா.ம.க.வின் வாக்கு வங்கி பிரியும் என்கிறார்கள்.


பா.ம.க. மீது அதிருப்தியை வெளிப்படுத்திய காடுவெட்டி குருவின் குடும்பமும், பா.ம.க.வுக்கு எதிராக நிற்கும் வன்னியர்களுக்கு வாக்கு சேகரிக்க முனைப்பாக உள்ளது. அ.தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்குமான அடிமட்ட நிலை ஒருங்கிணைப்பு குறைவாக உள்ள நிலையில், தி.மு.க. தரப்பிலும் கடுமையாகப் போராட வேண்டிய நிலை உள்ளது.தடங்கம் சுப்பிரமணியின் வேட்பாளர் சாய்ஸ் வழக்கறிஞர் மணி. ஆனால் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் ஆதரவாளர்தான் தற்போது களமிறக்கப்பட்டுள்ள செந்தில்குமார். வன்னியர் சமூக வாக்கு 3 பிரிவாகச் செல்வதால் தொகுதியில் உள்ள தலித் மற்றும் பிற சமூகத்தினர் ஆதரவை தி.மு.க. எதிர்பார்க்கிறது.

-அ.அருண்பாண்டியன்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT