Skip to main content

வைரஸும், வெட்டுக்கிளியும்... மனித பிழைகளுக்கான மறக்கமுடியா தண்டனை!!!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

deforestation effect on corona and locust

 

இன்றைய தேதியில் இந்தியர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் மற்றும் அச்சத்தை ஏற்படுத்திய இரண்டு விஷயங்களில் ஒன்று கரோனா வைரஸ் மற்றொன்று வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. ஒருபுறம் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் மற்றொருபுறம் கையில் அகப்படாத பூச்சிக்கூட்டம். இந்த இரண்டு சின்ன விஷயங்களையும் கண்டு இன்று இந்தியத் தேசமே உறைந்துபோயுள்ளது எனலாம். ஏழாம் அறிவு, காப்பான் என சூர்யாவை வைத்து மீம்கள் சிரிக்கவைத்துக் கொண்டிருந்தாலும், மறுபுறம் இவை இரண்டாலும் நாம் சந்தித்துக்கொண்டிருக்கிற, சந்திக்கப்போகிற விளைவுகள் மீம்கள் அளவுக்கு லேசானதாக இருக்காது என்பதே நிதர்சனம். இவை இரண்டும் இயற்கையான அழிவு சார்ந்த நிகழ்வுகளாகப் பார்க்கப்பட்டாலும், இது மனித இனம் மனசாட்சியைத் துறந்து நீண்ட காலமாகச் செய்துவந்த பிழைகளுக்குக் கிடைத்த தண்டனை எனவே கூறுகின்றனர் துறைசார் வல்லுநர்கள்.
 


"எதிர்காலத்திலும் உலக நாடுகள் ஏதும் பாதுகாப்பாக இருக்காது, கரோனா வைரஸ் என்பது வெறும் ஒரு பனிப்பாறையின் நுனி மட்டுமே, இதேபோல பல வைரஸ்கள் எதிர்காலத்தில் வரும்" என்கிறார் ஆராய்ச்சியாளர் ஷி ஜெங்லி. சார்ஸ், கரோனா எனப் பல வைரஸ்களை ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டறிந்து அவை குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் இவர், கடந்த ஆண்டு கரோனா குறித்த தகவலை வெளியிட்டதற்காகச் சீன அரசால் மிரட்டப்பட்டவர் ஆவார். தற்போதுவரை இயற்கையாக உருவானதாகக் கூறப்பட்டு வரும் இந்த வைரஸும், இயற்கை படைப்பான வெட்டுக்கிளிகளின் உணவு தேடும் பயணமும் எவ்வாறு மனித பிழைகளுக்கான தண்டனையாகும் என நமக்குள் கேள்வி எழலாம். ஆனால் அதற்கான பதிலை நாம் புரிந்துகொள்ளும்போது ஷி ஜெங்லியின் எச்சரிக்கைக்குப் பின்னால் இருக்கும் தொலைநோக்கு பார்வையை நம்மால் உணர முடியும். 
 

deforestation effect on corona and locust

 

ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களால் இந்த இருபெரும் பாதிப்புகளுக்கான முக்கிய காரணமாக முன்வைக்கப்படுவது இயற்கை அழிப்பு. அதாவது வனப்பகுதிகளை அதிகளவில் அழித்தல். வன அழிப்புக்கு வைரஸ் பரவலுக்கு என்ன சம்பந்தம் என நாம் சந்தேகிக்கலாம். ஆனால் வன அழிப்பு என்பது வெறும் மரங்களை அழித்தல் என்பதனை கடந்து பல ஆயிரக்கணக்கான உயிரினங்களின் இருப்பிடத்தை அழிப்பதாகும். இப்படி வன அழிப்பின் காரணமாக ஏற்படுத்தப்படும் உயிரின இடப்பெயர்வுகள், ஆபத்தை விளைவிக்கும் வைரஸ் தாங்கிகளான சில விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான எதிர்ப்படுதலை அதிகரிக்கிறது.

எலி, முயல், வௌவால், பன்றிகள் உள்ளிட்டவை வன அழிப்பின் காரணமாக மனித வசிப்பிட பகுதிகளை நெருங்கும் போது நோய்த்தொற்றுக்கான எளிய பாதையாக மாறிவிடுகிறது இது. தினமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி உலகம் முழுவதும் மனிதர்களால் அழிக்கப்படுகிறது. இந்த அழிப்பு விலங்குகளை மாற்று இருப்பிடம் தேட வைப்பதோடு, மனிதர்களுக்கு நோய் உண்டாக்கும் கிருமிகளையும் பரப்புவதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மேலும், வருங்காலத்தில் வன அழிப்பு தொடரும்பட்சத்தில், மனித மற்றும் விலங்குகளின் எதிர்ப்படுதல் எண்ணிக்கை அதிகரித்து, பல புதிய நோய்களும் உருவாகும் வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கின்றனர் ஷி ஜெங்லி போன்றோர். 
 


வைரஸ் மட்டுமல்ல வெட்டுக்கிளிகள் படையெடுப்பும் கூட இப்படிப்பட்ட மனித தவறுகளாலேயே தற்போது நடக்கத் தொடங்கியுள்ளது. ஆம், வன அழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஏற்பட்ட ஒரு எதிர்பாரா மழையே, இந்தியாவில் 27 ஆண்டுக்காலத்தில் இல்லாத அளவு வெட்டுக்கிளி படையெடுப்பை அதிகரித்துள்ளது என்கின்றனர் வல்லுநர்கள். அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடிய பாலைவன வெட்டுக்கிளிகளான இவை ஆப்பிரிக்கத் தேசங்களில் பயணத்தைத் தொடங்கி தற்போது இந்தியா வரை வந்துள்ளன. 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மேற்கு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நீர் வெப்பம் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரேபியத் தீபகற்பத்தில் பலத்த மழையைத் தூண்டியதாகக் கூறும் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கோல், அதுவே இந்த வெட்டுக்கிளி படையெடுப்பிற்கான காரணமும் என்கிறார். .

 

deforestation effect on corona and locust

 

ராக்ஸி மேத்யூவின் கருத்துப்படி, இந்த வெப்ப நீர் என்பது இந்தியப் பெருங்கடலின் இருமுனை நிகழ்வால் ஏற்படும் விளைவு ஆகும். அதாவது, பெருங்கடலின் மேற்கில் வழக்கத்தை விட நீரின் வெப்பநிலை அதிகமாகவும் கிழக்கில் வெப்பநிலை குறைவாகவும் மாற்றம் அடைகின்றது. புவி வெப்பமடைதல் காரணமாக அதிகரித்து வரும் இந்த இருமுனை நிகழ்வு மேற்கு இந்தியப் பெருங்கடலை அதிகமாக வெப்பமாக்கியது. இந்த வெப்பமாற்றம் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரேபியத் தீபகற்பத்தில் வழக்கத்தைவிடப் பலத்த மழையை ஏற்படுத்தியது. இந்தத் திடீர் மழையால் தூண்டப்பட்ட தாவரங்களின் வளர்ச்சி பாலைவன வெட்டுக்கிளிகளுக்கு நல்ல உணவையும், இனப்பெருக்க களத்தையும் அமைத்துக்கொடுத்தது. இதனால் திடீர் பெருக்கமடைந்த வெட்டுக்கிளிகள்தான் தற்போது ஆப்பிரிக்காவில் ஆரம்பித்து இந்தியா வரை படையெடுத்து விவசாயத்தையும், உணவுப் பொருள் உற்பத்தியையும் பாதிப்படையச் செய்யும் சூழலை உருவாக்கியுள்ளது. 
 

http://onelink.to/nknapp


இவற்றின் மூலம், இந்தியாவின் தற்போதைய மிகமுக்கியமான இரு பிரச்சனைகளுக்கும் ஆதி ஒன்றே எனக் கணிக்கமுடிகிறது. அவை, வனஅழிப்பு மற்றும் இயற்கை மாசுபாடு. தொழிற்புரட்சிக்குப் பின்னரான தசாப்தங்களில் இயந்திரங்கள் மீதான அக்கறையும் பராமரிப்பும் இயற்கை மீது இல்லாமல் போனதே இவ்வாறான அழிவுகளின் ஆரம்பப் புள்ளியாக வரையறுக்கப்படுகிறது. இரு சிறிய உயிரினங்கள் இன்று இவ்வுலகிற்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பு எதிர்காலத்தில் தொடராமல் இருக்க வேண்டுமானால் இயற்கையைக் காப்பதே அதற்கான ஒரே வழி என்பது நிதர்சனம்.  

 

 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.