ADVERTISEMENT

தர்மபுரியில் 5 தலைமுறையை சேர்ந்த 132 பேர் ஒரே இடத்தில் கூடி கொண்டாடிய பொங்கல் விழா! நெகிழ்ச்சியால் களிப்படைந்த இளம் தலைமுறை!!

09:22 AM Jan 22, 2020 | santhoshb@nakk…

மானுட வாழ்வின் முக்கிய கூறுகளாகப் பார்க்கப்படும் உறவுமுறைகளும், பண்பாட்டு விழுமியங்களும் காலவெள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வருகின்றன. காலங்காலமாக நம்மிடையே இருந்து வந்த பல நடைமுறைகள் முற்றாக அழிந்தும் போயிருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி, ஒரே அறைக்குள் நாம் இருந்தாலும், நம்மிடையே தனித்தனி உலகத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. ஆனால், சிதறிக்கிடக்கும் உறவுகளை ஒன்றிணைப்பதிலும் அதே தொழில்நுட்பம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதுதான் ஆகப்பெரும் விந்தையும்கூட.

ADVERTISEMENT


தர்மபுரி மாவட்டம் உங்கரானஹள்ளியைச் சேர்ந்த செந்தில்குமார், இந்திய ராணுவத்தில் மேஜராக, அந்தமான் ரெஜிமென்ட்டில் பணியாற்றுகிறார். பல்வேறு ஊர்களில் சிதறிக்கிடக்கும் தனது சொந்த பந்தங்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் இறங்கினார். பொங்கல் விடுமுறையில் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்றுசேர்த்து விட வேண்டும் என்று தீர்மானித்த அவர், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக இதற்கான பணிகளைச் செய்து வந்தார்.

ADVERTISEMENT


செந்தில்குமாரின் அண்ணன் சீனிவாசன். நாட்றம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். சொந்த பந்தங்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் செந்தில்குமாருடன் பெரிதும் மெனக்கெட்டிருக்கிறார்.


அடிப்படையில் காணிக செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த இவர்களது பூர்வீகம், ஆந்திர மாநிலம். சில நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த இச்சமூகத்தினர்தான், மாடுகள் பூட்டி மரச்செக்கு எண்ணெய் பிழியும் தொழிலில் முன்னணியில் இருந்தனர். இச்சமூகத்திலும் இரண்டு பிரிவுகள் உண்டு. இரட்டை மாடுகள் பூட்டி மரச்செக்கில் எண்ணெய் பிழிபவர்களை 'வாணிய செட்டியார்' என்றும், ஒற்றை மாடு பூட்டியவர்கள் 'காணிக' அல்லது 'காண்ட்லா செட்டியார்' என்றும் அழைக்கப்படுகின்றனர்.


கார்ப்பரேட் யுகத்தில் எல்லாமே இயந்திரமயமாகிய சூழலில் பாரம்பரியமாக செய்து வந்த தொழில் பெரிதும் பாதிக்கப்படவே, பலர் வேலைதேடி வெளியூர்களுக்கு படையெடுக்கும் நிலை ஏற்பட்டது. அதில் சிக்குண்ட ஏனையோர் போலவே இச்சமூகமும் சுழலில் சிக்கியது. இன்று பலர் வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் சாப்ட்வேர் துறைகளிலும் பணியாற்றுகின்றனர். தர்மபுரியில் மொத்தமாக பத்தாயிரத்துக்கும் குறைவாகவே இச்சமூகத்தினர் வசிப்பதாகச் சொல்கின்றனர்.



இந்த நிலையில்தான், சீனிவாசன் & செந்தில்குமார் சகோதரர்களின் முயற்சியால் அவர்களின் 7 குடும்பங்களைச் சேர்ந்த நான்கு தலைமுறை உறவுகள் ஜன.19, 2020ம் தேதி, சொந்த ஊரான உங்கரானஹள்ளியில் சந்தித்துள்ளனர். அங்கே, தங்கள் மூதாதையர்களான நாராயணசெட்டி- வெங்கட்டம்மாள் தம்பதியின் உருவப்படங்களை வைத்து மலர்கள் தூவி வழிபட்டுள்ளனர். அதன்பின்னர் உறவினர்கள் அறிமுகம், பழைய நினைவுகள் பகிர்வு, ஆட்டம் பாட்டம் என பல நெகிழ்வான நிகழ்ச்சிகளுடன் பொழுதைக் கழித்திருக்கிறார்கள்.


இது தொடர்பாக மேஜர் செந்தில்குமார்(38) நம்மிடம் பேசினார்.


''உறவினர்களின் திருமணம் உள்ளிட்ட வீட்டு விஷேங்களுக்கு போகும்போது, நாங்கள் பலரை உறவுமுறை சொல்லித்தான் அன்போடு நலம் விசாரிக்கிறோம். ஆனால், பலருக்கு அந்த உறவுமுறைகள் தெரிவதில்லை. மூன்றாம் நபர்களிடம் பேசுவதுபோல பேசிவிட்டு நகர்ந்து விடுகின்றனர். நாராயணசெட்டி- வெங்கட்டம்மாள் தம்பதிக்கு நான்கு மகள்கள்; மூன்று மகன்கள் என மொத்தம் ஏழு பிள்ளைகள். இவர்களுக்கு பிறந்த வாரிசுகளின் பிள்ளைகளுக்கு உறவுமுறைகள் இடையேயான கண்ணிகள் அறுந்து தொடர்பற்று இருக்கிறது.


எங்கள் பெரியப்பாக்கள் ராஜூ, வெங்கடேசன் ஆகியோரிடையே ஏதோ மனஸ்தாபங்களால் பேச்சுவார்த்தையே இல்லை. ஆக, எங்கள் சொந்தங்களை ஒன்றிணைப்பது, அதன்மூலமாக உறவுமுறைகளை எல்லோரும் தெரிந்து கொள்வது, குடும்ப பாரம்பரியத்தை பலப்படுத்துவது ஆகியவற்றை மையப்படுத்தி, எல்லாரையும் ஒன்றிணைக்கும் வேலைகளைச் செய்தோம். நான் மட்டுமின்றி, என்னுடைய அண்ணன் சீனிவாசன், பெரியப்பா ராஜூவின் மகன் ஜனார்த்தனன் ஆகியோர் இதற்கான வேலைகளை சமூக வலைத்தளங்கள் மூலம் மேற்கொண்டோம்.


தமிழ்நாட்டில் பல ஊர்களில் இருக்கும் உறவினர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வந்திருந்தனர். தாத்தாவுக்குச் சொந்தமான சொந்த விவசாய நிலத்தில் எங்கள் சந்திப்பு நடந்தது. இளம் தலைமுறையினர் எல்லோரும் கைகுலுக்கி, கட்டிப்பிடித்து அறிமுகப்படுத்திக் கொண்டோம். நீண்ட காலமாக பேசாமல் இருந்த இரண்டு பெரியப்பாக்களும் கூட அவர்களின் வாரிசுகளிடம் நன்றாக சிரித்துப் பேசினார்கள். அவர்களை அருகருகே உட்கார வைக்கத்தான் முடிந்ததே தவிர இப்போதும் பேச வைக்க முடியவில்லை. அநேகமாக அடுத்த ஒன்றுகூடலில் அதுவும் நிகழும்,'' என்றார் செந்தில்குமார்.


உறவுகளின் சங்கமத்திற்கு வந்திருந்த பெண்களுக்கு தாய் வீட்டு சீதனமாக எல்லாருக்கும் கை நிறைய வளையல்களை அணிவித்துள்ளனர். ஆண்கள், சிறுவர்கள் பலர் அங்கிருந்த கிணற்றில் குதித்து நீச்சல் அடித்து குதூகளித்துள்ளனர். ஒரே ஊரைச் சேர்ந்த, ஒரே பள்ளியில் பயிலும் இரண்டு சிறுவர்கள் இத்தனை ஆண்டுகளாக தாங்கள் இருவரும் நெருக்கமான உறவினர்கள் என்பதை அறியாமல் இருந்து வந்துள்ளனர். இந்த சங்கமத்தில் அந்தச் சிறுவர்களும் கட்டிப்பிடித்து உறவு கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். சிலர், தங்கள் பழைய நினைவுகளைச் சொல்லும்போது பலரும் நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டுள்ளனர்.


இதுபற்றி சீனிவாசன் (41) கூறுகையில், ''இந்த சங்கமத்தில் ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த சஷ்திகா, அவருடைய தாயார் சங்கீதா, அவருக்கு தாயார் ஜோதி, சஷ்திகாவின் தாத்தா ராஜூ ஆகியோரும் கலந்து கொண்டனர். ராஜூ - ஜெயலட்சுமி - சுமதி - ஜனனி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அடுத்தடுத்த தலைமுறையினரும் கலந்து கொண்டனர்.


எங்கள் வகையறாவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல வாரிசுகளின் குடும்பத்தினர் சந்திப்பது இதுதான் முதல்முறை. இந்த நிகழ்ச்சியில் பெரியவர்கள் 45 பேர்; மற்றவர்கள் சிறுவர்கள். காலை 10 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை எங்கள் சந்திப்பு நடந்தது. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொள்ளவும், உறவுகளை அறிமுகப்படுத்திக் கொள்வதிலுமே அதிகம் நேரம் போனது,'' என்றார்.


சேலத்தைச் சேர்ந்த கவுசல்யா சரவணன், ''எங்க பாட்டியை பாயம்மா. தாத்தாவை பாய் தாத்தா என்றுதான் அழைப்போம். இப்போது வரைக்கும் அவர்களின் உண்மையான பெயர்கள் எங்களுக்கு தெரியாது. நான் சிறுமியாக இருக்கும்போது எங்க பாயம்மா நிறைய கதைகள் சொல்லி இருக்காங்க. புராண கதைகள், ஹிரண்யகசிபு கதைகள், ராமாயண கதைகள் எல்லாம் சொல்வாங்க. பாட்டி சொன்ன கதைகளின் பாத்திரப் பெயர்கள் இப்போதும் நினைவில் இருக்கு. பாயம்மா இருக்கும்போதும் பொங்கல் கொண்டாடி இருக்கோம். அவர்கள் இல்லாதது வருத்தம்தான் என்றாலும், இந்த உறவுகளின் சந்திப்பில் அந்த துயரம் மறைந்து விட்டது,'' என நெகிழ்ச்சியுடன் சொன்னார்.


''பாயம்மா, பாய் தாத்தாவின் பேத்தியுடைய பேத்தி நான். ஐந்தாம் தலைமுறைப் பெண். எனக்கு என் சொந்தக்காரர்கள் யார் யார்? எங்கெங்கெல்லாம் இருக்கிறார்கள் என்றே தெரியாது. இங்கு வந்துதான் தெரிந்து கொண்டேன். இந்த நிகழ்ச்சியை மறக்கவே முடியாது,'' என்கிறார் பாலஹள்ளியைச் சேர்ந்த ஜனனி.


மதியம், எல்லோருக்கும் மட்டன் பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது. கல்கோணா, தேன்மிட்டாய், கடலை உருண்டைகள் கொடுத்து, இதுதான் உண்மையான 'காணும் பொங்கல்' என்று சொல்லும் அளவுக்கு, உறவுகளின் சந்திப்பை தித்தித்திப்புடன் நிறைவு செய்திருக்கிறார்கள், பாயம்மா, பாய் தாத்தாவின் வகையறாக்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT