Skip to main content

டெல்லியுடன் மோதும் முதல்வர் எடப்பாடி! பா.ஜ.க.வுக்குள் ரகசிய வேட்டை!

Published on 12/08/2020 | Edited on 12/08/2020

 

eps

 

தமிழக பா.ஜ.க. தலைவராக முருகன் நியமிக்கப்பட்டதை அடுத்து கட்சியின் மாநில நிர்வாகிகள், அணித்தலைவர்கள் என பல்வேறு பதவிகளுக்கு நியமனம் நடந்தன. இந்த நியமனங்களில், அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்பட மாற்று கட்சிகளிலிருந்து பா.ஜ.க.வுக்குத் தாவிய முக்கியஸ்தர்கள் பலருக்கும் முக்கியத்துவம் தரப்படவில்லை. அவர்கள் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்காதததும், பொறுப்புகளே சிலருக்கு கொடுக்கப்படாததும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. இதில் பழைய அ.தி.மு.க.வினரை தாய்க்கழகமான அ.தி.மு.க.வுக்குள் கொண்டு வரும் அசைன்மெண்ட்டுகளை அமைச்சர்களுக்கு தந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

 

அப்போது, "அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருக்கும் நிலையில், பா.ஜ.க.வில் உள்ள முன்னாள் அ.தி.மு.க.வினரை நாம் இழுப்பது டெல்லிக்கு கோபத்தை வரவழைக்காதா?'' என அமைச்சர் கே.சி.வீரமணி, எடப்பாடியிடம் கேட்க, "கூட்டணி உறவு ஆரோக்கியமாக இல்லை. நமக்கு எதிரானவைகளை அவர்கள் (டெல்லி) எடுக்கின்றனர். இனி அவர்களுக்கும் நமக்கும் மத்திய-மாநில அரசு என்கிற அளவில் மட்டுமே உறவு. அதனால், நமக்கான அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டும்'' என்றிருக்கிறார் எடப்பாடி.

 

பா.ஜ.க.வில் இணைந்திருந்த ஆற்காடு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன் எதிர்பார்த்தது தமிழக பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் பதவி. ஒதுக்கப்பட்டது, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி. ஏகத்துக்கும் அதிருப்தியடைந்திருந்தார் சீனிவாசன்.

 

உளவுத்துறை மூலம் இதனையறிந்த எடப்பாடி, அமைச்சர் வீரமணியிடம் அதனை விவரிக்க, உடனே சீனிவாசனிடம் பேசினார் வீரமணி. இவர் எடுத்த முயற்சியில், பா.ஜ.க.விலிருந்து விலகி எடப்பாடி முன்னிலையில் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்துகொண்டார் சீனிவாசன். இதனைப் பரபரப்பான செய்தியாக மாற்றியது அ.தி.மு.க. இதனை ஜீரணிக்க முடியாமல் டெல்லி தலைமைக்கு எடப்பாடிக்கு எதிராக போட்டுக் கொடுத்துள்ளார் தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன்.

 

bjp

 

அதேபோல, பா.ஜ.க. தமிழக தலைவர் பதவியை எதிர்பார்த்து பல்வேறு காய்களை நகர்த்திய அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரான நயினார் நாகேந்திரனும் எதிர்பார்த்தது கிடைக்காததால் அதிருப்தியடைந்திருந்தார். தி.மு.க.வுக்குள் நயினாரை இழுக்க மு.க.ஸ்டாலின் முயற்சிப்பதை அறிந்து, நெல்லைக்கு பறந்த பா.ஜ.க. தலைவர் முருகன், நயினாரைச் சந்தித்து சமாதானம் பேசியிருக்கிறார். நயினாரோ, பிடிகொடுக்கவில்லை. இந்த நிலையில்தான் முன்னாள் கனிமவளத்துறை அமைச்சர் நயினாரை இழுக்கும் அசைன்மெண்ட்டை இந்நாள் கனிமவள அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைத்தார் எடப்பாடி.

 

admk

 

இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள், "நயினாரிடம் பேசிய சண்முகம், பா.ஜ.க. மீது உங்களுக்குள்ள கோபம் நியாயமானதுதான். அதற்காக, தி.மு.க.வை கையிலெடுத்து விடாதீர்கள். அது உங்களின் அரசியலுக்கு நல்லதல்ல. மீண்டும் தாய்க்கழகத்திற்கு வருவதுதான் சரியான முடிவாக இருக்கும் என அழுத்தம் கொடுத்துப் பேசியிருக்கிறார். நயினாரும் இதனைத் தட்டிக்கழிக்காமல், கொஞ்சம் டைம் கொடுங்கள்'' எனத் தெரிவித்துள்ளார். அதனால் நயினாரும் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பு உண்டு. மதுரை மற்றும் நெல்லைக்கு இந்த வாரம் செல்லும் எடப்பாடியின் பயணத்தில் நயினாரைச் சந்திக்க வைக்கும் முயற்சியும் எடுக்கப்பட்டிருக்கிறது''’என்கிறார்கள்.

 

நயினார் நாகேந்திரனுக்கு எடப்பாடி வலை வீசுவதையும் பா.ஜ.க. தலைவர் முருகனால் ஜீரணிக்க முடியவில்லை. இதனையும் டெல்லிக்கு பாஸ் செய்திருக்கிறார் முருகன். இது குறித்து பா.ஜ.க. தலைவர்கள் தரப்பில் விசாரித்த போது, ’’புதிய தலைவரான முருகன் மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களுக்கான முக்கியத்துவத்தைத் தருவதில்லை. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அவர் முக்கியத்துவம் தருகிறார். நிர்வாகிகள் நியமனத்திலேயே இதனைக் கவனிக்க முடியும். இதனால் கட்சிக்குள் அதிருப்திகள் அதிகரித்து வருகிறது. இதனையறிந்து, பா.ஜ.க.வை பலகீனப்படுத்த அ.தி.மு.க.-தி.மு.க. தலைமைகள் அரசியல் செய்கின்றன. இதனை டெல்லியிடம் சொல்லியுள்ள முருகன், பா.ஜ.க.வுக்குள் எடப்பாடி ஊடுருவுவதாகப் போட்டுக் கொடுத்துள்ளார். இதனால் எடப்பாடிமீது ஏக கடுப்பில் இருக்கிறது எங்களது (பா.ஜ.க.) தேசியத் தலைமை!'' எனச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

 

CNC

 

பா.ஜ.க.வுக்குள் எடப்பாடி ஊடுருவுகிறாரா? என அ.தி.மு.க.வின் மேலிட தொடர்பாளர்களிடம் விசாரித்தபோது, "மத்திய அரசின் முடிவுகளுக்கு எடப்பாடி அரசு ஆதரவாக இருக்க வேண்டுமென்பதற்காக மட்டுமே அ.தி.மு.க.வை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது பா.ஜ.க. தலைமை. மற்றபடி, அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவு சரியில்லை. அதனால், டெல்லியுடன் மோதும் முடிவில் இருக்கிறார் எடப்பாடி. அ.தி.மு.க. அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், மா.செ.க்களின் எண்ணங்களும்கூட இதுவாகத் தான் இருக்கிறது. அ.தி.மு.க.வினர் மட்டுமல்ல; மாற்று கட்சிகளிலிருந்து பா.ஜ.க.வுக்கு சென்று தற்போது அதிருப்தியில் இருக்கும் அனைவரையும் அ.தி.மு.க.வுக்குள் கொண்டுவர வேண்டும் என்கிற திட்டத்தோடு ரகசிய வேட்டையைத் துவக்கியுள்ளார் எடப்பாடி. அ.தி.மு.க.வுக்கு எதிராக பா.ஜ.க. தலைமை இயங்கும் நிலையில், அவர்களுடன் மோதுவது என்கிற முடிவை எடுத்ததனால் தான் பா.ஜ.க.வுக்குள் ஊடுருவுகிறார் எடப்பாடி'' என்கிறார்கள் மிக உறுதியாக.


 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.