Skip to main content

போக்குவரத்து துறையில் மெகா கொள்ளை!- நீதிமன்றம் கடிவாளம்!

Published on 19/12/2020 | Edited on 19/12/2020
ddd


பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் கிரிமினல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக 2018ல் மோடி அரசால் நியமிக்கப்பட்டதுதான் ஓய்வு பெற்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையிலான குழு. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு மத்திய மோட்டார் வாகன சட்டத்திலும் திருத்தம் செய்வது அவசியம் என பரிந்துரைத் திருந்தார் வர்மா.

 

அதன்படி பொது போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்கள் செல்லும் இடங்கள் மற்றும் அதன் இருப்பிடத்தை அறிந்து கொள்ள ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட வேண்டும் என்பது உள்பட சில சட்ட விதிகளை உருவாக்கி அதனை அரசு கெஜட்டிலும் வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். இதில், அரசு வாகனங்கள், இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டன. மத்திய மோட்டார் வாகன சட்டத்திருத்த விதிகளை அமல் படுத்த 2019-ல் உத்தரவிட்டது தமிழக போக்குவரத்துத்துறை. இப்படிப்பட்ட சூழலில், குறிப்பிட்ட நிறுவனங்களிடம்தான் ஜி.பி.எஸ். கருவிகளை வாங்க வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை நிர்பந்திப்பதாகவும், இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும் லாரி உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி உயர்த்தி வருகிறது.

 

இது குறித்து தென்னிந்திய லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகப்பாவிடம் நாம் பேசிய போது, ""’தமிழகத்தில் சுமார் ஏழரை லட்சம் லாரிகள் இருக்கின்றன. இவற்றில் ஜி.பி.எஸ். கருவி, வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் ஸ்டிக்கர் ஆகியவற்றைப் பொருத்துவது குறித்து மத்திய அரசு விதித்துள்ள விதிகளை நாங்கள் ஏற்கிறோம். ஐ.எஸ்.ஐ. தரமுள்ள 49 நிறுவனங்களிடமிருந்து இந்த கருவிகள், ஸ்டிக்கர்களை வாங்கிக் கொள்ளலாம் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அப்படியிருந்தும், குறிப்பிட்ட நிறுவனங்களிடம்தான் வாங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிடுகிறது. அந்த நிறுவனங்களை தவிர்த்து வேறு நிறுவனங்களின் கருவிகளைப் பொறுத்தியிருந்தால் அந்த வாகனங்களை எஃப்.சி. செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த அடக்குமுறை எந்த மாநிலத்திலும் கிடையாது.

 

தமிழக அரசின் இத்தகைய உத்தரவினால் 1,500 ரூபாய்க்கு கிடைக்கும் ஜி.பி.எஸ். கருவி 10,000, 12,000 ரூபாய்க்கு வாங்க வேண்டியதிருக்கிறது. ஒளிரும் ஸ்டிக்கர் 600 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால், 6000 ரூபாய் விலையில் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை வழங்கும் ஸ்டிக்க ரைத்தான் ஒட்ட வேண்டும் என கெடுபிடி காட்டுகிறார்கள். இந்தப் பகல் கொள்ளை தமிழகத்தில் ஓடும் லாரிகளுக்கு மட்டும்தான். ஆனால், ஒரு நாளைக்கு வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வந்து போகும் 20,000 லாரிகளுக்கு இந்த கெடுபிடி இல்லை. இத்தனைக்கும் அவற்றால்தான் நிறைய விபத்துகளும் நடக்கின்றன. இது எந்த வகையில் நியாயம்?

 

ddd

இந்த அநியாயங்களைச் சுட்டிக்காட்டி அதனை ஏற்க முடியாது என கடந்த வருடம் பிப்ரவரியிலேயே அரசுக்கு கடிதம் தந்திருக் கிறோம். தவிர, கோர்ட்டும் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. அப்படியிருந்தும் எதையும் இவர்கள் மதிப்பதில்லை. கருவிகள், ஸ்டிக்கர்கள் பொருத்துவதில் சுமார் 1,500 கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளது தமிழக அரசின் போக்குவரத்துறை. இந்த ஊழலுக்கு துறையின் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் துறையின் உயரதிகாரிகளும்தான் காரணம். இவர்கள் மீது விசாரணை கமிசன் அமைக்க முதல்வர் எடப்பாடி முன்வரவேண்டும்'' என்கிறார் ஆவேசமாக.

 

கூட்டமைப்பின் ஆலோசகர் சுந்தர்ராஜ் நம்மிடம், ""மத்திய அரசின் விதிகளின்படி ஜி.பி.எஸ். கருவி, வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஸ்டிக்கர் ஆகிய மூன்று விசயங்களும் ஏ.ஐ.எஸ். 140 தரத்தில் இருக்க வேண்டும். இந்த தரத்தை சர்டிஃபை பண்ணுகிற நிறுவனமாக ஏ.ஆர்.ஏ.ஐ.(அராய்), வி.ஆர்.டி.ஐ., சி.ஐ.ஆர்.டி., ஐ.சி.ஏ.டி. ஆகியவை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியில் ஒரு ப்ராடெக்ட் ரிலீஸ் ஆகுதுன்னா முதலில் அராய் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம்தான், விதிகளின்படி இந்த ப்ரடெக்ட் தகுதியுள்ளதாகவும் தரமானதாகவும் இருக்கிறது என சான்றிதழ் பெறுவது அவசியம். மத்திய அரசின் இந்த விதிகளைத்தான் மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும்.

ddd

ஏ.ஐ.எஸ். 140 தரமுள்ள கருவிகளை பொருத்த வேண்டும் என்கிற விதியை மத்திய அரசு கொண்டு வந்த தற்கு பிறகு, தமிழக அரசோ குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து தான் குறிப்பிட்ட பொருளை வாங்கிப் பொருத்த வேண்டும் என கட்டளையிடுகிறது. எந்த ஒரு தனிப்பட்ட பொருளையோ, தனிப்பட்ட நிறு வனத்தையோ தமிழக அரசு ப்ரமோட் பண்ணக்கூடாது. அப்படிப் பண்னினால் அது இயற்கை நீதிக்கும் சட்டங்களுக்கும் எதிரானது. ஆனால், அதைத்தான் செய்து வருகிறது தமிழக போக்குவரத்துத்துறை.

 

வேகக்கட்டுப் பாட்டு கருவியை பொறுத்தவரை, வணிக வாகனங்களில் 80 கிலோமீட்டர் வேகத்துக்கு அதிகமாக செல்லக்கூடிய வாகனங்களுக்கு மட்டுமே பொருத்த வேண்டும் என்பது மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறை. ஆனா, தமிழக அரசோ எல்லா வாகனங்களுக்கும்வை என நிர்பந்திக்கிறது. உருவாக்கப்பட்டுள்ள சட்டவிதிகளை தூக்கி குப்பையில் போட்டுட்டு எதேச்சதிகாரமாக கட்டளையிடுவது எந்த வகையில் நியாயம்? மேற்கண்ட 3 விசயங்களிலும் குறிப்பிட்ட டீலரை தமிழக அரசு ப்ரமோட் பண்ணியது. 2,500 விலையில் கிடைக்கக் கூடிய ஜி.பி.எஸ். கருவியை 10,000, 12,000, 15,000 ரூபாய்க்கு வாங்க வேண்டியதிருக்கிறது. இதுல ஒரு கொடுமை என்னன்னா, எந்த டீலரின் கருவியை பொருத்த வேண்டுமென தமிழக அரசு சொல்கிறதோ, அந்த டீலர்கள் எல்லாம் கடந்த 4 மாதத்தில் ஒரு கருவியையும் விற்றவர்கள் கிடையாது. கடந்த 15, 20 ஆண்டுகாலமாக இந்த கருவிகளை விற்பனை செய்து வரும் தகுதியான நிறுவனங்கள் எதுவும் தமிழக அரசு ரெக்கமெண்ட் பண்ணும் பட்டியலில் இல்லை என்பதுதான். ஆக, கருவிகளை பொருத்தும் விசயத்தில் மெகா ஊழல் நடந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான், இதனை எதிர்த்து வருகிற 27-ந்தேதி மாநிலம் தழுவிய ஸ்டிரைக்கை நடத்த தீர்மானித்துள்ளோம்'' என்கிறார்.

 

போக்குவரத்துதுறையில் நடந்துள்ள இந்த மெகா ஊழலை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ""இந்த விசயத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை. குறிப்பிட்ட நிறுவனங்களிடமிருந்துதான் வாங்க வேண்டும் என எந்த உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்கவில்லை'' என்கிறார்.

 

அமைச்சரின் கூற்று குறித்து தமிழக போக்குவரத்துறையில் நாம் விசாரித்தபோது, ""ஜி.பி.எஸ். கருவியை மெர்சிடாஸ், எக்கோகாஸ் இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட், மைக்ரோ ஆட்டோ டெக் பிரைவேட் லிமிடெட், ஏ.பி.எம்.கிங்க்ஸ் ட்ராக் டெக்னாலஜிஸ், லக்ஷிகா இந்தியா ஆட்டோ டெக்னாலஜிஸ், ஆர்.டி.எம். எண்டர்பிரைசஸ், ஜி.ஆர்.எல். இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் , ட்ரான்சைட் சிச்டம் பிரவிவேட் லிமிடெட் ஆகிய 8 கம்பெனிகளிட மிருந்தும், வேகக்கட்டுப்பாட்டு கருவிகளையும் டெடி, எகோகாஸ், க்ரைசல், மைக்ரோ ஆட்டோடெக், ஜி.ஆர்.எல்., சைன் ஆட்டோ சொலுயூசன், மிஜோ, 3ஜிபி, எஸ்.எஸ்.என். டெக்னாலாஜி, ஏரோடிக், கோதாவரி, ரோஸ் மெர்டா, மெர்சிடாஸ் ஆகிய கம்பெனிகளிட மிருந்தும், ஒளிரும் ஸ்டிக்கர்களையும் 3எம் இண்டியா லிமிடெட் கம்பெனியிடமிருந்தும்தான் கருவிகளை வாங்கி பொருத்த வேண்டும் என போக்குவரத்து துறையின் கமிஷனரான கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவஹர் ஐ.ஏ.எஸ். ஆணை பிறப்பித்திருக்கிறார். அமைச்ச ரின் விருப்பம் இல்லாமல் இப்படி ஒரு உத்தரவு போடப்பட்டிருக்காது'' என்கின்றனர்.

 

இந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் ஸ்மார்ட் மொபிலிட்டி அசோசியேஷன் தொடர்ந்த வழக்கில், அரசு தரப்பை கடிந்து கொண்டதுடன், மற்ற நிறுவனங்களுக்கும் அரசு முன் வைக்கும் நிறுவனங்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதை அரசு விளக்க வேண்டும் என சொல்லி, குறிப்பிட்ட நிறுவனங்களின் கருவிகளைப் பொருத்த வேண்டுமென்கிற அரசின் உத்தரவுக்கு தடை விதித்து விசாரணையை ஜனவரி 18-க்கு தள்ளி வைத்துள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

 

எங்கும் ஊழல் ; எதிலும் ஊழல் என்கிற வகையில் போக்குவரத்துத் துறையிலும் அள்ளிச் சுருட்டிக்கொண் டிருக்கிறது எடப்பாடி அரசு!

 

 


 

சார்ந்த செய்திகள்