Skip to main content

தேவதாசிகளின் உண்மை வரலாறு!

Published on 31/12/2019 | Edited on 31/12/2019

தேவதாசி என்ற வார்த்தை அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, தேவதாசி என்று அழைக்கப்பட்டவர்கள் யார்? அவர்கள் எப்படி உருவானார்கள்? அந்த வரலாற்றின் கரு எங்கு உற்பத்தியாகியது? இப்போது அந்த வார்த்தைக்கு கற்பிக்கப்படுகிற  அர்த்தம் நிஜம்தானா? என்பது பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்தோம். அதன் விளைவே இந்த வரலாற்று சுருக்கம்.
 

தேவதாசி என்பது வடமொழிச் சொல் என்கிறார்கள். கி.பி.ஆறாம் நூற்றாண்டில்தான் இந்த தேவதாசி முறை புழக்கத்தில் இருந்தது என்று சிலர் கூறினாலும், சிந்து சமவெளி நாகரிக காலத்திலும், அதற்கு முந்தைய வேத காலத்திலும் இந்த பழக்கம் நடைமுறையில் இருந்தது என்று ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

devadasi true history temples mandapam


ஆலயங்களில் இசை, நடனம் உள்ளிட்ட கலைகளின் வழியாக சேவையாற்றியவர்களே தேவதாசிகள் என்று அழைக்கப்பட்டனர். சமூகத்தில் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த பெண்கள் ஒரு பகுதி ஆண்களால் பாலியல் பொருளாக ஆக்கப்பட்டனர் என்கிறது வரலாறு. தேவதாசி என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே உயர்ந்தபட்ச கொதிநிலைக்கு சிலர் ஆளாவது ஏன் என்பதற்கு முடிந்த அளவுக்கு விளக்கம் சொல்வதே நமது நோக்கம்.
 

மிகப் பழமையான காலத்திலேயே தேவதாசி முறை இருந்திருக்கிறது. இந்தியாவின் தொன்மை நாகரிகம் என்று கருதப்படும் சிந்து சமவெளி நாகரித்திலேயே நடனக்கலை முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது. நாட்டியப் பெண்மணியை சித்தரிக்கும் மிகச்சிறிய வெண்கலச் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆரியர்களின் ரிக் வேதத்திலும் கூட நடனமாதுகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. உஷா என்ற ஆடல் அரசியை ரிக் வேதம் வர்ணிக்கிறது. அதன்பிறகு வந்த புராணங்களிலும் இந்த நடனமாது கதாபாத்திரம் வருகிறது.
 

தேவதாசி என்ற வார்த்தை பலவிதமாக பயன்படுகிறது. ஆந்திராவில் மாதங்கி என்றும் விலாசினி என்றும், கொங்கனியில் நாயகி என்று், மராட்டியத்தில் பாசவி என்றும், கர்நாடாகவில் சூலி, சானி எனவும், ஒடிஸாவில் மக எனவும், உத்தரப்பிரதேசத்தில் பாலினி எனவும் தேவதாசிகளை அழைக்கிறார்கள்.

devadasi true history temples mandapam

சங்க இலக்கியங்கள் கலையறிந்த பெண்களை பதியிலாள், மாணிக்கம், தளிச்சேரி, பெண்டுகள் என்று அடையாளப்படுத்துகின்றன. இந்த வார்த்தைகளின் அர்த்தம் எல்லா வகையிலும் அந்தப் பெண்களை பெருமைப்படுத்துவதாகவே இருப்பதாக அறிஞர்கள் கூறியுள்ளனர். சைவ மற்றும் வைணவ மதங்களில் உள்ள ஆகமங்கள் இத்தகைய பெண்களை ருத்ர கன்னிகைகள் என்றே குறிப்பிடுகின்றன. இவர்கள் உடலாலும், மனதாலும் தூய்மையானவர்கள், சொல் மற்றும் செயலில் அறிவு மற்றும் பொறுமை உடையவர்கள். தோற்றத்தில் இளமையும் மென்மையும் உடையவர்கள் என்று தெரிவிக்கிறது.
 

சைவ சமயக் குறவர்களில் முதன்மையான திருநாவுக்கரசரும் தேவதாசிகளை போற்றிப் பாடுகிறார். சுந்தரமூர்த்தி நாயனாரின் காதல் மனைவி பறவை நாச்சியார் ஒரு தேவதாசி என்கிறார்கள். இவர்கள் இருவரின் காதலுக்கு சிவபெருமான் தூது சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. தேவதாசிகளின் உயர்வான நிலைக்கு இதுவே சான்று என்கிறார்கள்.
 

தேவதாசிகளில் இரண்டுவகை இருக்கிறார்கள். முதல்வகை பதியிலார் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் யாரையும் கணவனாக ஏற்காமல், இறைவனை மட்டுமே மனதில் நினைத்து வாழ்க்கையை நடத்துவார்கள். இவர்களுக்கு நித்ய சுமங்கலிகள் என்ற பெயரும் உண்டு. இரண்டாவது வகையினர் ருத்ர கன்னிகைகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் இறைவனின் சன்னிதானத்தில் நாட்டியம் ஆடினாலும், தனது மனங்கவர்ந்த கணவன் ஒருவனோடு இல்லறம் நடத்தினார்கள். கணவனோடு வாழ்ந்தாலும், கணவன் இல்லாமல் வாழ்ந்தாலும் இவர்கள் மிகவும் ஒழுக்கமான வாழ்க்கையை நடத்தினார்கள். ஆனால், பிற்காலச் சமூகமே இவர்களை வேறு பாதைக்கு மாற்றியது என்கிறார்கள்.
 

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களையே இப்போது தேவதாசி பரம்பரையினர் என்று இப்போது கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையில்லை. பல்வேறு சாதிகளைச் சேர்ந்த பெண்களும் தேவதாசிகளாக இருந்திருக்கிறார்கள் என்று ஆதாரங்களுடன் சொல்கிறார்கள். ஆதி சமூகத்தில் குடும்பத்தில் மூத்த பெண்ணாக பிறக்கும் குழந்தையை கோவிலுக்கு அர்ப்பணித்துவிடும் பழக்கம் இருந்திருக்கிறது. இந்தப் பழக்கம் அந்தணர், மறவர், வேளாளர் என்று சாதி வித்தியாசம் இல்லாமல் எல்லா மக்களிடத்தும் இருந்ததாக கூறுகிறார்கள். தேவதாசி பரம்பரையினர் எண்ணிக்கை அதிகரித்ததால் தங்களை ஒரு சமுதாயமாக அறிவித்துக் கொண்டதாக கருதலாம்.
 

ஆலயங்களில் தேவதாசிகளின் கடமை புனிதமானதாக கருதப்பட்டது. காலை, மாலை, உச்சிக்கால பூஜைகளில் இறைவன் முன் நாட்டியாஞ்சலி செய்வது இவர்களுடைய பணி. அர்த்தஜாம பூஜைக்குப் பிறகு மூர்த்தியை பள்ளியறைக்கு எடுத்துச் செல்லும்போதும், லாலி ஊஞ்சல், திருத்தாழ் அடைப்பு பாடல்களை பாட வேண்டும். ஒரு ஆலயத்தில் பல தேவதாசிகள் இருந்தால் முறை வைத்து பணி செய்தார்கள். ஆடல், பாடல் தெரியாத தேவதாசிகள் மாலை தொடுத்தல், பூஜை பாத்திரங்கள் சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளை செய்தார்கள்.
 

சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்புவரை பட்டர்களைப் போலவே தேவதாசிகளும் கருவறைவரை சென்று வந்தனர். இதற்கான ஆதாரங்கள், திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலும், திருவாரூர் தியாகராஜர் ஆலயத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. புத்த, சமண துறவிகளின் பள்ளிகளிலும் தேவதாசிகள் பணிபுரிந்துள்ளனர். புத்தரேகூட தனது இறுதிக் காலத்தில் அமிராபாலி என்ற தேவதாசியிடம் மாந்தோப்பு ஒன்றை தானமாகப் பெற்று சங்கம் நிறுவ பயன்படுத்தியதாக யுவான் சுவாங் குறிப்புகளில் உள்ளது.

devadasi true history temples mandapam


 

வரலாற்றில் பல தேவதாசிகளின் பொதுத் தொண்டுகள் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு ஆலயத்தில் பணிபுரியும் தேவதாசி இறந்துவிட்டால் அவளது உடலை ஆலய மூல மூர்த்திக்கு போர்த்தப்படும் புனித ஆடையை போர்த்தியே எடுத்துச் செல்வார்கள். அன்று முழுவதும் ஆலய வழிபாடு நிறுத்தப்படும். மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் முன், ஆலயத்தின் ராஜகோபுரத்தின் முன் சிறிது நேரம் ஊர்வலம் நிறுத்தப்படும். தேவதாசிகள் ஒழுக்கமற்றவர்களாக இருந்திருந்தால் இத்தகைய மரியாதைக்கு அன்றைய சமூகம் ஒப்புக்கொண்டிருக்குமா? ஊர்வலம் சென்று திரும்பும் உற்சவ மூர்த்திக்கு கண் திருஷ்டி கழிக்கும் உரிமை தேவதாசிக்கு வழங்கப்பட்டது. சிலப்பதிகாரத்தில் மாதவியின் நேர்மைத்திறம், அவளுடைய மகள் மணிமேகலையின் துறவறம் போன்றவை சிறப்பு மிகுந்தவை.
 

இவ்வளவு சிறப்பு வாய்ந்த தேவதாசி முறை பின்னர் ஏன் அவமானச் சின்னமானது? தேவதாசி பரம்பரையில் ஒழுக்கக்கேடு திடீரென வந்துவிடவில்லை. ஆதியில் மூத்த மகளை தேவதாசியாக நேர்ந்து விடும் பழக்கம் இருந்தது. ஆனால், பிற்காலத்தில் சற்று வசதி வந்தபிறகு, மூத்த மகளை தேவதாசியாக்க விரும்பாத சிலர் வேறு ஒரு பெண்ணை விலைக்கு வாங்கி தேவதாசியாக நேர்ந்து விடும் பழக்கம் தொடங்கியது. இப்படிப்பட்ட குறுக்குப் புத்திகளுக்கு வளைந்து கொடுக்கிற வகையில் அன்றைக்கும் சட்டமும் சமூக வழக்கமும் மாறிப்போனது. வசதியற்ற பெண்ணை விலைக்கு வாங்கலாம் என்ற நிலை உருவானபிறகு, இறைவன் முன் மட்டுமே நடனமாட வேண்டிய தேவதாசி அரசன் முன்னும் ஆடலாம் என்ற நிலையும் எளிதாக அறிமுகமாகிவிட்டது.
 

ராஜாதிராஜ சோழன் காலத்தில் 1174ல் பணக்கார வணிகர் நான்கு ஏழைப் பெண்களை 700 தங்கக் காசுகளுக்கு வாங்கி திருவாளங்காடு கோவிலுக்கு அர்ப்பணம் செய்ததாக கல்வெட்டு இருக்கிறது. நாளடைவில், அரசர்களும், அவர்களுக்கு கீழான சிற்றரசர்களும், ஜமீன்தார்களும், பண்ணையார்களும் பல தேவதாசிகளை தங்களுடைய ஆசை நாயகிகளாக வைத்துக் கொண்டனர். அதுவே அவர்களுடைய பணச் செருக்கின் அடையாளமாக கருதப்படும் நிலையும் உருவானது.

பக்தியையும், பரதத்தையும், இசையயும் வளர்த்த தேவதாசிகளை தஞ்சை போன்ற நில உடமையாளர் ஆதிக்கம் நிறை பகுதிகளில் பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தினர். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அவமானச் சின்னமாக கருதப்பட்டனர். பணக்கார வீடுகளில் விருந்தினர்களை சந்தோஷப்படுத்தவே பல ஏழைப் பெண்கள் பாலியல் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டனர்.

மனிதர்களின் வக்கிரபுத்தியால், தெய்வீகமாக கருதப்பட்ட தேவதாசிகளின் நிலைமை அவமானகரமான நிலைக்கு தள்ளப்பட்டது. வயதான தேவதாசிகள் பிச்சையெடுத்துப் பிழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

devadasi true history temples mandapam


இப்படிப்பட்ட அவமானகரமான சூழலில் சிக்கிய பெண்களை மீட்கத்தான் மூவலூர் ராமமிர்தம் அம்மையாரும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியும் சட்டபூர்வமாக முயற்சி செய்தனர். தேவதாசி முறையை பூண்டோடு ஒழித்துக்கட்ட சட்டமியற்ற வேண்டும் என்று அவர்கள் போராடினார்கள். அப்போது, சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்த சத்தியமூர்த்தி தேவதாசி முறையை ஒழித்தால் தெய்வக் குற்றமாகிவிடும் என்றார். அவர்கள் சொர்க்கத்திற்கு செல்லும் பாக்கியத்தை இழந்துவிடுவார்கள் என்றார். தெய்வப்பணியில் ஈடுபடுபவர்களே தேவதாசிகள் என்றார்.
 

ஆனால், அவருக்கு பதில் கொடுத்த முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள், இதுவரை ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள் இறைப்பணி ஆற்றினார்கள். இனி, உங்கள் குலத்தை சேர்ந்த பெண்கள் இறைப்பணியாற்ற தேவதாசிகள் ஆகலாமே என்று கேட்டார். இவ்வாறுதான் மனிதர்களின் காம இச்சையால் கொச்சைப்படுத்தப்பட்ட தேவதாசிகளின் எதிர்காலம் மரியாதைமிக்கதாக மாற்றப்பட்டது என்பது வரலாறு.


 

Next Story

1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
1000 year old Mahavira sculpture discovered

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மணவராயனேந்தலில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கி.பி.11ம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருச்சுழி பகுதியில் கள ஆய்வின் போது, மணவராயனேந்தலில் இளையராஜா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 24 ஆம் தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் இருப்பதை அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் சு. ராஜபாண்டி, தொல்லியல் துறை பயிற்சி மாணவர் மீ. சரத் ராம் ஆகியோர் கண்டுபிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு, ஆய்வாளர் நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு கூறியதாவது, ‘விருதுநகர் மாவட்டத்தில் கோவிலாங்குளம், தொப்பலாக்கரை, குறண்டி, இருஞ்சிறை, புல்லூர், பாலவநத்தம், பந்தல்குடி, பாறைக்குளம், திருச்சுழி, புலியூரான், ஆவியூர், இருப்பைக்குடி, குலசேகரநல்லூர், சேத்தூர், சென்னிலைக்குடி, கீழ் இடையன்குளம், கிள்ளுக்குடி உள்ளிட்ட இடங்களில் சமண சமயம் பரவி இருந்ததற்கான தடயங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மணவராயனேந்தலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மகாவீரர் சிற்பம் பாதி மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. கருங்கல்லால் ஆன இச்சிற்பத்தில் மகரத் தண்டுகளுடன் கூடிய சிம்மாசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். அவருக்குப் பின்புறம் பிரபாவளி எனும் ஒளிவட்டம் உள்ளது. அதன் மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்திய விநோதம், சகல பாசனம் ஆகியவற்றைக் குறிக்கும் முக்குடை அமைப்பு உள்ளது. முக்குடை அழகிய கொடிகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மகாவீரரின் இருபுறமும் இரு இயக்கர்கள் உள்ளனர். இதன் காலம் கி.பி.11-ம் நூற்றாண்டாகக் கருதலாம். திருப்புல்லாணியிலிருந்து கமுதி, திருச்சுழி வழியாக மதுரை செல்லும் பெருவழிப் பாதையில் அநேக இடங்களில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன.

சிற்பம் உள்ள இடத்தைச் சுற்றிலும் இரும்புக் காலத்தைச் சேர்ந்த வழுவழுப்பான கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இவ்வூர் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலம் முதல் மக்கள் குடியிருப்பாக இருந்துள்ளதற்கு இவை ஆதாரமாக உள்ளன. பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் இச்சிற்பத்தை அரசு அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்வதாக’ அவர் தெரிவித்தார்.

Next Story

உலகப் பாரம்பரிய வார விழா; தொன்மைப் பொருட்கள் கண்காட்சி

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை தொல்நடைக் குழு, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் இணைந்து நடத்திய உலக பாரம்பரிய வார விழாக் கொண்டாட்டம் 2023 தொன்மைப் பொருட்கள் கண்காட்சி சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் சிவகங்கை தொல்நடைக் குழுவின் தலைவரும் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருமான நா. சுந்தரராஜன்  தலைமை வகித்தார், சிவகங்கை தொல்நடைக் குழு உறுப்பினர் சு. காளீஸ்வரன் வந்தோரை வரவேற்றார். சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா நோக்க உரையாற்றினார். சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தி.பக்கிரிசாமி தொல்நடைக் குழு பெருமைமிகு வழிகாட்டி செ. கண்ணப்பன் முன்னிலை வகித்தனர். சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்ட அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்  (பொறுப்பு) திருமதி ஜெயமணி அவர்கள் கண்காட்சியை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தும் போது, மரபு நீட்சியை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அடுத்த அடுத்த தலைமுறைக்கு பண்பாட்டையும் மரபையும் பாதுகாக்க முடியும் சிவகங்கையில் உலகப் பாரம்பரிய வார விழா கொண்டாடுவதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்தார்.

 

சிவகங்கை மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் சங்கர், சிவகங்கை மகளிர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் முனீஸ்வரன், காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரி மேனாள் முதல்வர் வள்ளி, பள்ளி ஆய்வாளர் இராதா கிருஷ்ணன்,சிவகங்கை தொல்நடைக் குழு உறுப்பினர் வித்தியா கணபதி ஆகியோர் வாழ்த்துரைத்தனர். சிவகங்கை தொல்நடைக்குழு செயலர் இரா.நரசிம்மன் நன்றியுரைத்தார்.

 

இந்த மூன்று அமைப்புகளும் இணைந்து மூன்று ஆண்டுகளாக உலகப் பாரம்பரிய விழாவை கொண்டாடி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கருத்தரங்க நிகழ்வாக நடைபெற்ற உலக பாரம்பரிய வார விழா இந்த ஆண்டு கண்காட்சியாக நடத்தப்பட்டது.

 

இந்த ஆண்டு நடைபெற்ற இக்கண்காட்சியில் 600 க்கு மேற்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சிவகங்கை தொல்நடைக் குழுவினர், அவ்வப்போது மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில் கிடைத்த பொருள்களை காட்சிப்படுத்தியிருந்தனர். இதில் கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவகங்கை சுற்றுப்பகுதியில் கிடைத்த இரும்பு உருக்கு ஆலை எச்சங்கள், மண்ணால் ஆன குழாய்கள், இரும்புக் கழிவுகள் காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் கிடைத்த தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடு,எலும்பு முனைக்கருவி, பானையோட்டுக் குறியீடுகள், சங்க கால செங்கல் மற்றும் மேற்கூரை ஓட்டு எச்சங்கள், வட்டச் சில்லுகள், ராஜராஜ சோழன்  பீஜப்பூர் சுல்தான் நாணயங்கள் உட்பட பழமையான நாணயங்களும் இருந்தது.

 

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக இணைச்செயலர் பீர்முகமது அவர்களது பத்தாண்டு கால சேகரிப்பில் உள்ள கலைநயமிக்க வெண்கலப் பொருள்கள், மரப் பொருள்கள், கத்திகள், வாள்கள், பழமையான செட்டிநாட்டு புழங்கு பொருட்கள், உரல் உலக்கை பழமையான கண்ணாடிப் பொருட்கள், இன்றைய பயன்பாட்டில் இல்லாத பழமையான மின்சாதன பொருட்கள், பலதரப்பட்ட தொலைக்காட்சிகள் பல வகையான வானொலிகள் முதலியவற்றுடன்  மௌண்ட் லிட்ரா பள்ளி மாணவர்கள் கொண்டு வந்து காட்சிப்படுத்திய பனையோலைகள் பழமையான விளக்குகள் மற்றும் மன்னர் பள்ளி மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்ட வளரி, வாள் பழமையான மின்சாதன பொருட்கள், விளக்குகள் ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள் காட்சிப் படுத்தப் பெற்றிருந்தன.

 

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தொல்நடைக் குழு வைச்சேர்ந்த பொருளர் பிரபாகரன், இணைச் செயலர் முத்துக்குமார், சரவணன்,பாலமுருகன், அலெக்ஸ் பாண்டியன், முத்துக் காமாட்சி, மீனாள், மற்றும் மன்னர் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள் பர்வத ரோகிணி, பழனிவேல் முருகன், தனலட்சுமி காந்தி அழகப்பன், வெங்கட கிரி,பிரசாத், மனோகரன் ஆகியோர்  செய்திருந்தனர். சிவகங்கை மன்னர்  கல்வி நிறுவனங்கள்  மற்றும் சிவகங்கை நகரைச் சுற்றியுள்ள பள்ளிகள் என மூவாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தொன்மைப் பொருட்கள் கண்காட்சியை கண்டு களித்தனர்.