Skip to main content

"அந்த இரவு வராமல் போய் இருந்தால்..." பணமதிப்பிழப்பும் இந்தியர்களின் மகிழ்ச்சியிழப்பும்!

Published on 08/11/2019 | Edited on 05/03/2020


நவம்பர் 8 ஆம் தேதி மூன்றாண்டுகளுக்கு முன்பு சரியாக மணி இரவு 8.45 இருக்கும். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பிரியாணிக்கு மிகவும் பிரபலமான பாவர்ச்சி என்ற ஹோட்டலில் உணவருந்தி கொண்டிருந்த அந்த தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞருக்கு தெரியவில்லை இன்னும் சில வினாடிகளில் கையறு நிலையில் நாம் நிற்கப் போகிறோம் என்று. உணவருந்திய அவர் 260 ரூபாய் பில்லுக்காக 500 ரூபாய் தாளை கொடுக்கிறார். சில வினாடிகளில் 500 ரூபாய் வேண்டாம் நூறு ரூபாய் தாள் இருந்தால் கொடுங்கள் என்று கல்லாவில் இருந்தவர் அவரிடம் கூறினார். என்ன! இவ்வளவு பெரிய ஹோட்டலில் சில்லரை இல்லையா? நாம பல முறை ஆயிரம் ரூபாயை தாளை கொடுத்தே மீதி சில்லரை வாங்கி இருக்கிறோமே என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே பர்ஸில் பார்வையை செலுத்த, ஒரு சில பத்து ரூபாய் தாள்களும் சில 500 ரூபாய் தாள்களும் மட்டுமே இருந்தது. உடனடியாக என்னிடம் சில்லரை இல்லை பையா! 500 ரூபாய் தாள் மட்டும்தான் இருக்கு என்றான் அவன். செல்லாத நோட்டை வாங்கி நான் என்ற செய்வேன் என்று அவனுக்கு அருகில் இருந்த தொலைக்காட்சி பெட்டியை காட்டுகிறார் அவர். அதிர்ந்துதான் போனான் ஒரு நிமிடம் அவன். கையறு நிலையில் இருந்த அவன் தன்னுடைய நண்பர்களுக்கு போன் செய்து பணத்தை தந்த பிறகே அவர் ஹோட்டலில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

அந்த இளைஞன் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த பணமதிப்பிழப்பு சம்பவம் நடைபெற்று இன்றுடன் மூன்று வருடங்கள் ஆகின்றது. " நாட்டில் கருப்பு பணம் அதிக அதிக அளவில் புழங்குவதாகவும், தீவிரவாதிகள் கைகளில் கணக்கற்ற கருப்பு பணம் இருப்பதால், அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்றும், குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் தாள்களை மாற்றிக்கொள்ளுங்கள் என்றும், அதில் ஏதேனும் சிரமம் 50 நாட்களை கடந்து இருந்தால், என்னை உயிருடன் கொளுத்தி விடுங்கள்" என்றும் பிரதமர் தொலைக்காட்சிகளில் அந்த இரவில் சபதம் எடுத்தார். இன்னும் சில  ஆண்டுகள் கழித்து வரும் இளம் தலைமுறையினர் பிரதமரின் உரையை யூடியூப் இணையதளத்தில் காணலாம். அப்போது அவரே கூட பிரதமராக இருக்கலாம். அல்லது அவர் முன்னாள் பிரதமராக இருக்கலாம். அப்போது அவர் நல்ல முறையில் இருக்கிறார் என்றால் என்ன அர்த்தம், அப்படி என்றால் பிரதமர் 50 நாட்களுக்குள் அந்த பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளாரே, ஆஹா.. என்ன ஒரு வேகமான, விவேகமான பிரதமர் என்று கூட அவர்கள் நினைக்கலாம். ஆனால் இந்தியமக்கள் வன்முறையை வெள்ளைக்காரன் காலத்தில் கூட அதிகம் கையில் எடுக்காத நிலையில், தான் வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒரு பிரதமருக்கு எதிராக அந்த கடுமையான முடிவை எப்படி எடுப்பார்கள் என்று அந்த இளம் தலைமுறையினருக்கு யாராவது சொன்னால் மட்டுமே தெரியும்!

 

df


கிட்டதட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சம்பவத்தின் காரணமாக வங்கிகள் முன்பும், ஏடிஎம் மையங்களின் முன்பும் நின்று உயிரிழந்ததாக கூறப்பட்டது. 2000 ரூபாய் பெறுவதற்கு வங்கிகள் முன்பு ஏழை எளிய மக்கள் மணிக்கணக்கில் காத்து கிடந்தார்கள். சிலர் வரிசையில் தொடர்ச்சியாக பல மணி நேரம் நிற்க முடியாமலும், சிறுநீர் கழிக்க வெளியே சென்று வந்தால் கூட மறுபடியும் அதே வரிசையில் நுழைய விடமாட்டார்களே? என்று பலமணி நேரங்கள் காத்து கிடந்தார்கள். இது ஒருபுறம் என்றால், புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வங்கியில் வெளிவந்த அதே தினத்தில் சேகர் ரெட்டி போன்றோர் வீடுகளில் வங்கிகளில் இருக்கும் நோட்டுக்களை விட அதிகமாக புதிய 2000 ரூபாய் தாள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 10 கோடிக்கும் அதிகமான பணம் அவர் ஒருவரிடம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு எப்படி புதிய ரூபாய் நோட்டுக்கள் வந்தது. யார் கொடுத்தது? தொழிலதிபர்கள் பலர் வீடுகளில் செய்யப்பட்ட சோதனையில் பலபேர் வீடுகளில் இருந்து கோடிக்கணக்கான புதிய ரூபாய் நோட்டுக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட முதல் ஒரு வாரத்தில். ஆனால், ஒரே ஒரு 2000 ஆயிரம் ரூபாய் தாளுக்காக மணிக்கணக்கில் வங்கிகளில் முன் பொதுமக்கள் நின்ற சம்பவங்களும் நம்கண் முன்னால் வந்து போகாமல் இல்லை.

இவ்வளவு பொதுமக்களுக்கு எல்லையில்லா கஷ்டத்தை கொடுத்து செய்யப்பட்ட இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை நிர்வாக ரீதியாக வெற்றிபெற்றதா என்றால் அதுவும் இல்லை என்றுதான் ஆர்பிஐ சொன்ன கணக்கு சொல்கிறது. நவம்பர் 8க்கு பிறகு தடைசெய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 14 லட்சம் கோடி. இதில் 97 சதவீதம் பணம் மீண்டும் வங்கிகளுக்கு திரும்பியுள்ளது என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த கசப்பு மருத்தை மக்களுக்கு அளிக்கிறோம் என்றுகூறிய அரசாங்கத்திடமே 97 சதவீத பணம் திரும்ப வருகிறது என்றால் இந்த திட்டம் வெற்றியா? தோல்வியா? என்று இதற்கு மேலும் ஆராய தேவையில்லை. ஆயிரக்கணக்கான சிறு வணிக நிறுவனங்கள் தங்களின் நிறுவனங்களை இந்த நடவடிக்கையின் காரணமாக முழுவதும் மூடினார்கள். ஏராளமானவர்கள் தங்களின் வேலையை இழந்து வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் சிரமப்பட்டார்கள். புதிய இந்தியா பிறந்தது என்று கொண்டாடியவர்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் கப்சிப் ஆனார்கள். ஆனால் காலம் அனைத்தையும் மறக்கடிக்கும் என்ற சீன பழமொழி மட்டும் மறக்காமல் இந்திய தேர்தல் அரசியலுக்கு பொருந்துகிறது. ஆனால், எக்காரணத்தை கொண்டும் மீண்டும் புதிய இந்தியா பிறந்துவிட கூடாது என்ற ஏக்கம் மட்டும் பலரை தற்போது வரையிலும் வாட்டி வதைக்கிறது!

 

Next Story

2000 ரூபாய் நோட்டு: கள ஆய்வில் நக்கீரன் - வெளியான அதிர்ச்சி தகவல்

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

 Shocking information on the 2000 rupee note issue

 

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவு, ‘நாளை முதல் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என அறிவித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. வங்கி வாசலிலும், ஏ.டி.எம் வாசல்களிலும் கோடிக்கணக்கான மக்கள் நின்றனர். நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். செல்லாது என அறிவிக்கப்பட்ட தாள்களுக்கு மாற்றாக 2 ஆயிரம் ரூபாய் தாள் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

2023 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுகிறது என அறிக்கை வாயிலாக அறிவித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. மே 24ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தினமும் 10 நோட்டுகள் வரை தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதனைக் கேட்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

 

பெட்ரோல் பங்கில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கிக்கொள்ளப்படும் என அறிவித்தது தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம். அதேபோல் போக்குவரத்துக் கழகங்களிலும் பெற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. 2000 ரூபாய் நோட்டுகள் பெற்றுக்கொள்ளப்படும் என அறிவித்தாலும் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை வாங்குவதில்லை என்பதை நமது நேரடி கள ஆய்வு தெரிவித்தது.

 

நாம் சில பெட்ரோல் பங்குக்கு செய்தியாளர் என்கிற அடையாளம் இல்லாமல் சென்று 2000 ரூபாய் தாள் தந்து 500 ரூபாய்க்கு பெட்ரோல் போடச் சொன்னபோது, 2000 ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்க. 500, 1000 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் சில்லறை தரக்கூடாதுன்னு முதலாளி சொல்லியிருக்காரு என்றார். மற்றொரு பங்கில் 2000 வாங்காதிங்கன்னு முதலாளி சொல்லியிருக்காருங்க. அதனால் வாங்கமாட்டேன் என்றார். இப்படியே எல்லா பங்குகளும் கூறினர்.

 

இது பற்றி ஒரு பெட்ரோல் பங்க் ஊழியர் நம்மிடம், “தினமும் 30 பேராவது 2000 ரூபாய் நோட்டு எடுத்துக்கிட்டு வந்து 100 ரூபாய்க்கோ, 200 ரூபாய்க்கோ பெட்ரோல் போடுங்கன்னு சொல்றாங்க. அவங்க பேங்குக்கு போகத் தயங்கிக்கிட்டு இப்படி நோட்டு மாத்த முயற்சிக்கறாங்க. அதனால் தான் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கறதில்லை. 2000 ரூபாய்க்கு பெட்ரோலோ, டீசலோ போட்டால் வங்கிக்கறோம்” என்றார்.

 

இவர்கள் சொல்வதில் கொஞ்சம் மட்டுமே உண்மை. 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தருகிறேன். ஒரு நோட்டுக்கு 100 ரூபாய் கமிஷன் எனச் சொல்லி ஊருக்கு ஊர் பெரும் கும்பலே சுற்றுகிறது. அவர்கள் சிலர் பெட்ரோல் பங்குகளிலும் உள்ளார்கள். 2000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்படுகிறது என்கிற அறிவிப்பு வந்த அன்றைய இரவே தங்கநகை, டைமண்ட், பிளாட்டினம் விற்பனையகமான ஜுவல்லரிகளில் பெரும் அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட்காரர்கள், பைனான்ஸியர்கள், அரசு அதிகாரிகள் குவிந்தார்கள். ஜி.எஸ்.டி பில் இல்லாமல் நகைகளாக வாங்கினார்கள். திருவண்ணாமலையில் நகைக்கடைக்காரர்கள் 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தனியாக கமிஷன் வாங்கினார்கள். அரசியல்வாதிகளிடம் உள்ள பணமெல்லாம் நகைக்கடை, பெட்ரோல் பங்க் வழியாக மாற்றப்படுகின்றன. இதனால் பொதுமக்களிடம் உள்ள 2000 ரூபாய் பணத்தை வாங்க மறுக்கிறார்கள் என்கிறார்கள்.

 

 

Next Story

“2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுதல்; ரிசர்வ் வங்கியின் மீதான நம்பகத்தன்மை கெடுகிறது” - கிருஷ்ணன்

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

 Krishnan interview

 

2000 ரூபாய் நோட்டுகள் வரும் காலத்தில் செல்லாது என்கிற மத்திய அரசின் அறிவிப்பு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

செப்டம்பர் 30 ஆம் தேதிக்குப் பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த காலக்கெடு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். ஆனால், பல இடங்களில் இப்போதே 2000 ரூபாய் நோட்டுகளை யாரும் வாங்குவதில்லை. இந்த நடவடிக்கைக்கு அவர்கள் அளித்திருக்கும் விளக்கம் திருப்தி அளிப்பதாக இல்லை. இந்தப் பணத்தை மாற்றுவதிலும் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றன. மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை தங்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தலாம். 

 

பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மிகப்பெரிய தோல்வி. சாமானிய மக்களின் மீது அரசாங்கம் தொடுத்த தாக்குதல் அது. அப்போது பல சாமானிய மக்கள் உயிரிழக்க நேரிட்டது. கருப்புப் பணத்தை ஒழிக்கிறோம் என்று இவர்கள் சொன்ன அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. அதற்கான எந்த நடவடிக்கையையும் இவர்கள் எடுக்கவே இல்லை. மற்ற விஷயங்கள் அனைத்திற்கும் பல்வேறு விளம்பரங்கள் கொடுப்பவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தங்களுடைய சாதனை என்று கூறி ஒரு விளம்பரம் கொடுக்க முடியுமா? பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரிசர்வ் வங்கிக்கு 30,000 கோடி இழப்பு ஏற்பட்டது என்றனர். இதுபோன்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை இவர்கள் மீண்டும் மீண்டும் செய்வார்களோ என்கிற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

 

நம் நாட்டின் பணத்துக்கு வெளிநாட்டில் மரியாதையே இல்லாமல் போனது பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் தான். ஒரு அரசாங்கம் இப்படி நடந்துகொள்ளக் கூடாது. மெதுவாகச் செய்ய வேண்டிய நடவடிக்கையை இவர்கள் இவ்வளவு விரைவாகச் செய்கின்றனர். இதனால் ரிசர்வ் வங்கியின் மீதான நம்பகத்தன்மையும் கெடுகிறது. அவர்களுடைய நம்பகத்தன்மையை அவர்கள் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.